தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வாழ்த்து அணி

  • 6.6 வாழ்த்து அணி

    உலகில் ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கூறுவதும் பாராட்டிக் கூறுவதும் இயல்பு. இவ்வாறு கூறுவதில் கூறுவார்க்கும் கேட்பார்க்கும் மகிழ்ச்சி சிறக்கிறது. மகிழ்ச்சி நிறைந்த உலகைக் காண்பதே கவிஞர்களின் நோக்கம். எனவே வாழ்த்திக் கூறும் மகிழ்ச்சிப் பொருளையே தனி ஓர் அணியாகத் தண்டி ஆசிரியர் கூறினார் எனலாம்.

    6.6.1 வாழ்த்து அணியின் இலக்கணம்

    இன்ன தன்மையை உடையார்க்கு இன்னது நிகழ்க என்று கவிஞர் தாம் கருதியதைச் சிறப்பித்துக் கூறுதல் வாழ்த்து என்னும் அணி ஆகும்.

    இன்னார்க்கு இன்னது இயைக என்றுதாம்
    முன்னியது கிளத்தல் வாழ்த்துஎன மொழிப
    (தண்டி, 88)
    (முன்னியது - கருதியது;
    கிளத்தல்
    - விதந்து கூறுதல் அஃதாவது சிறப்பித்துக் கூறுதல்.)

    எடுத்துக்காட்டு

    மூவாத் தமிழ்பயந்த முன்நூல் முனிவாழி!
    ஆவாழி! வாழி அருமறையோர்! - காவிரிநாட்டு
    அண்ணல் அனபாயன் வாழி! அவன்குடைக்கீழ்
    மண்உலகில் வாழி மழை!
    (மூவா - அழியாத; முன் நூல் - பழைமையான நூல்கள்;
    முனி - அகத்திய முனிவர்;- பசு; அண்ணல் - தலைவன்.)

    இப்பாடலின் பொருள்

    அழியாத தமிழ் தோற்றுவித்த பழைமையான நூல்களைக் கற்றுணர்ந்த அகத்திய முனிவர் வாழ்க! பசுக்கள் வாழ்க! அரிய வேதங்களைக் (தமிழ் மறைகளைக்) கற்றுணர்ந்த அந்தணர்கள் வாழ்க! காவிரியாறு பாய்கின்ற சோழ நாட்டுத் தலைவனாகிய அனபாயன் வாழ்க! அவனுடைய அரசாட்சிக்கு உட்பட்ட இவ்வுலகில் மழை வாழ்க!

    . அணிப்பொருத்தம்

    இப்பாடலில், அனபாய சோழன் வாழ்க எனவும், அவனுடைய நாட்டிற்கு இன்றியமையாதனவும் நன்மை பயப்பனவும் ஆகிய அகத்திய முனிவர், பசுக்கள், அந்தணர்கள், மழை என்ற அனைத்தும் வாழ்க எனவும் வாழ்த்திக் கூறியமையால் இது வாழ்த்து அணி ஆயிற்று.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 26-09-2017 11:42:20(இந்திய நேரம்)