Primary tabs
பாடம் - 4
புறநானூற்றின் நான்காவதான இப்பாடம், புறநானூற்றில் மேலும் எட்டுப் பாடல்களுக்குரிய (பாடல் எண் 226, 228, 229, 235, 239, 242, 243, 245) விளக்கங்களைத் தருகின்றது.
இவ்வெட்டுப் பாடல்களும் துன்பச் சுவை காட்டுவன. இழப்பைக் குறித்து இரங்கிப் பாடப்பெற்றன. உடம்பு நிலையாமை, இளமை நிலையாமை போன்ற நிலையாமைகள் மனிதர் வாழ்வை எவ்வாறு பாதிக்கின்றன என்று இப்பாடல்கள் எடுத்துரைக்கின்றன.
பழந்தமிழ்ச் சமுதாயத்தில் புலவர்க்கும் அரசர்க்கும் இடையே நிலவிய அன்புப் பிணைப்பு, அரசர்க்கும் மக்களுக்கும் இடையே நிலவிய நேய இணைப்பு, கணவன் மனைவி வாழ்வில் இருந்த உறவுக் கலப்பு ஆகியவற்றை இப்பாடல்கள் சொல்லுகின்றன.
சங்க கால மக்கள் வாழ்க்கையை அறிவுத்
தெளிவோடு நோக்கினர்.
வாழ்வில் எது நிலைக்கும்,
எது நிலைக்காது என்பதை அவர்கள் எண்ணித்
தெளிந்தனர். புகழே நிலைக்கும்; உடம்பு,
செல்வம்,
இளமை ஆகியன நிலையா என
அறிந்திருந்தனர்.
இதனால் இதைப் படிப்போர் வாழ்க்கையை ஒரு தத்துவ
நோக்கில் நோக்கும் பார்வை பெறலாம்.
புகழ்பெற வாழ்ந்தவர் மறைந்தால் நாடே கலங்கி அழும்; இயற்கையும் அவ்வருத்தத்தைக்
காட்டும் எனப் புலவர் கருதினர். கற்பனை நயம் பொருந்த மனத்திற்கு இனியவரின்
பிரிவை வருணிப்பதற்கு ஏற்ற திணை துறை அமைந்த இலக்கண அமைப்பும் கவிதைக்
கோட்பாடும் பழந்தமிழில் இருந்தன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
பின்னோக்கு உத்தியில்
கடந்த கால நிகழ்வுகளைச்
சுவைபடக் கூறக் கவிதை
நல்ல கருவியாகும் என
அறிய ‘இனி நினைந்து என்று
தொடங்கும் பாடல்
கற்பிக்கின்றது.. இது போன்ற
இலக்கியங்களைப்
படைக்கும் ஆற்றலை இப்பாட்டைப் படிப்பதனால்
பெறலாம்.