தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

வரைதல் வேட்கை

  • 6.1
    வரைதல் வேட்கை

    வரைவு - திருமணம்; வரைதல் - வரைந்து கொள்ளுதல்; திருமணம் செய்து கொள்ளுதல்.

    களவு வாழ்க்கையில் இருந்து மாறி, தலைவனும் தலைவியும் திருமணம் புரிந்து கொண்டு வாழ விரும்புதல் வரைதல் வேட்கை எனப்படும்.

    வரைதல் வேட்கை மூன்று காரணங்களால் ஏற்படும். அவையாவன:

    1. அச்சம்
    2. உவர்த்தல்
    3. ஆற்றாமை

    • அச்சம்

    தலைவன் தலைவியை அடைவதற்கு இடையூறான நிகழ்ச்சிகள் சில நடைபெறும். அவற்றால் தலைவனது காதல் உறவு விடுபட்டுப் போய்விடுமோ என்ற பயம் தலைவிக்கு ஏற்படும். இதையே அச்சம் என்பர்.

    • உவர்த்தல்

    உவர்த்தல் என்றால் (வெறுத்தல்) என்று பொருள். தோழி, தலைவனை - அவனது வருகையை வெறுத்துக் களவு ஒழுக்கத்திற்கு உதவி புரியாமல் இருப்பாள். அது உவர்த்தல் எனப்படும். அதன்பின் களவு முறையில் தொடர்ந்து பழக வாய்ப்பில்லாமல் போகும். எனவே தலைவனுக்கு வரைதல் வேட்கை ஏற்படும்.

    • ஆற்றாமை

    தோழி உடன்படாமல் வெறுத்தல் காரணமாகத் தலைவனது வருகை தடைப்படும். அவனது பிரிவைத் தாங்கிக் கொள்ள இயலாமல் தலைவி வருந்துவாள். அதுவே ஆற்றாமை எனப்படும். தலைவிக்கு நிகழும் ஆற்றாமை அவள் மனத்தில் திருமண விருப்பத்தை ஏற்படுத்தும்.

    அச்சம், உவர்த்தல், ஆற்றாமை என மூவகைப்படும் வரைதல் வேட்கை 18 வகையான விரிவுச் செய்திகளை உடையது.

    பருவரல் வினவிய பாங்கிக்கு இறைவி அருமறை செவிலி அறிந்தமை கூறல் முதலாக, குரவரை வரைவு எதிர்கொள்ளுவித்தல் ஈறாக அமையும் பதினெட்டும் வரைதல் வேட்கையின் விரிவுகளாகும். இப்பதினெட்டையும் மேற்கண்ட மூவகைக்கு ஏற்பப் பிரித்துக் காட்டுவர்.

    • அச்சத்திற்குரியவை
    1. தலைவியிடம், ‘உனக்கு ஏற்பட்ட துன்பம் யாது?’ எனத் தோழி கேட்ட போது, ‘அருமை வாய்ந்த நம் களவு ஒழுக்கம் செவிலிக்குத் தெரிந்துவிட்டது’ என்று தலைவி கூறுதல்.
    2. தலைவன் வரும் வழியில் உள்ள இடர்ப்பாடுகளைப் பற்றித் தோழியிடம் தலைவி கூறுதல்.
    3. ஊரில் உள்ளவர்கள் பழிதூற்றும் செயல் (அலர்) காரணமாக எழுந்த அச்சத்தால் தலைவி தோழியிடம் பேசுதல்.
    4. தலைவன் வரும்வழி பற்றிய அச்சத்தைத் தலைவி, தோழியிடம் உரைத்தல்.
    5. தலைவன் வரும் வழியை விலக்குமாறு (தவிர்க்கும் படி) தோழியிடம் தலைவி கூறுதல்.
    6. தலைவன் தன்னைக் காணவரும் இரவு நேரச் சந்திப்பைத் தடுத்து நிறுத்துமாறு (விலக்குமாறு) தலைவி தோழியிடம் கூறுதல்.
    7. தாய் வேலனை அழைத்து வெறியாட்டு நிகழ்த்துகிறாள் என்பதைச் சுட்டிக் காட்டித் தலைவன் வருவதைத் தடுத்து நிறுத்துமாறு தோழியிடம் தலைவி கூறுதல். (வெறியாடல் : தலைவி ஏதேனும் தெய்வம் காரணமாக அச்சம் கொண்டிருப்பாள்; அதனால் அவள் உடலில் மெலிவு ஏற்பட்டுள்ளது எனக் கருதித் தாய் அச்சம் தெளிவிக்க முற்படுவாள். அதற்காக அவள், முருகக் கடவுளின் உணர்வு மேல் எழும் வேலனிடம் சென்று வேண்ட வேலன் (முருக வழி்பாட்டினன்) தெய்வமேறிய நிலையில் கூறும் நிகழ்வு.)
    8. மாற்றார் மணம் பேச வருவதனைத் தடுத்து நிறுத்துமாறு தோழியிடம் தலைவி கூறுதல்.

