தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4.2 சமூகச் சிறுகதைகள்

  • 4.2 சமூகச் சிறுகதைகள்

    இன்றைய அவசர யுகத்தில் மனிதன் சுயநலம் மிகுந்தவனாக இருப்பதும், சுயநலம் மிகுந்த இந்த மனிதர்கள் நிறைந்த சமுதாயம் சீர்கெட்டுப் போவதும் ஆகிய சூழலைப் பார்த்து ஆசிரியர் கொள்ளும் தார்மீகக் கோபமும், அதன் விளைவுகளுமே இவர் கதைகளுக்குக் களன்கள் ஆகின்றன. இவர் படைப்புக்களில் அலுவலகங்களின் அவலமும், அதிகாரிகளின் ஆணவப் போக்கும், காவல் துறையினரின் அலட்சியப் போக்கும், லஞ்ச லாவண்யங்களின் சீர்கேடும், திரையுலக அவலங்களும் அழுத்தத்துடனும், அங்கதத்துடனும் பேசப்படுகின்றன.

    “என்னுடைய பெரும்பாலான கதைகள் சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் என்ற தார்மீகக் கோபத்தில் எழுந்தவை” என்று அவரே குறிப்பிடுகின்றார்.

    வறியவர் வாழ்க்கையின் அவலங்களும் பல கதைகளுக்குக் கருப்பொருள் ஆகின்றன. குடும்ப உறவுகள், அடிப்படை அன்பின் வலிமை ஆகியவை எடுத்துக் காட்டப் பட்டாலும், பல கதைகளில் குடும்ப உறவுகள் போலியாக இருப்பதும் பணத்தாசை காரணமாக உறவுகள் வலிமை இழந்து இருப்பதும் சுட்டிக் காட்டப்படுகின்றன.

    4.2.1 வறியவர் அவலங்கள்

    இல்லாதவர்கள் உழைப்பைச் சுரண்டும் அவலம் ‘வேலையில் காயம்’ சிறுகதையில் கூறப்படுகிறது. முனுசாமி, அம்சா இருவரையும் வீட்டு வேலை செய்ய வைத்துவிட்டு, பள்ளிக் கூடத்தில் பியூனாகவும், ஆயாவாகவும் பதிவேட்டில் காட்டி அவர்களுக்கு ஆயிரத்து நான்கு ரூபாய் பில் போட்டு இருநூறு ரூபாய் கொடுக்கின்றனர் நயவஞ்சக முதலாளித் தம்பதிகள், வேலை நிரந்தரமாகும் வரை பொறுத்துக் கொள்ளலாம் என்றிருந்த அவர்கள் பொறுமையும் போய்விட்டது. மனிதாபிமானம் அற்ற அந்த முதலாளி அம்மாவின் பேச்சும், செயலும் அம்சாவை இந்த வேலையைத் தூக்கியெறியச் செய்தது.

    "ஏழைகளோட ரத்தத்தைச் சட்ட விரோதமாக உறிஞ்சுகிற ஒன் பிரின்ஸ்பால் புருஷன் ஸ்கூலுல வேலை பாக்கிறதை விட மயானத்துல பிணத்தைக் காக்கலாம்" என்று கூறிவிட்டு வேலையைத் தூக்கியெறிந்து விட்டுப் புறப்படுகிறாள் அம்சா (வேலையில் காயம், மனம் கொத்தி மனிதர்கள்). வறியவராய் இருப்பினும் அவர்கள் தங்கள் சுயமரியாதையைப் பாதுகாத்துக் கொள்பவராகவே இருப்பதை இவருடைய கதைகள் நமக்குக் காட்டுகின்றன. வறியவன் ஒருவன் பற்றிய சமுத்திரத்தின் வர்ணனையைப் பாருங்கள்: "அவன் வயது வாக்குரிமைக்குத் தகுதி பெற்று விட்டாலும் உடம்போ வறுமைக் கோட்டுக்குக் கீழேயே நின்றது. பூவாகாமலே பிஞ்சாய்ப் பழுத்தவன் போல் ஒட்டிய உடம்புக்காரன்; கிழடுபட்ட இளமை முகம், காய்ந்து போன முதுமைக் கண்கள் அவனுக்கு. இருபது வயதுதான் ஆயுளின் உயர்ந்தபட்ச வயது என்பது மாதிரியான பத்தொன்பது வயதுக்காரன்" (ஒரு போலீஸ் படையின் கிராமப் பிரவேசம்).

