தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

கலிப்பாவின் பொது இலக்கணம்

  • 2.2 கலிப்பாவின் பொது இலக்கணம்

    ஒவ்வொரு பாவின் பொது இலக்கணத்தையும் அதற்குரிய சீர், தளை, அடி, தொடை, ஓசை, ஈறு ஆகியவற்றைக் கொண்டே நாம் அறிந்து வருகிறோம். கலிப்பாவின் பொது இலக்கணத்தைச் சீர், தளை, அடி, ஓசை, உறுப்பு, ஈறு எனும் தலைப்புகளால் அறியலாம்.

    1) சீர்

    நிரை முதலாகிய வெண்பாவுரிச்சீர் ( புளிமாங்காய், கருவிளங்காய்) மிகுந்துவரும். நேர் ஈற்று இயற்சீர் (தேமா, புளிமா), நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீர் (கருவிளங்கனி, கூவிளங்கனி) ஆகியவை கலிப்பாவில் வாரா. இங்குக் குறிப்பிடப்படாத ஏனைய சீர்களும் வரலாம்.

    • விதிவிலக்கு

    கலிப்பாவின் வகைகளாகிய வெண்கலிப்பாவிலும், கொச்சகக் கலிப்பாவிலும் நேரீற்றியற்சீர் வரலாம். கொச்சகக் கலிப்பாவில் நிரைநடுவாகிய வஞ்சியுரிச்சீரும் வரலாம்.

    2) தளை

    கலிப்பாவுக்குரிய கலித்தளைகளுடன் பிறதளைகளும் கலந்துவரும்.

    3) அடி

    கலிப்பாவுக்குரிய அடி அளவடி. அம்போதரங்க உறுப்பில் குறளடி, சிந்தடிகளும், அராக உறுப்பில் நெடிலடி, கழிநெடிலடிகளும் வரும்(இவை முன்பே நீங்கள் அறிந்தவை). மிக அருகிக் கலிப்பாவின் தரவு தாழிசை எனும் முதல் உறுப்புகளில் ஐஞ்சீரடி வருதலும் உண்டு. கலிப்பாவின் அடிச்சிறுமை நான்கடி ; பெருமைக்கு வரம்பு இல்லை.

    4) ஓசை

    கலிப்பாவின் ஓசை, துள்ளல் ஓசை. (இதனை முன்னரே பார்த்தோம்)

    5) உறுப்பு

    கலிப்பா ஒன்றையொன்று தொடரும் உறுப்புகளால் ஆகியது. அவை தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஆறுமாகும். இவற்றுள் தரவு, தாழிசை என்பன கலியோசையைச் சிறப்பாகக் கொண்டவை ;ஆகவே முதலுறுப்புகள் எனப்படும். இனி இவ்வுறுப்புகளின் விளக்கத்தைக் காணலாம்.

    இவை பாவில் எவ்வாறு அமைந்து வரும் என்பதைக் கலிப்பா வகைகளின் இலக்கணம் காணும் போது பார்க்கலாம்.

    • தரவு

    தரவு என்னும் உறுப்பு கலிப்பாவின் தொடக்கத்தில் வரும் உறுப்பு.இதற்கு எருத்தம் எனும் பெயரும் உண்டு.(தரவு = தருதல், முதலாவதாகத் தரப்படுவது.எருத்தம = பிடரி, யானைப்பிடரி = தலைமையாக அமையும் உறுப்பு.)

    • தாழிசை

    கலிப்பாவில் தரவை அடுத்து வரும் உறுப்பு தாழிசை ஆகும். தரவின் ஓசையைவிடச் சற்றுத் தாழ்ந்து வரும் ஓசை என்பதனால் இது தாழிசை எனப்பட்டது. தரவுக்கும் ஏனைய உறுப்புகளுக்கும் இடையில் வருவதால் இது இடைநிலைப்பாட்டு எனவும் பெயர் பெறும்.

    • அராகம்

    இவ்வுறுப்பு இசை இனிமை உடையது. அதனால் வண்ணகம் எனவும் பெயர் பெறும். விரைந்து செல்லும் ஓசையுடையது என்பதனால் முடுகியல் எனவும் பெயர் பெறும். ஓசை அடுக்கி வருவது என்பதனால் அடுக்கியல் எனவும் பெயர் பெறும்.

    • அம்போதரங்கம்

    அம்பு = தண்ணீர் ; தரங்கம் = அலை. நீரலை பெரிதாகத் தொடங்கிக் கரைசேரச் சேரச் சுருங்கி முடிவது போல நாற்சீரடி, முச்சீரடி,இருசீரடி என அடு்த்தடுத்து வரும் உறுப்பு இது. ஆகவே இது அம்போதரங்கம் எனப்பட்டது. அம்போதரங்க உறுப்பில் ஒரு சொல்லே ஒரு சீராக வருவதால் சொற்சீரடி எனவும்,ஓர் அசையே சீராக வரும் அடிகள் கொண்டிருப்பதால் அசையடி எனவும் இதற்கு வேறு பெயர்கள் உண்டு. சீர் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதால் எண் எனும் பெயரும் உண்டு.

    • தனிச்சொல்

    கலிப்பாவின் இறுதி உறுப்பாகிய சுரிதகத்தை ஏனைய உறுப்புகளின் இணைப்பதற்காகச் சுரிதகத்தின் முன் வரும் ஒரு தனிச்சொல் அல்லது தனிச்சீர், தனிச்சொல் என்னும் உறுப்பாகும்.

    • சுரிதகம்

    இதுவே கலியுறுப்புகளுள் இறுதி உறுப்பு. சுருங்கி முடிவது என்பது இதன் பொருள்.ஈற்றில் வைக்கப்படுவது எனும் பொருளில் வைப்பு எனவும் இறுதி வரம்பாக வருவது என்பதனால் வாரம் என்றும் இது பிற பெயர்கள் பெறும்.சுரிதகம் ஆசிரியப்பாவுக்குரிய அடியாகவோ,வெண்பாவுக்குரிய அடியாகவோ அமையும்.ஆசிரியச் சுரிதகம், வெள்ளைச் சுரிதகம் என முறையே பெயர் பெறும். எல்லாவகைக் கலிப்பாக்களிலும் இவ் ஆறு உறுப்புகளும் வாரா. எவ்வெவ் வகைக் கலிப்பாக்களில் எவ்வெவ் வுறுப்புகள் வரும் என்பதை அவ்வகைகளின் இலக்கணத்தில் அறிந்து கொள்ளலாம்.

    • ஈறு

    கலிப்பா, தனிச் சொல்லும் சுரிதகமும் கொண்டு முடியும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2017 10:47:56(இந்திய நேரம்)