தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முன்-1.7 பண்பாட்டு மாற்றங்கள்

  • 1.7 பண்பாட்டு மாற்றங்கள்

    /courses/degree/c031/c0311/html/c03110ad.gif (1294 bytes)

    அறிவியல் கண்டுபிடிப்புகளால், இன்று உலகம் ஒரு சிறு கிராமமாகச் (Global Village) சுருங்கி விட்டது. இதனால், நாடுகள் இடையேயும், மக்கள் இடையேயும் இடைவெளி குறைந்து விட்டது. தொடர்புகள் மிகுந்துள்ளன. இவற்றால், மனிதச் சிந்தனைகளிலும், பழக்க வழக்கங்களிலும், நம்பிக்கைகளிலும், சடங்குகளிலும், வாழ்க்கை முறைகளிலும் சமுதாய அமைப்புகளிலும், பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இவை, கருத்துப் பரிமாற்றம், பண்டப் பரிமாற்றம் ஆகியவற்றோடு, பண்பாட்டுக் கூறுகளிடையேயும் பரிமாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன. இதனால், நீண்ட நெடுங்காலமாகத் தனித்தன்மை சிதையாதவாறு பாதுகாக்கப்பட்டு வந்த பண்பாடுகளிடையே கூட பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

    புதிய கண்டுபிடிப்புகள், தொழில் புரட்சியை ஏற்படுத்தின. இதனால், தொழில் நிறுவனங்களில், பல பண்பாட்டுப் பிரிவினர் கலந்து பணியாற்றும் புதிய சூழல்கள் ஏற்பட்டன.

    இப்புதிய சூழல் மொழிக்கலப்பு, பண்பாட்டுக் கலப்பு, நம்பிக்கைகள், சிந்தனைகள் ஆகியவற்றில் மாற்றம் போன்றவற்றை ஏற்படுத்தின. இம்மாற்றங்கள், பண்பாடுகளின் இடையேயும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.

    முன்னேறாத நாடுகளில் (Underdeveloped) இருந்தும், முன்னேறிக் கொண்டிருக்கும் (Developing) நாடுகளிலிருந்தும், முன்னேறிய (Developed) நாடுகளுக்கு வணிகம், அலுவலகப் பணி போன்றவற்றிற்குச் செல்வோர், அந்த நாடுகளின் பண்பாட்டுக் கூறுகளை ஏற்றுக் கொண்டு வாழ்கின்றனர். அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழுகின்ற பிறநாட்டவர், அமெரிக்கர்களின் வாழ்க்கை முறைகள் பலவற்றை ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

    1.7.1 புதிய சூழலும் தமிழர் பண்பாடும்

    அறிவியல் வளர்ச்சியால் ஏற்பட்ட புதிய சூழலில், நவீன கருவிகள் கொண்டு மேற்கொள்ளும் செயல்களில் தமிழர்களிடையே பல மரபுவழி பண்பாட்டுக் கூறுகள் மறைந்துவிட்டன.

    அந்நியர் படையெடுப்புகளாலும், அந்நிய ஆதிக்கத்தினாலும் அவற்றின் வாயிலான குடிபெயர்ப்புகளினாலும், புறப் பண்பாட்டுத் தாக்கம் அமைந்தது. அதனாலும், தமிழர்களிடையே பண்பாட்டு நெகிழ்ச்சியும் மாற்றமும் ஏற்பட்டன.

  • படையெடுப்பு
  • இசுலாமியர் படையெடுப்பு, நாயக்கர் படையெடுப்பு, டச்சுக்காரர், போர்த்துகீசியர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் போன்ற அந்நியர்களின் ஆக்கிரமிப்புகளினாலும் ஆட்சியினாலும், அரசியலில் மட்டும் அல்ல, சமுதாயத்திலும் பல மாறுதல்கள் ஏற்பட்டன. அதனால், தமிழர்களின் பண்பாட்டில் பல மாறுதல்கள் தோன்றின. ஆடை அணிதல், ஒப்பனை செய்தல், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், சமயக்கோட்பாடுகள் முதலியவற்றில் பல மாறுதல்கள் தோன்றியுள்ளன.

  • வணிகம்
  • திரைகடல் ஓடியும் திரவியம் தேடுஎன்பது தமிழர்களின் முதுமொழி. வணிகத்தின் பொருட்டு பல நாடுகளுடன் தமிழர்கள் தொடர்பு கொண்டு இருந்தனர். அவற்றால் பண்டமாற்றம் ஏற்பட்டதைப் போல், பண்பாட்டு மாற்றங்களும் நிகழ்ந்தன. வணிகத்தின் பொருட்டு வேற்று நாடுகளில் பலர் குடியேறினர். அவர்கள், தங்கள் பண்பாட்டை எடுத்துச் சென்றாலும், சூழலுக்கு ஏற்ப அங்குள்ள சில பண்பாட்டுக் கூறுகளை ஏற்றுக் கொண்டனர்.

  • புலம் பெயர்தல்
  • டச்சு, போர்த்துகீசு, இங்கிலாந்து போன்ற ஆதிக்கச் சக்திகளால் ஏற்பட்ட குடியிருப்பு நாடுகளில், குடியேறிப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களும் சென்றடைந்த நாடுகளின் பண்பாட்டுச் செல்வாக்காலும், பண்பாட்டு ஆதிக்கத்தாலும் தம் பண்பாட்டில் பல மாற்றங்களை ஏற்றுக் கொண்டனர்.