    4.2.2 அலுவலக அவலங்கள்

    நேர்மை இல்லாத ஒரு காவல்துறை அதிகாரி, தன் சொந்த வேலைகளுக்கு வண்டி ஓட்டிச் செல்ல மறுத்த ஜீப் ஓட்டுநரை சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்றி விடுகிறார். ஓட்டுநர், தன் உயர் அதிகாரியின் இச்செயலைக் கடிதத்தில் குறிப்பிட்டு, வேலை மாற்றத்தால் குடும்பத்துக்கு ஏற்படும் இழப்புகளைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்துவிட்டு இறந்து விடுகிறார். சோதனை செய்யும் போது இக்கடிதம் கிடைக்கிறது. இக்கடிதத்தைக் கிழித்தெறிந்து விடுமாறும், இல்லையென்றால் தன் வேலைக்கு ஆபத்து வரும் என்றும், தன் குடும்பம் நடுத்தெருவில் நிற்கும் என்றும் அதிகாரி கெஞ்சவே கடிதம் கிழிக்கப்பட்டு விடுகிறது. இதனை விசாரிக்க வரும் மேல் அதிகாரி இதையெல்லாம் கண்டுபிடித்து விடுகிறார். சப் இன்ஸ்பெக்டர், ஹெட் கான்ஸ்டபிள் பயந்து நடுங்கி நிற்கிறார்கள். கண்கள் கெஞ்சுகின்றன.

    "நீங்க செய்த காரியத்தாலே ஒரு டிரைவரோட குடும்பம் நடுத்தெருவுல நிக்குது! ஒரு பெரிய அதிகாரியைக் காட்டிக் கொடுக்காம இருக்கிறதுக்காக நியாயத்தைக் காட்டிக் கொடுத்திட்டீங்க. நீங்க செய்திருக்கிற காரியத்திற்கு இப்பவே ஒங்களை சஸ்பெண்ட் பண்ணலாம்" என்று கோபிக்கிறார். "ஆனாலும் என்ன பண்றது ஒங்களைக் காட்டிக் கொடுத்தால் டிபார்ட்மெண்டுக்குக் கெட்ட பேரு வருமே என்று யோசிக்கிறேன் இல்லேன்னா..." என்று கத்துகிறார்.

    இதே போல மாவட்ட மருத்துவ அதிகாரியைச் சந்தித்து உண்மையைக் கக்கச் செய்கிறார்.

    மருத்துவ அதிகாரி அழுதார். அவருக்கும் இரக்கம் காட்டப்பட்டது.

    குப்பனைச் சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்றிய ஏகாம்பரத்தை அவரது மேலதிகாரி அதட்டுகிறார். அவன் குடித்து விட்டு அலுவலகத்தில் கலாட்டா பண்ணியதற்காக மாற்றல் கொடுத்ததாகக் கூறுகிறார்.

    "எப்பவாவது அவன் குடிக்கிறான்னு மெமோ கொடுத்திருக்கீங்களா?"

    "இல்லை சார்".

    "ஏன் இல்ல? ஏன்னா அவன் குடிகாரன் இல்ல. நீங்க ஒரு தடவை பேமிலியோடு மகாபலிபுரம் போறதுக்கு வண்டி கேட்டீங்க. என்னால கொடுக்க முடியல. குப்பன் முடியாதுன்னுட்டான்."

    இவருக்கும் இரக்கம் காட்டப்பட்டது. எல்லாரிடமும் இரக்கம் காட்டி அவர்களை வேலையில் நீடிக்கச் செய்தார். தவறு செய்தவர்கள் எல்லாரும் ஒன்றாகி விட்டார்கள். தவறு செய்ய மாட்டேன் என்று சொன்ன குப்பன் இறந்து போனான். அவன் குடும்பத்திற்கு எந்த உதவித் தொகையும் கிடைக்கவில்லை.

