தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

 • 5.3 தொகுப்புரை

  இதுகாறும் நன்னூலார் உருபு புணரியலில் எல்லாம், எல்லாரும், எல்லீரும் என்பன போன்ற சில பெயர்ச்சொற்கள் வேற்றுமை உருபுகளோடு புணரும் முறைமை பற்றியும், இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சிகளுக்கான சிறப்புவிதி பற்றியும் கூறியனவற்றை விரிவாகவும், விளக்கமாகவும் பார்த்தோம். அவற்றை ஈண்டுச் சுருக்கமாகத் தொகுத்துக் காண்போம்.

  வேற்றுமை உருபுகளை ஏற்கும்போது எல்லாம் என்ற பொதுப்பெயர் அஃறிணைப் பொருளை உணர்த்த அற்றுச் சாரியையும், உயர்திணைப் பொருளை உணர்த்த நம் சாரியையும் பெறும்; எல்லாரும் என்ற பெயர் தம் சாரியை பெறும்; எல்லீரும் என்ற பெயர் நும் சாரியை பெறும்.

  தான், தாம், நாம், யான், யாம், நீ, நீர் என்னும் மூவிடப் பெயர்கள் வேற்றுமை உருபு ஏற்கும்போது தமது நெடுமுதல் குறுகும்.

  ஆ, மா, கோ என்னும் ஓர் எழுத்துப் பெயர்கள் வேற்றுமை உருபுகளை ஏற்கும்போது னகரச் சாரியை பெறும்; பெறாமல் வருவதும் உண்டு.

  வேற்றுமை உருபுகளோடு புணரும்போது, அவ், இவ், உவ் என்னும் சுட்டுப்பெயர்கள் அற்றுச் சாரியை பெறும்; அஃது, இஃது, உஃது என்னும் சுட்டுப்பெயர்கள் அன் சாரியை பெறும்.

  அகர ஈற்றுப் பெயர்களின் முன் அத்துச் சாரியை வந்து புணரும்போது, அதன் முதலில் உள்ள அகர உயிர் கெடும்.

  உயிர் ஈற்றுப் புணரியல், மெய் ஈற்றுப் புணரியல் ஆகிய இயல்களில் கூறப்பட்ட பொதுவிதிகள் சிலவற்றினின்று இரண்டாம் வேற்றுமையும் மூன்றாம் வேற்றுமையும் மாறுபட்டு அமைந்துள்ளன. இவற்றை எல்லாம் இப்பாடத்தின் வாயிலாகப் பார்த்தோம்.

  தன் மதிப்பீடு : வினாக்கள் - II

  1.
  பொதுவிதிப்படி இயல்பாக வரவேண்டிய இடத்தில் இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சி எவ்வாறு வரும்?
  2.
  நின் + பகை , நின் + புறங்காப்ப – இவை எவ்வாறு சேர்ந்து வரும்?
  3.
  பொதுவிதிப்படி விகாரப்பட்டு வர வேண்டிய இடத்தில் இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சி எவ்வாறு வரும்?
  4.
  மண் + கொணர்ந்தான், பொன் + கொடுத்தான் – சேர்த்து எழுதுக.
  5.
  நம்பி என்ற உயர்திணைப் பெயர் வல்லினத்தை முதலாகக் கொண்ட சொற்களோடு புணரும்போது, வேற்றுமை உருபு எவ்வாறு வரும்?
  6.
  மகற்பெற்றான் – இதில் தொக்கு வந்துள்ள வேற்றுமை உருபு யாது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-10-2017 10:23:45(இந்திய நேரம்)