தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

எழுத்துப் பிறப்பில் தொல்காப்பியமும் நன்னூலும்

 • 1.3 எழுத்துப் பிறப்பில் தொல்காப்பியமும் நன்னூலும்

  எழுத்தொலிகளின் பிறப்புப் பற்றித் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவித்த கருத்துகளை அறிந்து கொண்டீர்கள். அவற்றைத் தனித்தனியே பார்த்தபோது அவ்விரு நூல்கள் தெரிவித்த கருத்துகளுக்கு இடையில் சில ஒற்றுமைகளும் சில வேற்றுமைகளும் இருப்பதைக் கண்டிருப்பீர்கள். இப்போது, அந்த ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் தொகுத்துக் காண்போம். இவ்வாறு ஒப்பிட்டுக் காண்பது, நாம், இக் கருத்துகளை மேலும் தெளிவாகப் புரிந்து கொள்ளத் துணை செய்யும்.

  1.3.1 ஒற்றுமை

  (1)
  இரண்டு இலக்கண நூலாசிரியர்களும் ஓர் எழுத்துப் பிறப்பதற்கு உந்தியில் (கொப்பூழ்) இருந்து காற்றுத் தோன்றி மேலே எழும்ப வேண்டும் என்கின்றனர்.
  (2)
  எழுத்துகள் பிறப்பதற்கு ஒத்துழைக்கும் உறுப்புகளில் ஒன்று மற்றொன்றோடு இயைந்து இயங்கும் தன்மைக்கேற்ப வேறு வேறு ஒலிகள் பிறக்கின்றன என்று இருவரும் உரைக்கின்றனர்.
  (3)
  இரு நூலாரும், அடிப்படையில் எழுத்துஒலிகள் பிறப்பதற்கு அடிப்படையான உறுப்புகளாகக் குறிப்பிடும் உறுப்புகளின் மொத்த எண்ணிக்கை எட்டு ஆகும்.

  1.3.2 வேற்றுமை

  (1)

  தொல்காப்பியர் காற்று மேலே எழும்பித் தங்கும் இடங்களாக மூன்று உறுப்புகளை மட்டுமே குறிப்பிடுகின்றார். அவை முறையே தலை, கழுத்து, நெஞ்சு என்பன.

  நன்னூலார் காற்று மேலே எழுந்து தங்கும் இடங்களாக நான்கு உறுப்புகளைச் சுட்டுகிறார். அவை முறையே, நெஞ்சு, கழுத்து, உச்சி, மூக்கு என்பன.

  (2)

  உறுப்புகளைக் குறிப்பிடுகையில் தொல்காப்பியர் மேலே இருந்து கீழே இறங்கி வருவது போல் தலை, கழுத்து, நெஞ்சு என்று குறிப்பிடுகின்றார்.

  நன்னூலார் காற்று கீழிருந்து மேலே எழும்பும் அதே இயல்பான நிலையில் மார்பு, கழுத்து, உச்சி, மூக்கு என்ற வரிசையில் அமைத்துள்ளார்.

  (3)

  எழுத்தொலிகள் பிறக்கப் பயன்படும் உறுப்புகளைத் தொல்காப்பியர் எட்டு என்று விரித்துள்ளார். காற்றுத் தங்கும் இடங்களான மூன்றையும் சேர்த்துக் குறிப்பிடுகின்றார்.

  நன்னூலார், இந்த உறுப்புக்களில் இதழ், நாக்கு, பல், அண்ணம் என்ற நான்கு உறுப்புகளை மட்டுமே எழுத்துப் பிறப்பதற்கு இயங்கும் உறுப்புகளாகக் குறிப்பிடுகின்றார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:47:02(இந்திய நேரம்)