    ஏழையின் வாதம் செல்லாது என்பதைப் போல் குப்பன் மனைவி எழுதிய மனுவிலும் உண்மை மறைக்கப்பட்டு விட்டது. ஆனால் அது தெரியாமலே ஏமாந்துபோய் நிற்கும் அந்த அப்பாவியின் கடிதம் படிப்பவர் நெஞ்சைத் தொடுகிறது.

    பொறுப்புள்ள அதிகாரிகள் செய்யும் அநியாயங்கள் எல்லாம் ஓர் ஏழைக்கு இழைக்கப்படும் கொடுமைகளாகின்றன. இந்த அவலத்தைச் சொல்லும் சிறுகதைதான் ‘ஒரு நியாயம் விதவையாகிறது’ (மரம் கொத்தி மனிதர்கள்).

    4.2.3 காவல் துறை அவலங்கள்

    அநியாயங்களைத் தட்டிக் கேட்கும் உரிமையும் பொறுப்பும் பெற்றிருக்கும் காவல்துறை அதிகாரிகளின் மனப்பாங்கு எப்படியிருக்கிறது. தங்கள் பதவிக்குரிய சக்தியை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைப் பல இடங்களில் எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.

    தங்கள் அலுவல் தொடர்பாக வேனில் காவல்துறை அதிகாரிகள் சென்று கொண்டிருக்கின்றனர். டிரைவர், "வேன் வாடகை பாதியாவது கொடுக்கணும்னு முதலாளி சொல்லச் சொன்னாருங்க" என்றான்.

    "அடி செருப்ப . நீயும் கம்பி எண்ணணுமா?"

    "நான் பேசல சார்! முதலாளி கேட்கச் சொன்னார்!"

    “ஒன் மொள்ளமாறி முதலாளியை எங்கிட்ட பேசச் சொல்லுடா! லைசென்ஸ் இல்லாம ஆம்னி பஸ் ஓட்டுறான். புளு பிலிம் வேற போட்டுக் காட்டுறான்! இதெல்லாம் கண்டுக்காம இருக்கோம். எங்களுக்கு ஒரு வேன் கூடக் கொடுக்காட்டி எப்படிடா?" (ஒருபோலிஸ் படையின் கிராமப் பிரவேசம், மனம் கொத்தி மனிதர்கள்).

    குடியரசுத் தலைவர் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தையும் மீறி ஓர் ஐம்பது வயதுப் பெண்மணி அருகில் வந்து குடியரசுத் தலைவரிடம் ஒரு விண்ணப்பமும் செய்து விட்டாள். குத்தாம்பட்டி கிராமத்தில் கூட்ஸ் ரயில் மெதுவாக வரும்போது இரும்புத் தகடு, கோதுமை மூட்டை ஆகிய பொருள்கள் எடுக்கப்பட்ட அநியாயத்தை எடுத்துச் சொன்னதால் தன் மகள் கடத்தப்பட்டது முதலான தனக்கு ஏற்பட்ட அவலங்களை எடுத்துரைத்தார். குடியரசுத் தலைவர் ஆளுநரிடம் சொல்ல, அவர் அதிகாரிகளைப் பார்க்க, அதிகாரிகள் தத்தம் கீழ் அலுவலர்களை முறைத்தனர்.

    குடியரசுத் தலைவர் அப்பெண்மணிக்கு முதியோர் பென்ஷனும் வழங்க உத்தரவிட்டார். அந்த அம்மாவுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்குக் காரணமானவர்களைக் கைது செய்யவும் உத்தரவிட்டார். ஆனால் நடந்தது என்ன? "இந்த இடத்துக்கு எப்படீடி வந்தே" என்று அவளை இடித்துத் துன்புறுத்தியதுதான் அவள் கண்ட பலன். விமான நிலையத்தில் குடியரசுத் தலைவர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் புறப்பட்டுக் கொண்டிருந்தார் என்று முடிவு பெறுகிறது ‘பாரத மாதா’ என்ற இச்சிறுகதை (மனம் கொத்தி மனிதர்கள்).

