Primary tabs
-
5.1 விந்தன்
விந்தன் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளி. நாளும் வாழ்க்கைக்குப் போராடும் ஒரு தொழிலாளியாக இருந்தவர். தம்மைப் போன்று பொருளாதாரத்தில் பிற்பட்டு விளங்கிய மக்களின் அன்றாட வாழ்வியலைக் கதைகளாகப் படைத்துள்ளார். அவை மனிதன் மனிதனுக்குச் செய்யும் அநீதிகளையும் கொடுமைகளையும் எடுத்துக் காட்டுவனவாக அமைந்தவை. 1942 முதல் 1975 வரை பல பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளியாகின.
விந்தன் செங்கற்பட்டு மாவட்டத்தில், நாவலூர் என்னும் சிற்றூரில் வேதாசலம் - ஜானகியம்மாள் தம்பதிகளுக்கு, 1916 செப்டம்பர் 22ஆம் நாள் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் கோவிந்தன். இவருடைய உடன்பிறந்தார் பெயர் சாமிநாதன்.
விந்தனின் பெற்றோர்கள் தம் மகனின் படிப்பில் போதிய கவனம் செலுத்தவில்லை. எனவே கோவிந்தன் தமக்கு விவரம் தெரிந்தவுடன் கல்வியின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டு, இரவுப் பள்ளிகளில் படித்துத் தம் அறிவை வளர்த்துக் கொண்டார். ஓவியம் வரைவதில் ஆர்வம் உடைய இவர் ஓவியப் பள்ளியில் சேர்ந்து, தம் திறனை வளர்த்துக் கொண்டார். 1936இல், ஜெமினி ஸ்டுடியோவில் விளம்பரப் பகுதியில் ஓவியராகித் தம் பணியைத் தொடங்கினார். பின்பு, இராஜாபாதர் என்ற தம் நண்பன் உதவியால், டாக்டர் மாசிலாமணி என்பவர் நடத்தி வந்த தமிழரசு என்ற மாத இதழில் அச்சுக் கோக்கும் பணியில் சேர்ந்தார். தமிழரசு இதழில் பணியாற்றிய போது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் போன்றோரின் தொடர்பும் நட்பும் கிடைத்தது. தமிழ்ப் படைப்பாளிகளின் எழுத்தினை அச்சுக் கோக்கும் வாய்ப்பினைப் பெற்ற விந்தன், அதன் மூலம் தம் அறிவை மேலும் வளர்த்துக் கொண்டார். பின்பு, தமிழரசு இதழை விட்டு விலகி ஆனந்த போதினி, சுதேசமித்திரன், தாருல் இஸ்லாம் போன்ற இதழ்களில் பணியாற்றி, பின்பு அனுபவம் மிகுந்த அச்சுக் கோப்பாளராக ஆனந்தவிகடன் இதழில் சேர்ந்தார். பின்பு கல்கி இதழிலும் பணியாற்றியுள்ளார்.
- இறுதிக் காலம்
- கையாண்ட இலக்கிய வகைகள்
விந்தன் இலக்கியச் சொத்துக்களைத் தவிரப் பிற சொத்துக்களைச் சேர்க்காதவர். 1973ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் நாள், இதய நோய் காரணமாகக் காலமானார். அவர்தம் இலக்கியப் படைப்புகள் மூலம் அவர் புகழ் தமிழுலகில் என்றும் நிலைத்து நிற்கும். 57 ஆண்டுகள் வாழ்ந்த அவர் 33 ஆண்டுகள் இலக்கியப் பணியாற்றியுள்ளார். இலக்கியப் படைப்பில் தம் வாழ்வைப் பின்னிப் பிணைத்துக் கொண்டவர் விந்தன். சாதாரண அச்சுக் கோக்கும் பணியில் தொடங்கித் தனித்துவம் வாய்ந்த படைப்பாளியாக உயர்ந்த அவரது வாழ்க்கை குறிப்பிடத்தக்கதாகும்.
1942இல் கல்கியில் பணியாற்றத் தொடங்கிய போது, அவ்விதழில் பாப்பா மலர் பகுதியில் விஜி என்ற பெயரில் எழுத்துலக வாழ்வைத் தொடங்கினார். 1943இல் கல்கி ஆசிரியர் விந்தன் என்ற புனைபெயரை அவருக்குத் தந்து, கல்கி இதழின் ஆசிரியர் குழுவில் அவரை இணைத்துக் கொண்டார்.
