Primary tabs
- 4.3 சிறுகதை நோக்கும் போக்கும்
மனித சமுதாயத்தை மேம்படுத்துவதாக இலக்கியம் அமைய வேண்டும் என்ற கருத்துடைய சு.சமுத்திரம் அக்கருத்தையே தம் சிறுகதைகளிலும் வெளிப்படுத்தியுள்ளார். சுயநலம் மிகுந்து பொதுநலம் குறைந்து வரும் இக்காலச் சமுதாயம் இவர் கதைகளில் எடுத்துக் காட்டப்படுகிறது. அரசியல்வாதிகளின் போக்கு சீரற்று இருப்பதையும் சில கதைகள் எடுத்துக்காட்டுகின்றன. பொதுவாக மனித நேயம் குறைந்து வருவதையும், தனி மனிதன் தாழ்ந்து போவதையும் சில கதைகள் சுட்டிக் காட்டுகின்றன. மனித நேயத்தின் மாண்பினை உணர்த்தும் கதைகளும் உண்டு. சமூகப் பொறுப்புணர்வு ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்துவனவாக இவர் சிறுகதைகள் அமைகின்றன எனலாம்.
தனிமனித ஒழுக்கம், சமூகப் பொறுப்புணர்வு இரண்டும் சேர்ந்து செயலாற்றும் நிலையிலேயே மனிதன் சிறப்படைகிறான். தனிமனிதன் சில சமயங்களில் சமுதாயத்தை எதிர்த்துப் போராடும் நிலையில் தோல்வியைத் தழுவ வேண்டி உள்ளது. ஆனால் அதற்காக இந்த அறப்போராட்டத்தை நிறுத்தக் கூடாது என்ற கருத்தைச் சொல்ல வரும் கதை ‘கண்ணுக்குத் தெரிந்த கிருமிகள்’ (ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்). "மெட்ரோ தண்ணியும் சாக்கடைத் தண்ணியும் ஒன்றாகக் கலந்ததை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டாமா" என்று கேட்டுப் போராடும் பழனிச்சாமி ஓய்வு பெற்ற டெபுடி செகரட்டரி (டில்லி). இதனால் அவருக்கு ஏற்படும் போராட்டங்களின் இறுதியில் உயிரையே விட்டார். இவரது சடலத்தைப் பிரேத பரிசோதனைக்குப் பிறகு மருத்துவ மனையில் இருந்து எடுப்பதற்குக் கூட ‘அன்பளிப்பு’ கொடுக்க வேண்டும் என்பது சமூகச் சிலுவை சுமந்த பழனிச்சாமிக்குத் தெரியவே தெரியாது என்று இக்கதை நிறைவு பெறுகிறது.
தன்மானம் இழந்து பிறர் காலில் விழும் கலாச்சாரத்தை, அதன் விளைவுகளைக் கற்பனை செய்து எழுதப்பட்ட சிறுகதை 'எதிர்ப் பரிணாமம்' (ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்).
கி.பி.2140 இல் உலகம் முழுவதும் ஆட்கொல்லி நோயான எய்ட்ஸ் ஒழிக்கப் பட்டு விட்ட காலத்தில் தமிழக மக்களை ஒரு விசித்திரமான நோய் பிடித்துக் கொண்டது. தமிழர்களில் பெரும்பான்மையோர் தரையோடு தரையாய்த் தவழ்ந்து பிறகு தரைக்குக் கீழேயும் போக விரும்பி, தலைகளைத் தரையில் மோதி மோதி மூக்குகள் உடைபட்டு, சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக ஒரு செய்தி. சர்வதேச அறிஞர்கள் ஒன்று கூடி விவாதித்து இதற்குரிய காரணங்களைக் கூறுகின்றனர்: "இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தவழ்ந்தபடியே உயிர் வாழும் இவர்களின் மூதாதையர் வாழ்க்கை முறைபற்றி விசாரித்தபோது அமைச்சர்கள், அரசியல் வாதிகள் அல்லது உயர் காவல் துறையினராக இருந்தமை தெரிய வருகிறது. உயிரின உடம்பில் அமைந்த ஜீன்கள் வழி வாரிசுகளுக்கும் இக்குணம் வந்து காலில் விழுவதற்கு ஏற்பச் சம்பந்தபட்டவரின் உடல் வாகை மாற்றுகின்றன".
இவ்வியத்தகு வியாதிக்குச் சிகிச்சை முறை கீழ்க்கண்டவாறு கூறப்படுகிறது: "தனி நபர் வழிபாடு என்ற போலி உலகைச் சிருஷ்டித்துக் கொண்டவருக்கு ஏற்பட்ட இந்நிலையைப் போக்க, தவழ்ந்து கிடக்கும் நோயாளிகளின் காதுகளில் கணியன் பூங்குன்றன் பாடிய 'பெரியோரை வியத்தலும் இலமே' என்ற பாடலை 24 மணி நேரமும் ஒலிக்கச் செய்ய வேண்டும்.
கயவர்தாம் தங்களைத் தாமே வியப்பர் என்ற வள்ளுவர் வாசகத்தைக் காதில் குத்தும்படி சொல்ல வேண்டும். இதனால் ஏற்படும் மாற்றங்கள் இவர்களின் செல்களில் மாற்றங்களை ஏற்படுத்தும். இப்படி ஏற்பட ஏற்படப் படுத்துப்போன தமிழனின் முதுகெலும்பு மீண்டும் செங்குத்தாக ஆகும். இதற்கு மூன்று தலைமுறை ஆகும் என்றாலும் இன்றைய தமிழன் மூன்றாவது தலைமுறைக்காவது முதுகெலும்பு நிமிர்ந்தால் சரிதான்" என்ற வரிகளில் ஆசிரியரின் சமூகப் பொறுப்புணர்வும், தமிழன் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற அவருடைய வேட்கையும் வெளிப்படக் காணலாம்.