    அச்சம் இவ்வாறான காரணங்களால் உண்டாகும். எனவே (அச்சம் காரணமாக), திருமணத்தை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும். என்னும் எண்ணம் ஏற்படும்.

    • உவர்த்தலுக்கு உரியவை
    1. தோழி, தலைவனைப் பழித்துரைத்தல்.
    2. தோழி, தலைவியிடம் ‘நின்குறையைத் தலைவனிடம் நீயே சொல்’ எனக் கூறுதல்.
    • ஆற்றாமைக்குரியவை
    1. தலைவனது ஊருக்குச் சென்றுவரத் தோழி உடன்படுதல்.
    2. ‘தலைவன் நம்மைப் பொருட்படுத்தாமல் இருப்பது, நம் ஊழ்வினைப்பயனே’ (தலைவிதியே) என்று தலைவி கூறுதல்.
    3. தலைவன் வந்து கூடியதாகக் கண்ட கனவினைத் தலைவி தோழியிடம் கூறுதல்.
    4. பிரிவால் தன் அழகு நலன் அழிந்ததைத் தோழியிடம் தலைவி கூறுதல்.
    5. தலைவனிடம் சென்று தன் துன்பத்தைக் கூறுமாறு தலைவி தோழியிடம் வேண்டுதல்.
    6. மிகுந்த காமத்தினால் துயருற்றுத் தலைவி பேசுதல்.
    7. பிரிவைத் தாங்க முடியாமல் செயலற்ற தன்மையுடன் தலைவி தனக்குத் தானே பேசுதல்.
    8. ‘தலைவனது உறவினரை, வரைவு பற்றிப் பேச வருமாறு ஏற்பாடு செய்’ என, தலைவி தோழியிடம் கூறுதல்.
    • வரைதல் வேட்கையின் காரணங்கள் - ஒரு தொகுப்பு

    வரைதல் வேட்கையின் விரியாக நாம் மேலே கண்ட செய்திகளின் வழியாக, வரைவு நிகழ்வதற்குரிய - அல்லது - திருமணத்தை விரும்புவதற்குரிய காரணங்களாகப் பின் வருவனவற்றைத் தொகுத்துக் கூறலாம்.

    1. செவிலித்தாய் களவு பற்றி அறிதல்.
    2. தலைவன் வரும் வழியில் உள்ள இடர்ப்பாடுகள்.
    3. குறிஇடையீடு, அல்ல குறிப்படுதல், குறிவிலக்குதல் - இவற்றால் ஏற்பட்ட இடைவெளி.
    4. தலைவனைப் பிரிந்திருக்க இயலாத தலைவியின் தன்மை.
    5. களவு பற்றிப் பிறர் பழி தூற்றுதல். (அலர்)
    6. தாய் நிகழ்த்திய வேலன் வெறியாட்டு.
    7. மாற்றார் மணம் பேச வருதல்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-11-2017 17:27:49(இந்திய நேரம்)