    4.2.4 திரையுலக அவலங்கள்

    திரையுலகம் ஒரு புறம் கலையை வளர்க்கிறது. ஆனால் ஒரு சில ஏமாற்றுப் பேர்வழிகள் அதை ஒரு மோசமான வியாபாரமாகச் செய்யும் அவலத்தை எள்ளலோடும், எரிச்சலோடும் ஆசிரியர் படம் பிடிப்பதைப் பாருங்கள்.

    எழுத்தாளர் மயில்நாதனைத் தேடி ஓர் இளைஞன் வருகிறான். வந்தவன் தன்னை அவரிடம் அறிமுகப்படுத்திக் கொள்கிறான். "என் பெயர் கலிங்கன். நீங்க எழுதுன நாவல் இருக்குதே 'பங்க மனிதன்', அதை எங்க இயக்குநர் அரூப சொரூபன் படமாக்குவது என்று தீர்மானிச்சுட்டார். உங்களுக்காகக் காத்துக்கிட்டு இருக்கார். புறப்படுங்க."

    "தம்பி. ஒரு எழுத்தாளன் கிட்ட வரும்போது நாவலைப் படிக்காட்டாலும், அதோட பெயரையாவது ஞாபகம் வச்சுக்கணும். நான் எழுதியது மனித பங்கம்."

    "கோபப்படாதீங்க அண்ணே. ஏகப்பட்ட நாவல் படிக்கிறோமா.  அதனால சில சமயம் ஒரு கதை இன்னொரு டைட்டிலுக்குப் போயிடுது."

    "சினிமாக்காரங்க அதிகமாகப் படிக்க மாட்டாங்கன்னு கேள்விப்பட்டேன்".

    "தப்புண்ணே தப்பு. நாங்க பாக்காத நாடகங்கள் இல்லை. படிக்காத நாவல்கள் இல்லை. ரசனைக்காக அல்ல. எல்லாம் உல்டாவுக்கும், சொருகிறதுக்கும்தான்.

    நாடகத்தில் வரும் வித்தியாசமான மாமனார் கேரக்டரை சினிமாவில் மாமியார் ஆக்கிடுவோம். வாரப் பத்திரிகையிலே வருகிற ஜோக்குகளை அங்கங்கே காட்சியா காட்டிடுவோம். இதுக்குப் பேரு சொருகிறது. உல்டாவுக்கும் சொருகிறதுக்கும் பலரை வேலையில் வைத்திருக்கிறோம்" என்று விளக்குகிறான்.

    எழுத்தாளர் மயில்நாதன் "இவனுவ கலைஞர்கள் இல்லை - சிறையில் திணிக்க முடியாத கொள்ளைக்காரர்கள்" என்று திட்டினாலும், வறுமையின் பிடியில் வேறுவழியின்றி ஒத்துக் கொள்கிறார். மயில்நாதனின் கதை திரையில் முற்றிலுமாக மாறுகிறது. வாச்சாத்தியின் அவலக் கதையைக் காமக் கதையாகத் திரைப்படக் கலைஞன் மாற்றுகிறான். திரையுலக அவலங்களைக் கண்டு பொறுக்க முடியாமல், கதைக்கு வாங்கிய பத்தாயிரம் ரூபாய் நோட்டுக் கற்றையை இயக்குநரின் கை விளிம்பிற்குள் திணித்துவிட்டுக் கோபத்தை மௌனமாக்கி வெளியேறி விடுகிறார் எழுத்தாளர்.

    திரையுலகின் உள்ளே நடக்கும் அவலங்கள் இப்படியென்றால், திரைப்பட மோகத்தால் மக்களும் எப்படி மாறிப்போய் இருக்கிறார்கள் என்பதைச் சொல்லும் சிறுகதை ‘நிசங்களை விழுங்கிய நிழல்கள்’ (ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்).