    எடுத்துக்காட்டாக, பல நாடுகளில் பல பகுதிகளில், தொன்மைக் காலத்திலும் அண்மைக் காலத்திலும் சென்று வாழ்ந்து வருகின்ற தமிழர்களில் பலர் பழைய பண்பாட்டுக் கூறுகளைத் தொடர்ந்து பாதுகாத்து வருகின்றனர். சிலர் தம் பண்பாட்டுக் கூறுகளைப் பிற பண்பாடுகளுக்கு ஏற்ப மாற்றி அமைத்துள்ளனர். சிலர் பெரும்பான்மையான பண்பாட்டுக் கூறுகளை விட்டுவிட்டு, ஒரு சிலவற்றை மட்டும், அடையாளங்களுக்காகப் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

    மொரீசியஸ், தென் ஆப்பிரிக்கா, ரீயூனியன் போன்ற நாடுகளில் வாழ்பவர்கள், தமிழ்ப் பெயர்களையும், தமிழ் வழிபாட்டு முறைகளையும் பின்பற்றி வந்தாலும், தமிழ் மொழியை மறந்து விட்டனர். அதைப்போல், பல பண்பாட்டுக் கூறுகளையும் இழந்து விட்டனர்.

    இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழ்பவர்கள், ஒரு சில பண்பாட்டுக் கூறுகளைத் தவிர பிற எல்லா பண்பாட்டுக் கூறுகளையும் தாயகத்தில் உள்ளவர்களைப் போல், பேணிப் பாதுகாத்து வருகின்றனர்.

    1.7.2 குடியேற்றமும் (Colonization) ஆக்கிரமிப்பும் (Invasion)

    குடியிருப்பு நாடுகளிலும், அரசியல் ஆக்கிரமிப்பு நாடுகளிலும் பண்பாட்டு மாற்றங்கள் நிகழ்கின்றன. இத்தகைய சூழல்களில் வாழ்வோர் செல்வாக்குடன் இருக்கும் பண்பாட்டுக் கூறுகளை அல்லது பெரும்பான்மையோர் பின்பற்றுகின்ற பண்பாட்டுக் கூறுகளை ஏற்றுக் கொண்டு, தமது பண்பாட்டுக் கூறுகளை விட்டு விடுகின்றனர். இவ்வாறு கலந்து வாழ்கின்ற பொழுது, தங்கள் பண்பாட்டின் தனித் தன்மையையும் இழந்து விடுகின்றனர்.

  • கடன் வாங்குதல்
  • பிற பண்பாட்டுடன் தொடர்பு கொள்ளும் பொழுது, பண்பாட்டு நெகிழ்ச்சியும் மாற்றமும் நிகழ்கின்றன. இத்தகைய சூழல்களில், பிற பண்பாட்டுக் கூறுகளைக் கடன் வாங்க நேர்கிறது. இவை, சில நேரங்களில், பிற பண்பாட்டுடன் நேரடியான தொடர்பு இல்லாவிட்டாலும், தொடர்புடைய பிறர்வாயிலாகவும் நிகழ்கின்றன.

  • பின்பற்றல்
  • பிற நாடுகளில், பணியின் காரணமாகவோ, வணிகத்தின் பொருட்டோ, கல்வி கற்கவோ சென்று விட்டுத் தாயகம் திரும்பிய பலர், தான் சென்று வந்த நாட்டின் பண்பாட்டுக் கூறுகள் சிலவற்றைப் பின்பற்றுகின்றனர்.

    இதைப்பார்த்து, அவற்றில் தனக்குப் பிடித்த, தான் பின்பற்றுவதற்கு ஏற்ற சில பண்பாட்டுக் கூறுகளையும் ஏற்றுக் கொள்கின்றனர். இத்தகைய செயல்களும் பண்பாட்டு மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

    இவை, பெரும்பாலும், ஆடை அணிதல், பழக்க வழக்கங்கள், கருவிகளைப் பயன்படுத்தல், ஒப்பனை செய்து கொள்ளுதல் போன்ற பண்பாட்டுக் கூறுகளில் மாற்றங்கள் நிகழச் செய்கின்றன.

    1.7.3 சூழலும் வளர்ச்சியும்

    இவற்றைத் தவிர, ஒரே சமுதாயத்தில், அல்லது ஒரே இனத்தில், காலச் சூழலின் மாற்றத்தினாலும், கல்வி வளர்ச்சியினாலும், பண்பாட்டிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

    எடுத்துக்காட்டாகப் பெண்கள் கல்வி கற்றல், பணிக்குச் செல்லுதல், கணவன் இறந்த பின்னரும் பூச்சூடிக் கொள்ளுதல், பொட்டு வைத்தல், வண்ணப் புடவைகளை அணிதல், சமத்துவம் போன்ற பலவகை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவை, கல்வி வளர்த்த சூழலில் ஏற்பட்ட பண்பாட்டுக் கூறுகளின் மாற்றம் தானே?

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:33:20(இந்திய நேரம்)