தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

4.3 தமிழகத்தில் நல்லிணக்கம்

  • 4.3 தமிழகத்தில் நல்லிணக்கம்

    Audio Button

    இந்தியாவை ஆண்ட வெள்ளையர்கள் இந்து, முஸ்லீம்களிடையே பிரிவினையை உண்டாக்கித் தாம் தொடர்ந்து இடையூறு இல்லாமல் நாட்டை ஆளலாம் எனக் கருதினர். ஆனால் இரு சமயத்தைச் சார்ந்த பெரியோரும் இதற்கு இடம் ஏற்படாதவாறு நடந்து கொண்டனர்.

    இந்துக்களின் மனம் புண்படக் கூடாது என்பதற்காக முஸ்லீம்கள் பசுவதை செய்வதைக் கைவிடுவதென்று முடிவு கட்டினர். தமிழ்நாட்டில் இந்த நல்லிணக்கம் முழுமையானதாகவே இருந்தது. இந்து முஸ்லீம் கலவரங்கள் இங்கு நிகழவில்லை. 1936, 1937ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் நிகழ்ந்த இசுலாமிய மாநாடுகளில் திரு.வி.கலியாணசுந்தரனார் தலைமை தாங்கி இசுலாமிய சமயச் சிறப்பையும், இசுலாமிய இந்து சமயங்கள் ஒத்துப்போக வேண்டிய தேவையையும் சிறப்பாக வலியுறுத்தியிருக்கிறார். தமிழர் பண்பாட்டில் என்றும் மதவெறி ஊடுருவியதில்லை; எனவே இங்கே ஒரு ‘நவகாளி’ நிகழவில்லை. (இசுலாமியரும் இந்துக்களும் தாம் சகோதரர் என்ற உண்மையை மறந்து, ஒருவரோடு ஒருவர் மோதி, இரத்த ஆற்றைப் பெருக்கெடுக்க வைத்த இடம் வங்காளத்தில் உள்ள நவகாளி ஆகும்.)

    4.3.1 போராட்டத்தில் ஒருமைப்பாடு

    இந்தியா விடுதலைக்காகப் போராடியபோது அதன் மக்களிடையே வியக்கத்தக்க ஒற்றுமை உருவாகியது. சாதிபேதங்கள், மதவேறுபாடுகள் ஆகியன மறைந்து இந்தியர் எல்லோரும் ஒரு நிறை என்ற நிலை உருவாகியது.

    ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
         அந்நியர் புகல்என்ன நீதி

    Audio Button

    என்று பாரதி பாடியதற்கேற்ப ஓர் ஒருமை உணர்வு பிறந்தது. தமிழகத்தில் இந்த ஒருமைப்பண்பு நன்கு வெளிப்பட்டது. காங்கிரஸ் மேடையிலே ஐயர், ஐயங்கார், ஆச்சாரியார், முதலியார், செட்டியார் எனத் தலைவர்கள் பலர் வேறுபாடின்றி உட்கார்ந்திருந்தனர். இமயமலையில் ஒருவன் இருமினால் குமரியிலிருந்து மருந்துகொண்டு ஓடுவோம் என்று பாரதிதாசன் கூறுவது போல ஓர் உணர்ச்சியடிப்படையிலான ஒற்றுமை உருவாகியது.

    எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்
    எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு
    சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத்
    தரணிக்கெல்லாம் எடுத்து ஓதுவோமே


    எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே! -பொய்யும்
    ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே!- இனி
    நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே! -கெட்ட
    நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே!

    Audio Button

    என்று பாரதியார் பாடும் பாட்டு இந்த ஒருமைப்பாட்டைக் காட்டும். வேறுபாடுகளை மறந்து கடலெனத் திரண்ட சமூகத்தின் ஆன்ம வலிமையை வெள்ளை அரசு எதிர்த்து நிற்க முடியவில்லை

    .4.3.2 வேற்றுமையில் ஒற்றுமை

    இந்திய விடுதலையை நோக்கமாகக் கொண்டு போராடிய காங்கிரஸ் கட்சியில் கருத்து வேறுபாடுகள் மலிந்தன. தமிழ்நாட்டின் மிகப்பெரிய தேசியத் தலைவராக விளங்கிய பெரியார் ஈ.வெ.இராமசாமி காங்கிரஸை விட்டு விலகினார். திரு.வி.க. தொழிற்சங்க இயக்கங்களை வளர்த்தார்; இராஜாஜியின் தலைமையோடு கருத்து வேறுபாடு கொண்டார். அன்னி பெசன்ட் அம்மையார் அயல்நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்தவர். இவர் இந்தியாவிற்கு சுய ஆட்சி வேண்டும் என்று கிளர்ச்சி செய்தார். இவரைத் தமிழகத்தில் ஆதரித்தவர்களும் எதிர்த்தவர்களும் இருந்தனர். திலகர் தமிழ்நாடு வந்தபோது,

    “அன்னி பெசண்ட் நிகழ்த்திவரும் கிளர்ச்சியால் நாட்டில் சுயராஜ்ய வேட்கை வளர்ந்திருப்பது கண்கூடு.. பெசண்ட் அம்மையார் கிளர்ச்சியால் நலம் விளைகிறதா தீமை விளைகிறதா என்று பார்த்தேன். நலம் விளைதல் கண்டேன்; துணை போகிறேன்.."