    நியாய விலைக் கடைகளில் நடக்கும் ஊழல்கள் கண்டு, அதைத் தட்டிக் கேட்க வேண்டும். ஊழல் செய்பவர்களை இந்த உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். என்ற போர்க்குணத்தோடு பெண்கள் கிளம்புகிறார்கள். பத்திரிகைச் செய்திகளில் வந்த திரைப்பட நாயகர்கள் பற்றிய கிசுகிசுப்புச் செய்தியைப் படிக்கிறார்கள். அதிலேயே ஆழ்ந்து போய் மனம் ஒன்றி நியாயம் கேட்கச் செல்ல வேண்டும் என்பதையே மறந்து போகிறார்கள்.

    நிழலை நிசமாக நினைக்கிறார்கள். நிசத்தை மறந்து போகிறார்கள். பத்திரிகைகள் திரைப்பட நடிகர்கள் பற்றிய செய்திகளை விவரிப்பதும் இதற்கு ஒரு காரணம். ‘தொட்டால் கை வழுக்கும். அத்தனை பத்திரிகைகளும் நல்ல பாம்பு படமெடுத்தது போல் பக்கங்களை விரித்துக் காட்டிக் கொண்டிருந்தன. அவற்றின் உட்பக்கங்களோ புதைமணலாய்த் தோற்றங்காட்டின’ என்கிறார் சு.சமுத்திரம் (ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்).

    4.2.5 குடும்ப அவலங்கள்

    குடும்ப உறவுகள் வலிமை வாய்ந்தவை. ஆண்களைவிடப் பெண்கள் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இக்காலத்தில் குடும்ப உறவுகளையே புறக்கணிக்கும் அளவு மனிதன் பணத்தாசை பிடித்தவனாக இருக்கின்றான். இவை போன்ற கருத்துகளை சமுத்திரம் கதைகளில் காணலாம். தனக்குத் திருமணம் ஆகாவிட்டாலும் தம்பிக்குத் திருமணம் செய்து வைத்துத் திருப்திப்பட நினைக்கும் தமக்கையின் பாச உணர்வைச் சொல்கிறது ‘அவசரப் பொரியல்’ (மனம் கொத்தி மனிதர்கள்).

    மனநிலை சரியில்லாத 30 வயது மீனாட்சி, அண்ணன் குடும்பத்தில் இருக்கிறாள். அவளால் யாருக்கும் துன்பமில்லை. பேனாவை எடுத்துப் பல் குத்துதல் போன்ற காரியங்களைச் செய்வாள் - திட்டினால் தலையைக் குனிந்து கொள்வாள். ஆபத்தில்லாத பைத்தியம் என்று சொல்லிக் கொண்டே அண்ணன் மகள் ஒரு வாலிபனுடன் வீட்டுக்குள் வந்தாள். வீட்டில் யாருமில்லை. உள்ளறைக்குப் போனார்கள். அண்ணன் மகள் பயத்துடன் சிரிப்பதைக் கேட்ட மீனாட்சி உள்ளே ஓடிச் சென்று விமலாவை மாறி மாறிக் கன்னத்தில் அடித்தாள். தடுக்க வந்த வாலிபனை ஓங்கி ஒரு அறை கொடுத்து வாசலுக்கு வெளியே தள்ளினாள். அருகில் வந்த விமலாவின் கண்களைத் துடைத்தாள். ஒரே ஒரு வினாடிதான். மீனாட்சி வழக்கமாக அமரும் இடத்தில் முழங்கால்களுக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டாள். மனநிலை சரியில்லாத பெண்ணும் அண்ணன் மகளைத் தக்க சமயத்தில் காப்பாற்றும் அன்பு நிறைந்தவளாய் இருப்பதைச் சொல்லும் கதை ‘மீனாட்சி நிமிர்ந்து பார்க்கிறாள்’ (ஒரு சத்தியத்தின் அழுகை),