1946இல் விந்தன் எழுதிய முல்லைக் கொடியாள் என்ற சிறுகதைத் தொகுப்பிற்குத் தமிழ்வளர்ச்சிக் கழகம் முதற்பரிசு வழங்கியது. அது முதல் அவர், நாடறிந்த எழுத்தாளரானார். 1948இல், தம் முதல் நாவலான கண்திறக்குமா? என்பதைப் பொன்னி என்ற இதழில் தொடர் கதையாக எழுதினார். இந்நாவல் தமிழ் வாசகர் மத்தியில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. தமிழ் ஆர்வலர்களின் பாராட்டையும் பெற்றது. 1950இல் கல்கி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, கல்கி இதழில் பாலும் பாவையும் என்ற அவரது புகழ்பெற்ற நாவலைத் தொடர்கதையாக எழுதினார்.
1951இல் கல்கி இதழ்ப் பணியை விட்டு விலகிய விந்தன், திரைப்படத் துறையில் நுழைந்தார். ஏ.வி.எம். கதை இலாக்காவில் சேர்ந்தார். வாழப் பிறந்தவள், பார்த்திபன் கனவு, குழந்தைகள் கண்ட குடியரசு, சொல்லு தம்பி சொல்லு, மணமாலை என்ற படங்களுக்கு வசனமும், அன்பு, கூண்டுக்கிளி என்ற படங்களுக்குக் கதையும் வசனமும், பல படங்களுக்குப் பாடல்களும் எழுதினார்.
1954
ஆகஸ்டு 15ஆம் நாள் மனிதன் என்ற மாத
இதழைத் தாமே தொடங்கி நடத்தினார். ஆனால் இவ்விதழ் 10 மாதங்களே வெளிவந்தது.
1969இல் புத்தகப் பூங்கா என்ற பெயரில்
ஒரு பதிப்பகம் தொடங்கினார்.
விந்தன் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், நூல், குட்டிக் கதைகள், சிந்தனை நூல்கள், கட்டுரைகள் என்று பலவற்றிலும் தம் திறமைகளைப் பதித்துள்ளார்.
முல்லைக் கொடியாள், ஒரே உரிமை, சமுதாய விரோதி, விந்தன் கதைகள், இரண்டு ரூபாய், ஏமாந்துதான் கொடுப்பார்களா?, நாளை நம்முடையது, இதோ ஒரு மக்கள் பிரதிநிதி, நவீன விக்கிரமாதித்தன் என்று ஒன்பது தொகுதிகளாக இவருடைய சிறுகதைகள் வெளியாகி உள்ளன.
கண் திறக்குமா?, பாலும் பாவையும், அன்பு அலறுகிறது, மனிதன் மாறவில்லை, காதலும் கல்யாணமும், சுயம்வரம் என்ற நாவல்களைப் படைத்துள்ளார். இவருடைய தெருவிளக்கு என்ற நாவல் முற்றுப் பெறவில்லை.
விந்தன் எம்.கே. தியாகராஜ பாகவதர் வாழ்க்கை வரலாற்றினை எழுதியுள்ளார். நடிகர் எம்.ஆர். ராதாவின் வாழ்க்கையினைச் சிறைக்காலச் சிந்தனைகள் என்ற பெயரில் எழுதியுள்ளார்.
பாட்டினில் பாரதம் என்ற கவிதை நூலையும், பசிகோபுரம் என்ற புடைநூலையும், ஓ மனிதா, புதிய ஆத்திசூடி, பெரியார் அடிச்சுவட்டில் என்ற சிந்தனை நூல்களையும், வேலை நிறுத்தம் ஏன்?, விந்தன் கட்டுரைகள் என்ற பெயர்களில் கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார்.
இவரது குட்டிக் கதைகள் மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
இவை தவிரத் தொகுக்கப்படாத பிற குட்டிக் கதைகளையும் கட்டுரைகளையும் தொகுக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
‘வாழ்ந்தாலும் லோ சர்க்கிலோடு வாழ்வேன், செத்தாலும் லோ சர்க்கிலோடு சாவேன்’ என்று சொல்லி, அதன்படி உழைக்கும் மக்களோடு வாழ்ந்தவர் விந்தன். தம் சொந்த வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் ஏற்பட்ட பல சோதனைகளுக்கு இடையேயும் தொடர்ந்து இலக்கியப் பணியாற்றியவர்.
விந்தன் பல நல்ல எழுத்துலக நண்பர்களையும் பெற்றிருந்தார். இவரது நூல்களுக்குப் பேராசிரியர் மு.வ., புகழ்பெற்ற இலக்கிய விமர்சகர் க.நா.சு., பேராசிரியர் மு. பரமசிவம், கல்கி, கி. சந்திரசேகரன் போன்றோர் முன்னுரை நல்கியுள்ளனர். ஜெயகாந்தனின் ‘ஒருபிடி சோறு’ என்ற சிறுகதைத் தொகுப்பினைத் தம் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டு முதன் முதலில் ஜெயகாந்தனை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் விந்தன்தான்.