    என்று மேடையில் பேசினார். பெசண்ட் அம்மையாரைத் திரு.வி.க. ஆதரித்தார்; கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம்பிள்ளை எதிர்த்தார். காங்கிரசிலேயே இவ்வளவு வேறுபாடுகள் இருக்கவும், 'ஜஸ்டிஸ்' கட்சி என்ற நீதிக்கட்சி சுய ஆட்சிக் கிளர்ச்சியை எதிர்த்தது. ஜஸ்டிஸ் கட்சி பிராமணர் அல்லாதார் நலத்திற்காகப் போரிட்டது. இவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும் தமிழகத்தில் அமைதி நிலவும் வகையில் தலைவர்களிடையே நேசம் இருந்தது.

    கொள்கைகளில் மாறுபட்டவர்களாயிருந்தாலும் தமிழகத் தலைவர்கள் மனித நேயத்தையும் சான்றாண்மையையும் விட்டுக் கொடுக்கவில்லை. எடுத்துக்காட்டுக்கு ஒன்று காணலாம். பெரியார் ஈ.வெ.இராமசாமி நாத்திகர். திரு.வி.க. ஒருமுறை பெரியார் இல்லத்தில் தங்கினார்; காலையில் ஆற்றுக்குச் சென்று குளித்துக் கரை ஏறினார். நாத்திகரான பெரியார் அவர்க்குத் திருநீறு (விபூதி) அளித்தார். திரு.வி.க. வியப்படைந்தார். பெரியார் விருந்தினர் கடமை என்றார். இந்தப் பண்பாடு தமிழரின் சகிப்புத்தன்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு இல்லையா?

    4.3.3 தொழிற்சங்கம் கண்ட தமிழகம்

    1918-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 27-ஆம் நாளில்தான் தமிழ்நாட்டில் முதன் முதலில் தொழிற்சங்கம் தோன்றியது. திவான்பகதூர் கேசவப் பிள்ளை, திரு.வி.க., பி.பி. வாடியா, செல்வபதி செட்டியார், இராமாஞ்சலு நாயுடு ஆகியோர் முயற்சியில் பிறந்த இந்தச் சங்கம் தொழிலாளர் நலன்களுக்காகப் போராடியது.

    “கதவடைப்பும் வேலை நிறுத்தமும் அடிக்கடி நிகழ்ந்தன. ஒவ்வொரு வேலை நிறுத்தமும் சமதர்ம வேதத்தின் ஒருபடலம் என்பது என் கருத்து"

    என்று திரு.வி.க. கூறுகிறார். மார்க்சியம் என்ற பொதுவுடைமைக் கொள்கை இத்தொழிற்சங்க அமைப்பால் தமிழ்நாட்டில் வேர் ஊன்றியது. திரு.வி.க. கூறுகிறார்:

    “மகம்மதுவின் தெய்வ ஒருமையும் கிறிஸ்துவின் அன்பும் புத்தர் தர்மமும் அருகர் (சமணர்) அகிம்சையும் கிருஷ்ணன் நிஷ்காமியமும் குமரன் அழகும் தட்சிணாமூர்த்தியின் சாந்தமும் பொதுமை அறத்தை வேராகக் கொண்டவை. அப்பொதுமை அறம் ஏன் ஓங்கவில்லை? சில தடைகள் மறிக்கின்றன. அவை யாவை? சாம்ராஜ்யங்கள், மடங்கள், சம்பிரதாயங்கள், கட்டுப்பாடுகள், கண்மூடி வழக்க ஒழுக்கங்கள் முதலியன. இவற்றைப் படைத்து வளர்ப்பது எது? முதலாளி தொழிலாளி வேற்றுமை. இவ்வேற்றுமையை ஒழிக்கவல்லது பொருட் பொதுமை. பொருட்பொதுமை மகம்மதுவின் தெய்வ ஒருமையும் கிறிஸ்துவின் அன்பும் பிறவும் மன்பதையில் கால் கொள்வதற்குத் துணை செய்யும் ஆற்றல் வாய்ந்தது என்னும் நுட்பம் எனக்குப் புலப்பட்டது. அதனால் மார்க்சியம் என் உள்ளத்தைக் கவர்ந்தது."

    எளியோரின் வாழ்க்கை நலம் கருதிய நோக்கில் தொழிலாளர் இயக்கம் தோன்றி வளர்ந்தமை இக்கூற்றின் வழியாக அறியலாம்.

     

    தன் மதிப்பீடு: வினாக்கள் - I

    1. அந்நியத் துணி எதிர்ப்புத் தமிழகத்தில் எப்போது தோன்றியது?

    2. கதர் என்பது யாது?

    3. ஒத்துழையாமை இயக்கம் பற்றிக் கூறுக.

    4. தமிழகத்தில் உப்புச் சத்தியாக்கிரகம் யார் தலைமையில் நிகழ்ந்தது?

    5. அன்னி பெசண்ட் பற்றித் திலகர் யாது கூறினார்?



புதுப்பிக்கபட்ட நாள் : 04-08-2017 17:17:29(இந்திய நேரம்)