    மன நோயாளி குணமான பின்னரும் குடும்பத்தாரும் ஊராரும் அவனைப் பைத்தியம் என்று கருதுவதும், பேசுவதும் அவனை மீண்டும் பைத்தியமாகவே ஆக்கிவிடும் அவலத்தைச் சொல்லும் கதை ‘மனம் கொத்தி மனிதர்கள்’ (மனம் கொத்தி மனிதர்கள்). ஆணும் பெண்ணும் சமம் என்று சொன்னாலும் இன்று எழுதாத சமூகச் சட்டங்கள் பெண்களை உணர்வு உள்ளவர்களாக நினைப்பதில்லை. அதனால் வரதட்சணை கொடுக்க வேண்டிய அவலம் இன்றைய சமுதாயத்தில் உள்ளது. மூன்று பெண்களைப் பெற்ற சிவராமன் மூன்றாவது பெண்ணின் திருமணத்துக்குப் பத்தாயிரம் ரூபாய்க்கு நகை போடச் சம்மதிக்கிறார். முதல் இரண்டு பெண்களும் தங்கள் பங்கு குறைந்து போய்விட்டதாகத் தந்தையோடு சண்டை போட, கிராமத்து வீட்டையும் நிலத்தையும் விற்று இருவருக்கும் பணம் அனுப்புகின்றார்.

    அவருடைய மகன் தந்தையின் தன்மானத்தை விட இரண்டாயிரம் ரூபாய் பணத்தையே பெரிதாக நினைக்கிறான். தங்கைக்கு மாமனாராகப் போகின்றவரிடம் எட்டாயிரம் ரூபாய் தான் புரட்ட முடிந்தது என்கிறான். மணமகனோ இரண்டாயிரம் வராவிட்டால் தாலி கட்ட முடியாது என்கிறான். சிவராமன் மகளின் திருமணம் நின்று விடக் கூடாதே என்று சம்பந்தியின் கால்களில் விழுந்து எழுந்து விட்டார். மணமகன் பந்தலை நோக்கி வர, கெட்டி மேளம் முழங்கியது. சாந்தியின் கழுத்தை நோக்கி வந்த தாலிக் கயிறு அவளால் தட்டி விடப்பட்டது.

    கணவன், மனைவி என்ற புனிதமான உறவுக்கு விலை பேசியவனைக் கணவனாக ஏற்க மறுத்து விட்டாள் சாந்தி. தந்தையிடம் மன்னிப்புக் கேட்கிறாள்.

    "பணத்தைக் கொடுத்து பந்தத்தை வாங்குவதை விட உங்களையும், உங்களுக்குப் பிறகு கடவுளையும் நினைத்துக் காலத்தைக் கழித்து விடுவேன். விலை கொடுத்து வாங்கும் பந்தத்திற்காக விலை மதிக்க முடியாத இந்தப் பந்தத்தை வெட்டிக் கொள்ள மாட்டேன். இது சத்தியம்" என்கிறாள் 'உறவின் விலை', (குற்றம் பார்க்கில்')." அற்ப மனம் கொண்ட உறவினர்களால் அப்பெண்ணுக்கு என்ன பயன்?" என்ற ஆசிரியர் கேட்காத கேள்வி, இச்சமுதாயத்தைப் பார்த்துக் கேட்கப்பட்டது அல்லவா?

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1)

    சு.சமுத்திரத்தின் முதல் சிறுகதை எந்த இதழில் எப்போது வெளிவந்தது?

    2)

    சு.சமுத்திரத்தின் சிறுகதைகள் மொத்தம் எத்தனைத் தொகுதிகளாக வெளிவந்துள்ளன?

    3)
    தமிழக அரசின் பரிசு பெற்ற சிறுகதைத் தொகுதி எது?
    4)

    தன்னுடைய பெரும்பாலான கதைகள் எப்படி எழுந்தவை என்கிறார் சு.சமுத்திரம்?

    5)

    இல்லாதவர்கள் உழைப்பைச் சுரண்டும் அவலம் எந்தச் சிறுகதையில் பேசப்படுகிறது?

புதுப்பிக்கபட்ட நாள் : 17-08-2017 13:21:32(இந்திய நேரம்)