தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

கு. அழகிரிசாமி அறிமுகம்

  • 4.1 கு. அழகிரிசாமி - அறிமுகம்

     

    சக்தி இதழ் மூலம் தமிழ்ச் சிறுகதை உலகில் தடம் பதித்தவர் எழுத்தாளர் கு.அழகிரிசாமி. அவர் இன்றைய சிறுகதை எழுத்தாளர்களுக்கு முன்னோடியாகத் திகழ்பவர். புதுமைப்பித்தனுக்குப் பின் தமிழ்ச் சிறுகதைத் தளத்தில் அதிகம் நினைத்துப் பார்க்கத்தக்கவர். அவருடைய கதைகள், அவர் பிறந்த கரிசல் மண்ணான திருநெல்வேலி மண்ணையும், அவர் வாழ்ந்த கால மக்களையும் நன்கு பதிவு செய்துள்ளன. அக்கதைகளில் ஆழமான மனித நேயத்தைக் காண முடியும். அவரது கதைகள் தமிழ் இலக்கியத்திற்குக் கிடைத்த கொடை எனலாம்.

    4.1.1 பிறப்பும் வளர்ப்பும்

    எழுத்தாளர் கு.அழகிரிசாமி திருநெல்வேலி மாவட்டம், கோவில்பட்டிக்கு அருகில் உள்ள இடைச்செவல் என்னும் ஊரில் 1923ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் நாள் பிறந்தார். வீட்டார் இவரைச் செல்லையா என்ற பெயரில் அழைத்து வந்தனர். சிறிய வயது முதற்கொண்டே இவர் படம் வரைவது, பாடல்களைத் தானே கற்பனையில் உருவாக்கிப் பாடுவது, பஜனைப் பாடல்கள் பாடுவது என்று தன்னைக் கலைப் பாங்கோடு வளர்த்துக் கொண்டவராவார். கோவில்பட்டி உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்புவரை படித்தார். பின்பு தானே முயன்று பல நூல்களைப் படித்தறிந்தும், நூல் வல்லோரிடம் பழகியும், தன் இலக்கிய அறிவையும், பிற துறை அறிவையும் வளர்த்துக் கொண்டார். தன் முப்பத்திரண்டாம் வயதில் சீதாலெட்சுமி என்ற பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டார்.

    • இறுதிக் காலம்

    எழுத்தாளர் கு.அழகிரிசாமி 47 ஆண்டுகளே வாழ்ந்துள்ளார். 1970ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் நாள் மறைந்தவர். அவர், தம் வாழ்நாளில் மிகப் பல நூல்களைத் தந்து சென்றுள்ளது அவரின் கடும் உழைப்பிற்குச் சான்றாகும். தாம் வாழ்ந்த காலத்திற்குள் கவிமணி, வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார், ரசிகமணி டி.கே.சி., திரு.வி.க., பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை, வெ.சாமிநாத சர்மா, தி.ஜ.ர., வ.ரா. போன்ற தமிழ்ப் பெரியார்களுடனும், சக்தி வை.கோவிந்தன், தமிழ்ப் புத்தகாலய அதிபர் கண. முத்தையா, நாகஸ்வரக் கலைஞர் காருக்குறிச்சி அருணாசலம் ஆகியோருடனும் நெருங்கிப் பழகியுள்ளார். இவ்வாறு, துறை வல்லார்களிடம் அவர் கொண்டிருந்த நட்பும் பழக்கமும் அவரைச் செழுமைப்படுத்தியதுடன், அவருடைய எழுத்தாளுமையையும் வளர்த்துள்ளன.

    4.1.2 எழுத்துலக நுழைவு

    கு.அழகிரிசாமி தொடக்கப் பள்ளி ஆசிரியராகத் தம் பணியைத் தொடங்கினார். பின்பு, சார்பதிவாளர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியில் அமர்ந்தார். பின்னர் அதை விடுத்து முழுநேர எழுத்தாளராக, பத்திரிக்கையாளராகத் தம்மை வளர்த்துக் கொண்டார். இவர், தம் பதினாறாவது வயதில் உறக்கம் கொள்வான் என்ற தலைப்பில் தம் முதல் சிறுகதையை எழுதினார். அது முதல், தம் இறுதிக் காலம் வரையில் எழுத்துத் துறையில் முன்னேறக் கடுமையாக உழைத்துள்ளார். புதுமைப்பித்தனைப் போலவே, இவர் பத்திரிக்கைத் துறையிலும், படைப்பிலக்கியத் துறையிலும் ஒரே நேரத்தில் ஈடுபட்டவராவார். 1943ஆம் ஆண்டு முதல் பிரசண்ட விகடன் துணை ஆசிரியராகவும், 1946இல் தமிழ்மணி பொறுப்பாசிரியராகவும், 1952ஆம் ஆண்டு வரை சக்தி இதழிலும் பணியாற்றினார். பின்பு மலேசியா சென்று 1957ஆம் ஆண்டு வரை தமிழ்நேசன் என்ற இதழில் துணையாசிரியராகப் பணிபுரிந்தார். 1958ஆம் ஆண்டு முதல் இரண்டாண்டுக் காலம் சென்னையில் காந்தி நூல் வெளியீட்டுக் குழுவின் துணையாசிரியராக இருந்தார். 1960 முதல் 1965 வரை நவசக்தி இதழில் பணியாற்றியுள்ளார்.

