Primary tabs
-
5.5 தொகுப்புரை
பிரபஞ்சன் பெரும்பாலான வாசகர்கள் அறிந்த சிறந்த படைப்பாளி. இவர் 600க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார். இவர் படைப்புக்குள் சாகித்திய அகாதமி உள்ளிட்ட பரிசுகளும் பாராட்டும் பெற்றவை: வானம் வசப்படும் (புதினம்), நேற்று மனிதர்கள் (சிறுகதைத் தொகுப்பு), மானுடம் வெல்லும் (புதினம்), மகாநதி (புதினம்), சந்தியா (புதினம்). இவருடைய கதைகள் ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு முதலான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.
"அழகிய தமிழ், அங்கத நடை, அளவான பாத்திரப் படைப்பு, மனித மனத்தை நுணுக்கமாக ஆராயும் தன்மை, படிக்கச் சுவாரஸ்யம், குறைவு படாத தரம், மனிதார்த்தத்தை உன்னதப்படுத்தும் இலட்சியம் ஆகியன இவரது எழுத்தின் சிறப்பு" என்று கவிதா பதிப்பகத்தார் பாராட்டுகின்றனர்.
சமுதாய மாற்றங்களும், தனி மனித மாற்றங்களும் இவருடைய படைப்புகளில் கலை உணர்வுடன் எடுத்துரைக்கப்படுவதைக் காணலாம். சுவையாகச் சொல்லும் கலைத் திறனும் வெவ்வேறான கற்பனைகளின் வெளிப்பாடும் வாசகர்களைக் கவர்ந்திழுக்கும் அம்சம் எனலாம்.
குழந்தைகளின் உலகம், பெண்களின் உலகம், தனி மனிதர்களின் அக உலகம் ஆகியவற்றில் நுழைந்து அதில் வெளிப்படுத்தும் சிந்தனையும் கற்பனையும் கதை வடிவம் கொள்கின்றன. சமுதாய மாற்றம் குறித்த இவர் படைப்புகளில் நாட்டுப் பற்று, ஆணாதிக்கம், பெண் விடுதலை, தனி மனிதர் எதிர்கொள்ளும் சமுதாயத் தாக்கம் ஆகியவை அடங்குகின்றன. பெண் விடுதலையும், குழந்தைகள் சுதந்திரமும், காவல் துறையினரிடம் இருக்க வேண்டிய மனிதாபிமானமும் இவருடைய படைப்புகளின் நோக்கமாக அமைவதைக் காணலாம்.
சமுதாயத்துக்குத் தரும் செய்தியாக ‘வாழ்க்கை உயர்ந்த நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும். மற்றவர்க்கு எடுத்துக்காட்டாக, பலர்க்குப் பயன்தரக் கூடியதாக இருக்க வேண்டும்’ என்பது சொல்லப்படுகிறது. உயர்ந்த உள்ளமும், செயல் திட்பமும், உறுதியும் கொண்ட கதை மாந்தர்கள் இவர் படைப்புகளால் நமக்கு அறிமுகமாகின்றனர். போலிச் சாமியார்களிடம் ஏமாந்து நிற்கும் அப்பாவி மக்கள், சாதாரண மனிதர்களைப் போலவே ஆசையும் விருப்பமும் கொண்ட அலிகள் ஆகியோரை நமக்கு அறிமுகப்படுத்துகின்றார்.
எளிய மொழி நடை, அங்கதம் கலந்த நடை, புதிய உவமைகளைக் கையாளுதல் ஆகியன இவர் படைப்புகளின் தனிச் சிறப்பாகும். தத்துவம், உளவியல் போன்ற நோக்கிலும் இவர் படைப்புகள் அமைகின்றன. நுணுக்கமான உணர்வுகளைச் சுவைபடச் சொல்லும் திறன் பிரபஞ்சனிடம் நாம் காணும் சிறப்பு அம்சம் எனலாம். தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் பிரபஞ்சனின் படைப்புகளுக்குத் தனியிடமுண்டு என்பதில் சிறிதும் ஐயமில்லை.