தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்-1.6 நாயக்கர் கால வாழ்க்கை முறை

  • 1.6 நாயக்கர் கால வாழ்க்கை முறை

    Audio Button

    சாதிப் பெருக்கம், பலதார மணம் (Polygamy), சமய மாற்றம், சமய, அரசியல் சார்புடைய விழாக்கள் ஆகியவை நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் மக்கள் வாழ்க்கை முறையில் காணும் சிறப்பு நிகழ்வுகளாகும்.

    1.6.1 சாதிப் பிரிவுகள்

    நாயக்கர் காலத்தில் வலங்கைச் சாதிகள், இடங்கைச் சாதிகள் என்று இரு பிரிவுகளாகச் சாதிகள் பிரிந்து பூசல் விளைவித்தன. எனினும் நாயக்க மன்னர்கள் இவற்றை வளரவிடவில்லை. நாயக்கர்கள் தெலுங்கு நாட்டிலிருந்து இக்காலத்தில் தமிழகம் வந்து குடியேறினர். கம்மவார், ரெட்டியார், நாயக்கர், தேவாங்கர், கோமுட்டி, சாலியர், நாவிதர், சக்கிலியர், வண்ணார், ஒட்டர், பிராமணர் ஆகியோர் தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்து வந்து இங்குக் குடியேறினர். இக்குடியேற்றங்கள் தமிழர்களால் எதிர்க்கப் படவில்லை.

    நாயக்கர் ஆட்சிக் காலத்தில் சௌராட்டிரப் பகுதியிலிருந்து சௌராட்டிரர்கள் தமிழகத்தில் குடியேறினர். இவர்களைப் பட்டுநூல்காரர் எனத் தமிழர் குறிப்பிட்டனர். இவர்கள், மங்கம்மாள் காலத்தில், பிராமணரைப்போலத் தமக்கும் பூணூல் போட்டுக் கொள்ளும் உரிமை வேண்டிப் பெற்றனர் என்பர்.

    1.6.2 ஆடவர் மகளிர் நிலை

    ஆண்மக்கள், பெண்களைவிடக் கல்வியில் மேலோங்கி இருந்தனர். மகளிர் உரிமைக்காகப் போராடவில்லை. ஆடவர், மகளிர் பலரை மணந்தனர். திருமலை மன்னருக்கு 200 மனைவியரும், மறவர் நாட்டை ஆண்ட கிழவன் சேதுபதிக்கு 47 மனைவியரும் இருந்தனர். கணவன் இறந்ததால் மனைவி உடன்கட்டை ஏறும் வழக்கம் சில இடங்களில் இருந்தது. இராணி மங்கம்மாள் அறிவும் துணிவும் மிக்க மங்கையாகத் திகழ்ந்தார். அவருக்குப் பின்னால் ஆட்சிக்கு வந்த இராணி மீனாட்சிக்கு அத்தகைய ஆற்றல் இல்லை. ஆடவர் மகளிர் ஆகிய இருபாலாரும் சமயம் மாறுகின்ற வழக்கம் இக்காலத்தில் ஏற்பட்டது.

    கலை ஈடுபாடு மிகுந்திருந்த இக்காலத்தில், பெருஞ்செல்வர்களும், உயர் அதிகாரிகளும், மகளிர் பலரை மணக்கும் வழக்கம் இருந்தது. மகளிர் பலர் இசை, நடனம் முதலான கலைகளில் சிறந்து விளங்கினர்.

    கோயிலுக்குப் பொட்டுக்கட்டும் வழக்கம் என்ற பெயரில் பெண்களைத் தாழ்குடிப் பெற்றோர் கோயிற் பணிக்காக விட்டனர். ஆனால் உயர்குடிச் செல்வர் இம்மகளிரைத் தம் உடல் வேட்கைக்கு ஆளாக்கிக் கொண்டனர்.

    1.6.3 கல்வி

    திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து பிள்ளைகள் படிக்கும் வழக்கம் இருந்தது. அரசாங்கங்கள், கல்விக்கூடங்களை வளர்க்கவில்லை. பிராமணர்கள் வேதபாடசாலைகளில் சேர்ந்து வேதம் பயின்றனர் என்றும், இவர்களுக்குரிய செலவை அரசு ஏற்றிருந்ததென்றும் நொபிலி பாதிரியார் தெரிவிக்கின்றார். மடங்கள் சமயக் கல்வியைக் கற்பித்தன. பெண்கல்வி மிகுதியாக வளரவில்லை.

    1.6.4 திருவிழாக்கள்

    திருமலை நாயக்கர் காலத்தில் மதுரை விழாக்களின் இருப்பிடம் ஆயிற்று. ஆண்டுதோறும் நான்கு பெருவிழாக்கள் நடந்தன.

    திருமலை மன்னர், மாசி மாதத்தில் நிகழ்ந்து வந்த திருக்கலியாண விழாவையும், தேரோட்டத்தையும் மக்கள் கலந்து கொள்ள வசதியாகச் சித்திரை மாதத்திற்கு மாற்றினார். இந்தத் திருவிழாவில், எட்டாம் நாளில் மீனாட்சி அம்மைக்கு முடிசூட்டி, அவரிடமிருந்து மன்னர் செங்கோல் வாங்கும் நிகழ்ச்சி சேர்க்கப்பட்டது. இதுவே மதுரையில் பெரிய திருவிழா ஆகும்.

    வைகாசி மாதத்தில் வசந்த விழா நடத்தப் பெற்றது. ஆவணி மாதத்தில் பத்து நாட்கள் சிவபெருமானின் திருவிளையாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பெற்றன. பத்து நாள் நிகழ்ச்சிகளில் ஒன்று, இறைவன் விறகு விற்ற நிகழ்ச்சியாகும். இதோ அந்தத் திருவிளையாடலைக் காணுங்கள்! இறைவன் விறகு விற்பவனாக வந்து பாட்டுப்பாடி இறுமாப்பு கொண்டிருந்த இசைப்பாடகர் ஏமநாதனைத் தோல்வியுறச் செய்து, பாண்டிய மன்னனின் அவைக்களப் பாடகன் ஆகிய பாணபத்திரனுக்கு அருள் செய்த இதனை, யார் மறக்க முடியும்? புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா நடைபெற்றது.

    இவற்றைத் தவிர, வேறு பல திருவிழாக்களும் நிகழ்ந்தன. அவற்றில் தெப்பத்திருவிழா தைப்பூச நாளன்று நடத்தப் பெற்றது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:00:38(இந்திய நேரம்)