    • கையாண்ட இலக்கிய வகைகள்

    கு.அழகிரிசாமி பல இலக்கிய வகைகளைக் கையாண்டு, தம் இலக்கியப் படைப்பாளுமையை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர், நாடக ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், கட்டுரையாளர், இதழாசிரியர், உரையாசிரியர் என்று பல பரிமாணங்கள் இவருக்கு உண்டு. இவற்றைத் தவிர ஓவியம், கவிதை, கீர்த்தனை, பதங்கள் இவற்றிலும் தேர்ந்தவராக விளங்கினார். மேற்சுட்டிய கலைகளுள் இசையில் கு.அழகிரிசாமிக்கு விருப்பம் அதிகம். கர்நாடக இசையை முறையாகக் கற்றுக் கொண்டுள்ளார். தியாகராஜர் கீர்த்தனைகளின் மீது அளவற்ற பற்றுக் கொண்டவர். அவர் வாழ்வினை அடிப்படையாகக் கொண்ட திரிவேணி என்ற சிறுகதைப் படைப்பாக்கம்தான் அவர் பெயரை நிலை நாட்டியது.

    4.1.3 எழுதிய நூல்கள்

    அழகிரிசாமி கதைகள், அன்பளிப்பு, இரு சகோதரர்கள், கற்பக விருட்சம், காலகண்டி, சிரிக்கவில்லை, தவப்பயன், தெய்வம் பிறந்தது, வரப்பிரசாதம் என்ற சிறுகதைத் தொகுதிகளை எழுதியுள்ளார். இவற்றில், அன்பளிப்பு என்ற சிறுகதைத் தொகுதிக்காக 1970ஆம் ஆண்டின் சாகித்திய அக்காதமியின் விருதினைப் பெற்றுள்ளார். டாக்டர் அனுராதா, தீராத விளையாட்டு, புதுவீடு புதுஉலகம், வாழ்க்கைப் பாதை என்பன அவர் எழுதிய புதினங்களாகும். காளி வரம், மூன்று பிள்ளைகள் என்பன சிறுவர் கதைத் தொகுதிகளாகும். பலநாட்டுச் சிறுகதைகளையும், சோவியத் எழுத்தாளர்களுடைய படைப்புகளையும் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். கவிச்சக்கரவர்த்தி, வஞ்சமகள் என்பன அவர் எழுதிய நாடகங்களாகும். அண்ணாமலை ரெட்டியாரின் உரையுடன் கூடிய கம்பராமாயணம், காவடிச் சிந்து ஆகிய நூல்களைப் பதிப்பித்துள்ளார். இலக்கியச் சுவை, இலக்கியத் தேன், இலக்கிய விருந்து, இலக்கிய அமுதம், தமிழ் தந்த கவிச் செல்வம், தமிழ் தந்த கவியமுதம், தமிழ் தந்த கவி இன்பம் ஆகியன அவருடைய கட்டுரைத் தொகுதிகளாகும். அவருடைய இறப்புக்குப் பின் கு.அழகிரிசாமி கட்டுரைகள் என்ற பெயரிலும் ஒரு தொகுதி வெளிவந்துள்ளது. திருக்குறளுக்கு எளிய நடையில் மிகச் சுருக்கமாக உரை எழுதியுள்ளார். மலேசியாவில் இருந்த போது இலக்கிய வட்டம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் மலேசியா வாழ் தமிழர்களுக்காகப் படைப்பிலக்கியப் பயிற்சி அளித்துள்ளார். கு.அழகிரிசாமி சிறந்த இலக்கியச் சொற்பொழிவாளர் ஆவார். ஈழநாடு முழுவதும் பயணம் செய்து சொற்பொழிவாற்றியுள்ளார்.

    4.1.4 தனித் திறன்கள்

    கு.அழகிரிசாமி உயர்கல்வி படித்தவர் அல்லர் என்றாலும், தம்மைத் தனிப்பட்ட முறையில் தகுதிப்படுத்திக் கொண்டவராவார். அவர் சிறந்த இலக்கிய ஆராய்ச்சியாளராகவும் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். அவரது இலக்கியக் கட்டுரைகள், அவரது படிப்பின் அகலத்தைக் காட்டுவதுடன், அவரது ஆய்வுத் திறனையும் வெளிப்படுத்தி நிற்கின்றன. பிறமொழி இலக்கியங்களைத் தமிழ் மொழி இலக்கியங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்யும் ஒப்பாய்வு முறை அவரிடத்தில் காணப்படுகிறது. எங்ஙனம் சென்றிருந்தேன்?, காணி நிலம் என்ற கட்டுரைகள் அவருடைய ஒப்பாய்வுத் திறனுக்குச் சரியான எடுத்துக்காட்டுகளாகும். புகையிலையும் இலக்கியமும் என்ற கட்டுரை பல்துறை ஆய்வாகச் (Multi Disciplinary Research) சிறந்துள்ளது. சிறந்த நூல் மதிப்புரைகளையும் இவர் பத்திரிகை ஆசிரியராக இருந்த போது செய்துள்ளார். அத்துடன், கு.அழகிரிசாமி சிறந்த தகவல் சேகரிப்பாளராகவும் இருந்துள்ளார். சேகரித்த தொகுப்புகளைக் குறிப்புகளுடன் பாதுகாத்துள்ளார். மலேசியாவில், கு.அ. பரம்பரை என அடக்கமாகக் கூறிக்கொள்ளும் பல எழுத்தாளர்கள் இவருடைய பாணியில் தோன்றி இன்றும் கதை படைத்து வருகின்றனர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2018 11:11:31(இந்திய நேரம்)