Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II4.
செவ்வணி, வெள்ளணி - விளக்குக.
இவ்விரண்டும் தலைவி தோழிக்குச் செய்யும் அலங்காரம் என்பது பொதுவான செய்தி. தான் பூப்பெய்தி இருப்பதையும் மகப்பேற்றுக்குப் பின் நீராடி இருப்பதையும் தலைவனுக்கு உணர்த்த விரும்பும் தலைவி அதற்குரிய அடையாளங்களோடு தோழியை அவன் தங்கியிருக்கும் பரத்தையர் சேரிக்கு அனுப்பி வைப்பாள். இரு வேறுபட்ட செய்திகளை உணர்த்த இருவேறு வகைப்பட்ட அணி அலங்காரங்களைத் தோழிக்குச் செய்வது பண்டைய மரபாகும்.
செவ்வணி :
தலைவி பூப்பெய்தி மூன்று நாள் சென்றபின் நான்காம் நாள் நீராடுவாள். அந்நிகழ்ச்சியைப் பரத்தையிற் பிரிந்த தலைவனுக்கும் உணர்த்தும் முறை செவ்வணி எனப்படும். அதாவது தலைவி தோழிக்குச் சிவப்பு நிற மலரைச் சூட்டிச் செவ்வாடை உடுத்தி, செஞ்சாந்து பூசி, செவ்வணி பூட்டிச் செப்புப் பாத்திரத்தில் செம்பூவும் நீரும் இட்டுக்கொடுத்துத் தலைவன் இருக்கும் இடத்திற்கு அனுப்புவாள். தோழியும் பரத்தையர் சேரிக்கண் தலைவனைக் கண்டு அவனது பாதங்களில் செப்புப் பாத்திரத்தில் உள்ள பூவையும், நீரையும் பெய்து திரும்புவாள். அதனால் பூப்பு நிகழ்ச்சியைத் தலைவன் உணர்வான்.
வெள்ளணி :
இது தலைவி புதல்வனைப் பெற்றுப் பதினைந்து நாள்கள் சென்று பதினாறாம் நாள் நெய்யாடிய பின், அந்நிகழ்ச்சியைப் பரத்தையிற் பிரிந்த தலைவனுக்கு உணர்த்தும் முறையாகும். அஃதாவது, தலைவி தோழிக்கு வெண்மை நிறப் பூக்களைச் சூட்டி, வெள்ளாடையுடுத்தி, வெண்சாந்து பூசி, வெண்முத்துப் பூட்டிச் செப்புப் பாத்திரத்தில் வெண்பூவும் நீரும் இட்டுக்கொடுத்துத் தலைவன் இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைப்பாள். தோழியும் பரத்தையர் சேரிக்கண் தலைவனைக் கண்டு அவனது பாதங்களில் செப்புப் பாத்திரத்தில் உள்ள பூவையும் நீரையும் பெய்து திரும்புவாள். தலைவன் அதனாலே புதல்வன் பிறந்தமை உணர்வான்.