தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D0212331-3.1 கற்பு

  • 3.1 கற்பு

    கற்பு என்பது, தலைமக்கள் வரைவு (திருமணம்) மேற்கொண்டு நடத்தும் இல்வாழ்க்கையைக் குறிப்பதாகும். களவு என்னும் மறைமுகக் காதல் வாழ்க்கையை மாற்றி, அறநெறியில் ஊரறிய மணம் செய்து கொண்டு உலகியலுக்கு ஏற்ப வாழும் வாழ்க்கை ; தலைமக்கள் தங்களுக்கென்று சில வாழ்க்கை நெறிகளைக் கற்பித்துக்கொண்டு, அவற்றைப் பின்பற்றி வாழும் முறையான இல்லறம். பெற்றோர், செவிலித்தாய், சான்றோர் முதலானவர்கள் இல்லறத்திற்குரிய நன்னெறிகளைக் கற்பிப்பதால் கற்பு என்றும் விளக்கம் கூறுவர்.

    பொற்பமை சிறப்பில் கற்பெனப் படுவது
    மகிழ்வும் ஊடலும் ஊடல் உணர்த்தலும்
    பிரிவும் பிறவும் மருவியது ஆகும்

    என்பது கற்பியலின் முதல் நூற்பா ஆகும்.

    இந்நூற்பாவின் வழி, கற்பு என்னும் அறநெறி வாழ்க்கையில் உள்ளடங்கும் கூறுகளை நாற்கவிராச நம்பி வகுத்துக் கூறியுள்ளார். மகிழ்ச்சி, ஊடல், உணர்த்தல், பிரிவு என்னும் நான்கும் இணைந்ததாக அமைவதே கற்பு என்பது அவர் தரும் விளக்கம். இந்நான்கும் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து நிகழும் வாய்ப்புடையவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    3.1.1 கற்பிற்குரிய கிளவிகள்

    நாற்கவிராச நம்பி கற்பிற்குரிய நான்கு பகுதிகளை ஏழு என வகைப்படுத்தி வரையறுத்து விளக்கியுள்ளார். அவற்றைக் கிளவிகள் என்பர். அவையாவன :

    (1) இல்வாழ்க்கை

    (2) பரத்தையிற் பிரிவு

    (3) ஓதல் பிரிவு

    (4) காவல் பிரிவு

    (5) தூதிற் பிரிவு

    (6) துணைவயின் பிரிவு

    (7) பொருள்வயின் பிரிவு

    இவற்றுள் முதலில் அமையும் கிளவித் தொகையான இல்வாழ்க்கை என்பது கற்புநெறி மேற்கொண்டு தலைவனும் தலைவியும் நடத்தும் குடும்ப வாழ்க்கையைக் குறிப்பதாகும். எஞ்சிய ஆறும் பிரிவின் வகைகளாகும். அவை யாவும் தலைவியுடன் கூடி இல்லறம் நடத்தும் தலைவன் இடையிடையே பிரிந்து செல்லும் செயல்பாடுகளை விளக்குவதாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:57:32(இந்திய நேரம்)