தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முன்-1.5 பண்பாட்டின் எல்லை

  • 1.5 பண்பாட்டின் எல்லை

    c03110ad.gif (1294 bytes)

    பண்பாட்டுக்கு ஒரு வரையறை அல்லது எல்லை கூற இயலாது. ஒரு நாட்டிற்கு என ஒரு பண்பாடு அமைவது உண்டு. ஒரு குழுவுக்கு என ஒரு பண்பாடு அமைவதும் உண்டு. உலகளாவிய நிலைகளிலும் சில பண்பாட்டுக் கூறுகள் அமைந்திருக்கும்.

    1.5.1 உலகு போற்றும் பண்பாடு (International Culture)

    சில பண்பாட்டுக் கூறுகள், குறிப்பிட்ட சில பண்பாட்டிற்கே உரியன. சில ஒன்றிற்கு மேற்பட்ட பல பண்பாட்டிற்குப் பொதுவானவை. சில பண்பாட்டுக்கூறுகள் உலகம் முழுவதும் பரவி உள்ளன.

    குடியேற்ற நாடுகளாகிய ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆப்ரிக்காவின் பகுதிகள் ஆகியவற்றில், தாய்நாடாகிய இங்கிலாந்தின் பண்பாட்டுக் கூறுகளும், ஆங்கில மொழியும் இருக்கின்றன. இதனால், ஆடை அணியும் முறை, இசை, விளையாட்டு முதலியவற்றில் ஒரு பொதுத்தன்மை அமைந்துள்ளது. இவற்றில் சில உலகம் முழுவதும் பரவியுள்ளன.

  • உலகளாவிய தமிழரின் பொதுத்தன்மை
  • இதைப்போல குடியேற்ற நாடுகளாகிய மொரீசியஸ், தென் ஆப்பிரிக்கா, ரியூனியன், பர்மா, மலேயா, சிங்கப்பூர் போன்ற பகுதிகளில் வாழும் தமிழர்களிடமும் தமிழ் மொழியும், தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளாகிய தமிழர்களின் நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும், வழிபாட்டு முறைகளும், சமயச் சடங்குகளும் பெருமளவில் பின்பற்றப்படுகின்றன. இவற்றால் உலகளாவிய அளவில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடையே பயன்படுத்தும் மொழி, பண்பாட்டுக் கூறுகள் ஆகியவற்றிடையே ஒரு பொதுத்தன்மை ஏற்பட்டுள்ளது.

    குடியேற்றம் உலகப் பொதுப் பண்பாட்டுக் கூறுகளை உருவாக்குகின்றது. தற்காலத்தில் பெருகிவரும் தகவல் தொடர்புச் சாதனங்களும் உலகப் பொதுப்பண்பாட்டுக் கூறுகளை உருவாக்குவதில் துணை செய்கின்றன.

    1.5.2 நாடு போற்றும் பண்பாடு

    ஒரு நாட்டில் வாழ்வோர் அவர்கள் வாழும் நிலம், சூழல், பழக்க வழக்கங்கள், நடவடிக்கைகள், நம்பிக்கைகள், உணர்வுகள் ஆகியவற்றின் அடிப்படையாக ஒரு தனித்தன்மை வாய்ந்த பண்பாட்டை உருவாக்கிக் கொள்வர். அப்பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டே அவர்களை அடையாளம் காண இயலும். இதை நாட்டுப் பண்பாடு என்பர்.

    மேற்குறிப்பிட்டவற்றின் அடிப்படையிலே, இந்தியப் பண்பாடு, சப்பானியர் பண்பாடு, அமெரிக்கப் பண்பாடு என்று சுட்டுவர்.

  • இந்தியப் பண்பாடு
  • நெற்றியில் பொட்டு இடல், திருமணத்தில், விழாக்களில், சடங்குகளில் மலருக்குக் கொடுக்கும் சிறப்பு முதலியன இந்திய நாட்டின் பண்பாட்டுக் கூறுகளாகக் கருதப்படுகின்றன.

  • தமிழ்நாட்டுப் பண்பாடு
  • ஆடை அணிதல், உணவுமுறை, பழக்க வழக்கங்கள், நம்பிக்கை, வழிபாடு ஆகியவற்றில் தமிழர்களுக்கு என சில தனித்தன்மை அமைந்துள்ளது. ஆடவர் வேட்டி அணிதல், தலைப்பாகை அமைத்தல், இளம் மங்கையர் தாவணி அணிதல், முகத்தில் மஞ்சள் பூசுதல், திருமணத்தின்போது கணவன் மனைவிக்குத் தாலி கட்டுதல், மாட்டுப்பொங்கல் முதலியன தமிழர்களுக்குரியவை.

    இக்கூறுகள் தமிழ்நாட்டுப் பண்பாட்டை வெளிப்படுத்துவன.

    1.5.3 சமுதாயப் பண்பாடு (Sub Culture)

    ஒவ்வொரு மனித சமுதாயத்திற்கும் ஒரு பண்பாடு உண்டு. ஒரு நாட்டில் வாழ்வோர், அந்த நாட்டிற்கு உரியதான தேசியப் பண்பாட்டில் கலந்து கொள்வார்கள். அதே நாட்டில் வாழும் சமுதாயக் குழுக்கள், பிரிவுகள், தாம் சார்ந்த சமுதாயத்திற்கு உள்ளேயே, தமது சொந்தப் பண்பாட்டு மாதிரிகளை உருவாக்குவார்கள். இதை சமுதாயப் பண்பாடு (Sub-Culture) என்று குறிப்பிடுவார்கள்.

    பெரிய நகரங்களில், தெருக்களில் சுற்றித்திரியும் இளைஞர்கள் (Teenage Street Gang) அவர்களாகவே சில பண்பாட்டுக் கூறுகளை உருவாக்கிக் கொள்வதும் உண்டு.

    ஒரு நாட்டினுள் வாழும், ஒவ்வொரு பிரிவினரும் அல்லது ஒவ்வொரு சாதியினரும், மலைவாசிகள் போன்ற பழங்குடியினரும் தங்களின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், சடங்குகள் முதலியவற்றின் அடிப்படையில் தங்களுக்கு என சில பண்பாட்டுக் கூறுகளை அமைத்துக் கொள்வர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:33:14(இந்திய நேரம்)