தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

3.3 வரலாற்றுச் சிறுகதைகள்

  • 3.3 வரலாற்றுச் சிறுகதைகள்

    வரலாற்று நிகழ்ச்சிகளைப் பொருத்தமான இடங்களில் கற்பனையைச் சேர்த்துக் கலை வடிவத்துடன் படைக்கப்படுபவை வரலாற்றுச் சிறுகதைகள். இது குறித்து அண்ணா, “வரலாறு என்பது மன்னர்களில் ஆட்சி முறை என்று கொள்வதை விட அவர்தம் ஆட்சியின் வீழ்ச்சிக்கும் சூழ்ச்சிக்கும் காரணமாய் அமைந்திருந்தோரை வெளிப்படுத்தல்” என்பார். இவ்வகையிலேயே அண்ணா படைத்த வரலாற்றுச் சிறுகதைகள் அமைந்துள்ளன எனலாம். திராவிட நாடு பொங்கல் மலரில் (20.01.46) புலி நகம் என்ற வரலாற்றுச் சிறுகதை வெளிவந்தது. பிடி சாம்பல் திராவிட நாடு வார ஏட்டிலும் (18.05.47), திவ்யசோதி திராவிட நாடு பொங்கல் மலரிலும் (13.01.52), தஞ்சை வீழ்ச்சி திராவிடநாடு பொங்கல் மலரிலும் (14.1.53), ஒளியூரில் திராவிடநாடு வார இதழிலும் (12.2.56), இரும்பாரம் திராவிடநாடு வார ஏட்டிலும் (13.06.48) ,பவழ பஸ்பம் திராவிடநாடு பொங்கல் மலரிலும் (14.01.54) வெளிவந்தவை.

    3.3.1 பரஞ்சோதி சிறுத்தொண்டராதல்

    பல்லவ மன்னன் நரசிம்ம வர்மனின் படைத்தளபதியான பரஞ்சோதியே அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவரான சிறுத்தொண்டர் என்பது நாம் அறிந்ததே. நரசிம்ம வர்ம பல்லவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் படைத்தளபதி பரஞ்சோதி தலைமையில் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்தான். அந்நாட்டின் தலைநகராகிய வாதாபியைத் தீக்கு இரையாக்கினான். சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்து மாபெரும் வெற்றி பெற்றான். பரஞ்சோதியின் படைத் தலைமையையும், வீரத்தையும் மக்கள் புகழ்ந்தனர். சைவரான பரஞ்சோதியின் புகழைக் கேள்வியுற்ற வைணவர்கள் பொறாமை கொண்டு மன்னனிடம் பரஞ்சோதிக்கு எதிராகப் பேசி அரசனை மனமாற்றம் அடையச் செய்தனர். படைத்தளபதி பரஞ்சோதி படைத்தொழிலைத் துறந்து சிறுத்தொண்டராக மாறினார். சைவப் பற்றுக் கொண்ட படைத்தளபதி பரஞ்சோதியைச் சமயக் காழ்ப்புணர்ச்சி காரணமாக வஞ்சம் தீர்த்துக் கொண்டனர். இதனால்தான் படைத்தளபதி சிறுத்தொண்டராக மாறியதாகப் பிடி சாம்பல் சிறுகதை சித்திரிக்கிறது.

    3.3.2 மராட்டியர் ஆட்சி

    தமிழக வரலாற்றில் நாயக்கர்கள் வசமிருந்த தஞ்சை மராட்டிய மன்னரின் ஆட்சிக்கு மாறியது. இவ்வரலாறு எழுத்தாளர்களிடையே மாறுபட்ட கருத்துகளைத் தோற்றுவித்துள்ளது. கு.ப.ரா. என்ற மணிக்கொடி எழுத்தாளர் தஞ்சை மராட்டியர் கைக்கு வந்ததை துரோகமா என்னும் சிறுகதையின் கருப்பொருள் ஆக்கி, அதில் வெங்கண்ணா என்னும் கதைமாந்தர் செயலை நியாயப்படுத்துகிறார். ஆனால் அண்ணா தஞ்சை வீழ்ச்சிக்கு வெங்கண்ணாவின் செயலே காரணம் என்று கூறுமுகமாகத் தஞ்சை வீழ்ச்சி என்ற சிறுகதையைப் படைத்துள்ளார். இக்கதையில் தான் பிறந்த மண்ணையே மாற்றானுக்குக் காட்டிக் கொடுத்த வெங்கண்ணாவின் இரண்டகச் செயலே தஞ்சை வீழ்ச்சிக்குக் காரணம் என்று அவர் காட்டியிருப்பதைக் காணலாம்.

