தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2.2 இசைக்கலை

  • 2.2 இசைக்கலை

    English AudioE

    Click here to Animate
    இசையால் கட்டுப்பட்ட யானை

    கொல்லையில் கம்புக் கதிர்கள் நன்கு காய்த்திருந்தன. யானை அவற்றைத் தின்பதற்கு வந்து விட்டது. யானையின் வாய்க்குள் கதிர் புகுவதைவிடக் கால்பட்டு அழிவதல்லவா அதிகமாகி விடும்? எனவே அந்தக் கொல்லையைக் காக்கப் பரண்போட்டு அமர்ந்திருந்த பெண் குறிஞ்சிப் பண்ணைப் பாடினாள்; பாடிக்கொண்டே இருந்தாள். விடியும்வரை பாடிக்கொண்டே இருந்தாள். யானை தலையை அசைத்துக்கொண்டே கேட்டுக்கொண்டு இருந்தது. பொழுது புலர்ந்துவிட்டது. மக்கள் சந்தடி தொடங்கிவிட்டது. யானை கதிர்களை உண்ணாமல் போய்விட்டது. இவ்வாறு விலங்குகள்கூட இசைக்குக் கட்டுப்படும் என்றால் மனிதர்கள் கட்டுப்பட மாட்டார்களா என்ன?

    2.2.1 பாட்டும் பண்ணும்

    பாட்டு என்பது பரந்துபட்ட ஓசை உடையது. பாட்டுக்குப் பண் உண்டு. பண்ணை இராகம் என்பர். பண்கள் நூற்று மூன்று ஆகும் என்று பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. பருந்தும் அதன் நிழலும் போலப் பாட்டும் பண்ணும் இயைந்து செல்ல வேண்டும் என்பர். பண்ணுக்குரிய அடிப்படையைச் சுரம் என்றும் கோவை என்றும் கூறுவர். இக்காலத்தில் சரிகமபதநி என்ற ஏழு சுரங்கள் உள்ளன.

    சுரம்

    தமிழ்ச்சொல்

    வடசொல்

    குரல்

    சட்ஜமம்

    ரி

    துத்தம்

    ரிஷபம்

    கைக்கிளை

    காந்தாரம்

    உழை

    மத்திமம்

    இளி

    பஞ்சமம்

    விளரி

    தைவதம்

    நி

    தாரம்

    நிஷாதம்

    ஏழு சுரங்கள்

    இந்த ஏழு சுரங்களின் பெயர்கள் பண்டைக்காலத்தில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என அழைக்கப்பட்டன. இன்று இப்பெயர்கள் சட்ஜமம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற வடமொழிப் பெயர்களாக வழங்குகின்றன. தூய தமிழாக இருந்த பண்களின் பெயர்கள் பல இன்று வடமொழிப் பெயர்களாக மாறியுள்ளன.

    2.2.2 இசைக் கருவிகள்

    பண்டைக்காலத்து இசைக் கருவிகள் புல்லாங்குழலும் யாழும் ஆகும். மாடுகளை மேய்த்த ஆயன் காட்டில் மூங்கிலில் வண்டுகள் உண்டாக்கிய துளைகளில் காற்றுப் புகுந்து உண்டாக்கும் ஓசை கேட்டுப் புல்லாங்குழலை உருவாக்கிக் கொண்டான்; மரக்கிளைகளில் கொடிகள் படர்ந்திருக்க அவற்றின் இடையே காற்றுப் புகுந்து வெளிப்பட்டபோது உண்டான ஓசை கேட்டு 'யாழ்' என்னும் இசைக் கருவியைப் படைத்துக் கொண்டான்.

    குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
    மழலைச்சொல் கேளா தவர் 

    (குறள்: 66)

    என்று வள்ளுவர் இவ்விரண்டு இசைக் கருவிகளையும் குறிப்பிடுகின்றார்.

    இசைக் கருவியின் வகைகள்

    Udukkai
    உடுக்கை

    இசைக் கருவிகள் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, கஞ்சக் கருவி என நான்கு வகைப்படும். மத்தளம், கிணை, முழவு, பேரிகை, உடுக்கை, முரசு, பறை ஆகியன தோற் கருவிகள் ஆகும். புல்லாங்குழல், சங்கு, கொம்பு ஆகியன துளைக் கருவிகள் ஆகும். யாழ், வீணை என்பன நரம்புக் கருவிகள் ஆகும். பாண்டில், தாளம் என்பன கஞ்சக் கருவிகள் ஆகும். (கஞ்சக்கருவி = உலோகத்தாலான இசைக்கருவி)

    2.2.3 இசை இலக்கணம்

    இசைக்கு இலக்கணம் கூறும் நூல்கள் பல பண்டைக்காலத்தில் இருந்தன. பண்களில் முதலில் தோன்றியது முல்லைப் பண் என்று இசை இலக்கணம் கூறும். இந்த முல்லைப் பண் அரிகாம்போதி என இன்று வழங்கப்படுகின்றது. திரை இசையில் "சந்திரனைத் தொட்டது யார் ..." என்று ஒரு பாடல் வருகிறதல்லவா. அது, இந்த அரிகாம்போதிதான்!

    குறிஞ்சிப் பண் இன்று நடபைரவி என வழங்கப்படுகின்றது. இன்றைய திரை இசையில் 'பூங்காற்று திரும்புமா' என்றொரு திரைப் பாடல் வருகிறதல்லவா? அது, இந்த நடபைரவிதான்!

    மருதப்பண் இன்று கரகரப்ரியா என வழங்கப்படுகின்றது. இன்றைய திரை இசையில் 'அறியாப் பருவமடா கண்ணா ...' என்ற திரைப்பாடல் இந்தக் கரகரப்ரியாதான்!

    நெய்தற் பண் இன்று தோடி என வழங்கப்படுகின்றது. இன்றைய திரை இசையில் 'கங்கைக் கரை மன்னனடி' என்று தொடங்கும் பாடல் இந்தப் பண்ணில்தான் ஒலிக்கின்றது.

    இந்தப் பண்களைப் பொழுது அறிந்து இசைக்க வேண்டும் என்பர். இரவில் நட பைரவி, காலையில் கரகரப்ரியா, மாலையில் அரிகாம்போதி, முன்னிரவில் தோடி என்ற வழக்கம் நடைமுறையில் இருந்திருக்கிறது. ஒவ்வொரு உணர்ச்சி வெளிப்படும் செயலுக்கும் ஒரு பண் என்ற முறை இருந்திருக்கிறது.

    பொழுது

    பண்டைய
    தமிழ்ப் பண்

    இன்றைய பண்

    காலை

    மருதப்பண்

    கரகரப்பிரியா

    மாலை

    முல்லைப்பண்

    அரிகாம்போதி

    முன்னிரவு

    நெய்தற்பண்

    தோடி

    பின்னிரவு

    குறிஞ்சிப்பண்

    நடபைரவி

    பண்ணும் பொழுதும்

    இதோ ஒரு தாலாட்டுப் பாடல் கேளுங்கள். பூவே செம்பூவே.. இது நீலாம்பரி.

    இதோ, முகாரிப் பண்ணில் ஒரு பாடல் கேளுங்கள்! கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் ...

    இப்படித்தான் பொருளுக்கும் வேளைக்கும் தகுந்தாற் போல் இசை பல பண்களைப் பெற்றுள்ளது. பண்டைத் தமிழ் இசை பற்றிய செய்திகள் சிலப்பதிகாரத்தில் விரிவாகக் கிடைக்கின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-10-2019 16:30:36(இந்திய நேரம்)