சமுதாயக் கொடுமைகளை ஆவேசமாகச் சாடும் பண்பும், அதே சமயத்தில் மனித நேய வெளிப்பாடும் இவர் படைப்புக்களில் உள்ளன.
தன் மகனுக்குப் பெண் கொடுக்கவில்லை என்ற கோபத்தில் மைத்துனர் மகள் கிளியம்மையின் திருமணத்தை நிறுத்தத் துடிக்கிறார் பலவேசம். வண்ணாத்தி செல்லக்கனியின் உதவியை நாட அவளும் அதற்கு ஒப்புக் கொள்வது போல் நடிக்கிறாள். "கிளியம்மை அகங்காரி என்பது உண்மைதான். அதற்காக ஒரு பொண்ணோட வாழ்வைக் குலைக்கிற அளவுக்கு நான் மோசமானவ இல்ல. ஏன்னா நான் அழுக்க எடுத்திட்டு சுத்தத்தைக் கொடுக்கிறவ என்கிறாள். வண்ணாத்தியின் மனித நேயம் உணர்த்தும் சிறுகதை 'இலவு காத்த பலவேசம்' (ஒரு சத்தியத்தின் அழுகை).
நடைமுறை வாழ்க்கையில் ஒவ்வோர் அதிகாரியும் தன் மலோதிகாரியிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு செயல்படுவதை நகைச்சுவையாகச் சொல்லும் சிறுகதை ‘இவர்களின் உலகம்’ (மனம் கொத்தி மனிதர்கள்).
மாவட்ட ஆட்சித் தலைவர் பொறுப்பை ஏற்க வரும் பெண்மணியை வரவேற்கப் புகைவண்டி நிலையத்தில் காத்திருந்தவர்கள் மாவட்ட வருவாய் அதிகாரி. கோட்ட அதிகாரி, தாசில்தார், ரெவின்யூ அதிகாரி மற்றும் டவாலிகள், கோட்ட அதிகாரி மாலையிட்டு வரவேற்க, கலெக்டர் அம்மா "நான்சென்ஸ் நான் என்ன மினிஸ்டரா இந்த அமர்க்களம் எல்லாம் எதுக்கு?" என்று கோபித்தாள். கோட்ட அதிகாரி குமரன் துடித்துப்போனான். இதுபோல ரெவின்யூ இன்ஸ்பெக்டர் மீது கோபித்த போது, தனக்கு எங்கு மாற்றலோ என்று அஞ்சி அஞ்சித் துடித்தார். ஆங்கிலத்தில் பேசிவிட்ட தாசில்தாருக்கு ஒர் அர்ச்சனை - " தமிழை நிர்வாகத்தில் அதிகமாய்ப் பயன்படுத்த வேண்டும்" என்றவுடன் ஆடிப்போனார் அவர்.
ஆணையாளரின் அதிகப் பிரசங்கித்தனமான பேச்சும் அம்மாவால் விரும்பப் படவில்லை. பிரமோஷன் வருகிற நேரம் இப்படியாகி விட்டதே என்று அவருக்கு வருத்தம். இப்படி எல்லாரையும் வருத்தப்பட வைத்த கலெக்டர் அம்மாவும், யாரென்று தெரியாமல் சீப் செகரட்டரியிடம் முரட்டுத் தனமாகப் பேசிவிட்டதால், காரில் ஏறிய பின்னரும் வருந்துகிறாள். 'எடுத்த எடுப்பிலேயே சி.எஸ்.கிட்டே கெட்ட பெயர் வாங்கிட்டேனே! இனிமேல் மியூசியம் டைரக்டர் வேலைக்குத் தான் போகணுமோ?' என்று நிறைவு பெறுகிறது இக்கதை! (இவர்களின் உலகம்).
அங்கதப் பாங்கில் கதை சொல்லும் ஆற்றல் பெற்றவர் சு.சமுத்திரம்.
குடியரசுத் தலைவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் போக்குவரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யும் காவல் துறையினரின் கெடுபிடியான செயல்களைப் பற்றிய வர்ணனையைப் பாருங்கள்: "முக்கியப் பிரமுகர் வருவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பும், போன பிறகு ஒருமணி நேரத்திற்குப் பின்பும் கட்டவிழ்த்து விடப்படும் காவல் துறையினர், சாலைகளை மூடி லத்திக் கம்புகளை ஆட்டி நாயக ஜனங்களுக்கு ஜனகன பாடிவிடுவது ஒரு பழக்கம். கார் வைத்திருப்பவர்களை 'சார்' பட்டம் கொடுத்தும், ஸ்கூட்டரில் செல்பவருக்கு 'மிஸ்டர்' பட்டம் வழங்கியும், சைக்கிள்காரர்களை 'டேய்' போட்டும் துரத்தியாகி விட்டது'. (பாரத மாதா).
வழக்கறிஞர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘மாப்பிள்ளை’ என்று உருவகிக்கிறார். வழக்கறிஞர்தான் மாப்பிள்ளை, அதே முறுக்கு. அதே வரதட்சணை அதே மற்றும் பல . . (மதில் மேல் பூனை, ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்).