    3.3.3 திருமலை கண்ட திவ்யசோதி

    மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் பேரும் புகழும் பெற்று விளங்கியவர் திருமலை நாயக்க மன்னர். திருமலை நாயக்க மன்னரின் மறைவு குறித்துப் பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன. இக்கருத்தைக் கருவாகக் கொண்டு புனையப்பட்ட வரலாற்றுச் சிறுகதைதான் திருமலை கண்ட திவ்யஜோதி.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டாச்சாரியார் மகள் சுந்தரவல்லியின் காதலைத் திருமலை மன்னன் பெற்றான். கருவுற்ற மங்கை அவமானம் தாங்காமல் நஞ்சுண்டு மடிந்தாள். மகள் மாரடைப்பால் இறந்தாள் என்று வெளியில் கூறினாலும் உள்ளுக்குள் பட்டாச்சாரியார் மனம் மன்னனைப் பழிவாங்கத் துடித்தது. மன்னனின் தயவால் கிறித்துவ மதம் பரவுவதைக் கண்டு சினம் கொண்ட சிலருடன் சேர்ந்தார். பொருள் நெருக்கடியால் மன்னன் இடர்ப்பட்டுக் கொண்டிருந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு அவனைப் பழி வாங்கினார். பக்திப் பரவசத்தில் மன்னர் ஜோதியில் கலந்து விட்டார் என்று செய்தி பரப்பப்பட்டது என்பதைக் கூறும் கதைதான் திவ்யஜோதி.

    3.3.4 இரும்பாரம்

    அமெரிக்கா என்னும் புதிய கண்டத்தைக் கண்டுபிடித்த கொலம்பசின் வரலாற்றில் ஏற்பட்ட துயரமான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட வரலாற்றுச் சிறுகதை இரும்பாரம். கொலம்பசின் புதிய கண்டத்தைக் காணும் முயற்சியில் பல நாட்டு மன்னர்களிடமும் அவன் உதவி வேண்டினான். ஸ்பெயின் நாட்டு மன்னரும் அரசி இசபெல்லாவும் மட்டுமே ஆக்கமும் ஊக்கமும் அளித்தனர். புதிய கண்டத்தைக் கண்டு மகிழ்ந்த கொலம்பசுக்கு மாபெரும் வரவேற்புக் கிடைத்தது. இவர் புகழைக் கண்டு பொறாமை கொண்ட வஞ்சகர்கள் அரசியின் நெஞ்சில் நஞ்சைத் தூவினர். இந்தச் சூழ்ச்சி வலையில் சிக்கிய அரசி கொலம்பசின் அதிகாரங்கள் அனைத்தையும் பறித்து வேறொருவரிடம் கொடுத்தாள். கொலம்பசின் கையிலே விலங்கு பூட்டப்பட்டது. மக்கள் கிளர்ந்தெழுந்தனர். விலங்கு அகற்றப்பட்டது. ஆயினும் தான் இறக்கும்போது தன்னோடு சேர்த்து அந்த விலங்கினையும் புதைக்குமாறு கொலம்பசு கேட்டுக் கொண்டார். புதிய கண்டத்தைக் கண்டுபிடித்து நாட்டுக்குப் பெருமை சேர்த்த மாவீரனின் வாழ்க்கையில் நிகழ்ந்த துயர சம்பவத்தை இரும்பாரம் எனும் கதையில் உருக்கமாக வெளிப்படுத்தியுள்ளார் அண்ணா.

புதுப்பிக்கபட்ட நாள் : 17-08-2017 12:42:19(இந்திய நேரம்)