Primary tabs
-
5.1 நல்லியக்கோடனின் புகழ்
சிறந்த பண்புகளைத் தன்னகத்தே கொண்ட இம் மன்னனைச் சான்றோர், போர் வீரர், அரிவையர், பரிசிலர் ஆகியோர் புகழ்ந்து கூறுகின்றனர். இவர்களின் புகழ் மொழியைத் தொடர்ந்து நோக்கலாம்.
நன்றி மறவாத நல்ல பண்பைப் பிறவிக் குணமாகக் கொண்டவன் நல்லியக்கோடன். சிற்றினம் சேராதவன். இன்முகம் உடையவன். உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசாதவன். முகம் நக மட்டுமன்றி அகம் நகவும் (உள்ளம் மலர) பரிசிலர்களை வரவேற்பவன். இத்தகைய சிறந்த பண்பு நலன்களை எல்லாம் அவனை நன்கு அறிந்த சான்றோர்கள் எந்நாளும் புகழ்ந்து கூறுவர். இதனை,
செய்ந்நன்றி அறிதலும் சிற்றினம் இன்மையும்
இன்முகம் உடைமையும் இனியன் ஆதலும்
செறிந்துவிளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த(சிறுபாணாற்றுப்படை, 207-209)
என்னும் அடிகள் உணர்த்துகின்றன.
நாடாளும் மன்னன் வீரம் மிக்கவனாக இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் எவருக்கும் அஞ்சாது சிறந்த ஆட்சி என்று சொல்லத்தக்க செங்கோலாட்சி செலுத்த முடியும். நல்லியக்கோடனின் சிறந்த வீரத் தன்மையைப் போர் வீரர்கள் பின்வருமாறு புகழ்ந்து கூறுகிறார்கள்.
பகைப் படையினரைக் கண்டு அஞ்சாது அவர்களை அழிக்கும் ஆற்றல் உடையவன்.
தன்னை அடி பணிந்து தன் கீழ் அடங்கி ஆட்சி செய்யும் பகைவரிடத்துக் கோபம் கொள்ளாது இரக்கம் காட்டும் அருள் உள்ளம் உடையவன்.
பயந்து நடுங்கி ஓடும் தன் படையினரைச் சுற்றி வளைத்து அவர்களுக்கு வீரமொழிகள் கூறி, அவர்களை வீரமுடன் போரிடச் செய்பவன்.
இவ்வீரத் தன்மையை,
அஞ்சினர்க்கு அளித்தலும் வெஞ்சினம் இன்மையும்
ஆண்அணி புகுதலும் அழிபடை தாங்கலும்
வாள்மீக் கூற்றத்து வயவர் ஏத்த(சிறுபாணாற்றுப்படை, 210- 212)
என்னும் அடிகள் போற்றிக் கூறுகின்றன.
நினைத்ததை முடிக்கும் ஆற்றல் உடையவன்; பெண்களால் பெரிதும் விரும்பப்படும் தன்மையன்; பெண்கள் வசப்படாதவன்; பெண்களின் வருத்தத்தை அறிந்து அதனைப் போக்குபவன்; அவர்களைப் பாதுகாக்கும் இயல்பை உடையவன் என்று நல்லியக்கோடனைப் பெண்கள் (அரிவையர்) புகழ்ந்து கூறினர். இதனை,
கருதியது முடித்தலும் காமுறப் படுதலும்
ஒருவழிப் படாமையும் ஓடியது உணர்தலும்
அரியேர் உண்கண் அரிவையர் ஏத்த(சிறுபாணாற்றுப்படை, 213-215)
என்னும் அடிகள் விளக்கிக் கூறுகின்றன.
நல்லியக்கோடனின் அறிவு மடம்படுதல், வரிசை (தகுதி) அறிந்து பரிசு நல்கும் திறம், வரையாது (அளவில்லாது) வழங்கும் வள்ளல் தன்மை முதலியவற்றை இம்மன்னனிடம் பரிசுப் பொருள் பெற்ற பரிசிலர் புகழ்ந்து கூறினர்.
அறிவு மடம்படுதல்
அறிவு நிரம்பப் பெறாதவர்கள் தன்னிடம் வந்து தவறானவற்றைக் கூறினால், அவற்றை அறியாதவன் போல விரும்பிக் கேட்பான். அறிந்தும் அறியாதவன் போல் இருக்கும் இப்பண்பை அறிவு மடம்படுதல் என்பர்.
வரிசை அறிந்து பரிசு நல்கல்
பரிசில் பெறும் நோக்கோடு தன்னிடம் வந்த பரிசிலர்களுக்கு வேண்டுவன வழங்கும் வள்ளல் குணம் கொண்டவன் இம்மன்னன். ஆயினும், பரிசிலரின் தகுதி அறிந்து அவர்களின் தகுதிக்கு இழுக்கு ஏற்படாத வகையில் வாரி வழங்குவான். இப்பண்பை வரிசை அறிந்து பரிசு நல்கல் என்பர்.
வரையாது வழங்குவோன்
பரிசிலரின் வரிசை அறிந்து பரிசு நல்குபவன் இவன்; எனினும் பரிசிலரின் நெஞ்சம் நிறையுமாறும் அவர்கள் மட்டுமன்றி அவர்களின் உறவினர்களும் பெற்றுப் பயன் அடையும் வகையிலும் அளவில்லாப் பரிசுப் பொருள்களை வாரி வழங்குவான். இத்தன்மையை வரையாது வழங்கும் வள்ளல் தன்மை என்று சிறப்பித்துக் கூறுவார்.
நல்லியக்கோடனின் வள்ளல் தன்மையை எடுத்துரைக்கும் அடிகள் இவை:
அறிவுமடம் படுதலும் அறிவுநன்கு உடைமையும்
வரிசை அறிதலும் வரையாது கொடுத்தலும்
பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் ஏத்த(சிறுபாணாற்றுப்படை, 216-218)
வீற்றிருத்தல்
இத்தகைய கொடைத் திறம் மிக்க மன்னன் விண்மீன்களுக்கு இடையே ஒளி வீசும் நிலவைப் போல அறிஞர், வயவர் (மறவர் வீரர்), அரிவையர், பரிசிலர் ஆகியோர் சூழ அரசு வீற்றிருந்தான்.