Primary tabs
-
5.2 யாழின் சிறப்பு
சிறுபாணன் கையில் இருந்தது சீறி யாழ் என்று கூறப்படும் சிறிய யாழ். அதன் தன்மைகளாவன:
கருங்குரங்கு தன்னைக் கடிக்கவரும் பாம்பினிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள அதன் தலையைப் பிடித்துக் கொள்ளும். அப்போது அப்பாம்பு குரங்கின் கையை ஓரிடத்தில் இறுக்கமாகவும் ஓரிடத்தில் நெகிழ்ச்சியாகவும் சுற்றிக்கொள்ளும். அதுபோல யாழ்த் தண்டினிடத்தில் நெகிழ வேண்டிய இடத்தில் நெகிழ்ந்தும் இறுக வேண்டிய இடத்தில் இறுகியும் உள்ள நரம்பு கட்டியிருக்கும் கட்டுகளை உடையது அந்த யாழ்.
மணிகளை வரிசையாகக் கோத்து வைத்ததைப் போன்று இரண்டு விளிம்பையும் சேர்த்துத் தைத்து முடுக்கின ஆணிகளைக் கொண்டது.
யாழின் ஒரு பகுதி குடம் போலப் பருத்திருக்கும் (அதனை வயிறு போல எனக் குறிப்பிடுகிறார் புலவர். அதனைப் பத்தர் என்பர்). ஒழுங்குபட்ட தொழில்வகை அமைந்த பத்தரை உடையது; குமிழம் பழம் போன்ற நிறம் உடைய போர்வைத் தோலால் போர்த்தப்பட்டது அந்த யாழ்.
அமிழ்தத்தைத் தன்னிடத்தே பொதிந்து வைத்திருக்கும் தேனை ஒழுக விட்டதைப் போன்ற முறுக்கு அடங்கின நரம்புகளைக் கொண்டது. யாழின் அமைப்பை இவ்வாறு சிறப்பிக்கிறார் நத்தத்தனார்.
பைங்கண் ஊகம் பாம்புபிடித் தன்ன
அம்கோட்டுச் செறித்த அவிழ்ந்துவீங்கு திவவின்
மணிநிரைத் தன்ன வனப்பின் வாயமைத்து
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்குபுரி நரம்பின் . . .(அடிகள் 221-227)
அழகிய சீறியாழைக் கையிலே கொண்டுள்ள சிறுபாணனே! இந்த யாழினைக் கொண்டு இசை நூல் கூறுகின்ற முறைகளின்படி செம்பாலையாக இயக்கிப் பாடுக என்று பரிசில் பெற்ற பாணன் பரிசு பெற விரும்பும் பாணனை நோக்கிக் கூறினான்.
அங்ஙனம் நீங்கள் நல்லியக்கோடனைப் பாடும் பொழுது, “ஐம்பெரும் குரவர்க்கும் எப்பொழுதும் குவித்த கைகளை உடையவனே! ஏரினை உடைய குடிமக்களின் துன்பம் நீக்கி அவர்களுக்கு நிழல் போல இன்பம் அளிக்கும் செங்கோலை (சிறந்த ஆட்சியை) உடையவனே! பகை அரசர்க்குத் துன்பம் தரும் வேலினை உடையவனே! என்றவாறெல்லாம் அவனின் பெருமையைப் புகழ்ந்து பாடுங்கள்” என்கின்றான். (ஐம்பெரும்குரவர் - அரசன், ஆசிரியர், தாய், தந்தை, தமையன் ஆகியோர்.)
முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும்,
இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும்,
ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும்,
தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும்,
நீசில மொழியா அளவை . . . . . .(அடிகள், 231-235)