தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆனந்தாயி - புதினம்

  • 3.2 ஆனந்தாயி - புதினம்

    சமூக நாவலான ஆனந்தாயி எதார்த்தவாதமாக ஏழை மக்களின் பிரச்சினைகளையும், ஒரு குடும்பத்தில் நிகழும் நிகழ்ச்சிகளையும் நடப்பியல் நெறியில் சித்திரிக்கிறது. இந்த நாவல், நகரமாக வளர முற்படும் போது மாறுதலுக்கு உள்ளாகும் ஒரு தமிழகக் கிராமத்தின் நிலையையும் அங்கு வாழும் விவசாய உழைப்பாளியின் குடும்ப நிலையையும் நுட்பமாக விளக்குகிறது.

    நாவலாசிரியர் தனக்குக் கிடைத்த கருவை விளக்கிக் காட்டவே கதைப்பின்னல், பாத்திரங்கள் பின்னணி என்று பலவற்றை அமைத்துக் கொள்கிறார். அந்த வகையில் ஒரு கிராமம், நாகரிகம் வளர வளர தனது பாரம்பரியத்தை எவ்வாறெல்லாம் மாற்றிக் கொள்கிறது என்பதை ஆசிரியர் தனது நடையில் இயல்பாகச் சித்திரித்துள்ளார். மேலும் கிராமப்புறத்துப் பெண்களுக்கு மூன்று தலைமுறையில் ஏற்படும் வாழ்வியல் சிக்கல்கள் இந்த நாவலில் இடம்பெறுகின்றன. ஒரு நடுத்தரக் குடும்பத்து வாழ்வில் நிகழும் இன்ப துன்பங்களைக் கட்டமைத்துச் செல்லும் புதினமாக ஆனந்தாயி விளங்குகிறது.

    • கதை மாந்தர்கள்

    ஆனந்தாயி, பெரியண்ணன், வெள்ளச்சியம்மாள், கலா, மணி, பாலன், அருள், அன்பு, லட்சுமி, வடக்கத்தியான், வடக்கத்தியான் மனைவி, பூங்காவனம், கங்காணி, கங்காணியம்மாள், நீலவேணி, பூங்காவனம், அய்யா கண்ணு, தேவமணியம்மாள், டானியல் போன்றவர்கள் ஆனந்தாயி நாவலின் கதைமாந்தர்கள்.

    ஆனந்தாயி நாவலில், பெரியண்ணன் ஆனந்தாயி குடும்பத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.

    3.2.1 கதைச்சுருக்கம்

    கதைத்தலைவியான ஆனந்தாயி சிறுமியாக இருந்த பொழுதே பெரியண்ணன் என்ற ஆணாதிக்கம் கொண்டவனின் மனைவியாகிறார். தாயை இழந்த ஆனந்தாயி மீது அவள் மாமியார் வெள்ளச்சியம்மாள் அன்புடையவளாக இருந்து, அவளை நெறிப்படுத்தி சிறந்த குடும்பத்தலைவி ஆக்குகிறாள். ஆனந்தாயி தன் குடும்பத்திற்காக மிகுந்த துன்பங்களை ஏற்கிறாள். குடும்பத்தலைவனான பெரியண்ணன் ஒரு தன்னலவாதி. மனைவியைக் கொடுமைப்படுத்துவது மட்டுமின்றி வேறொரு பெண்ணையும், மனங்காட்டிலிருந்த தன் சொந்த மாடிவீட்டிற்கு அழைத்து வந்து வைத்துக்கொள்கிறான். பிறகு சில நாட்களில் அவளையும் அடித்து துன்புறுத்துகிறான். மொத்தத்தில் ஒரு ஒழுக்கம் கெட்டவன்.

    • ஆனந்தாயியின் துன்பம்

    தனக்கு எல்லாமே குடும்பம்தான், மக்கள்தான். ‘அவர்கள் நலன்தான் நம் நலன் என்று நினைத்துப் பல இன்னல்களைத் தாங்கிக்கொண்டு வாழ்பவள்’ ஆனந்தாயி. எனினும் அவள் பெண்கள் பிறப்பு தாழ்வானது என நினைக்கும் அளவிற்கு கொடுமைக்கு ஆளாகிறாள்.

    • கிராம மக்கள் வேலையும் வாழ்வும்

    பெரியண்ணனின் மச்சு வீட்டிற்குச் சற்று தூரத்தில் புறம்போக்கு நிலத்தில் முத்துலிங்கம், வடக்கத்தியான், சுடலை, மகாலிங்கம் போன்றவர்களும் அவர்களது உறவினர்களும் குடிசை கட்டிக் கொண்டிருந்தனர். அவர்கள் பெரியண்ணனிடம் வேலை செய்தனர். அக்கிராமத்தில் கூலியாட்களுக்குப் பஞ்சமில்லை. கூப்பிட்ட நேரத்திற்கு வர ஆட்கள் இருந்தனர். ஆண்கள் மண்வேலை, எரு அடித்தல் உழவு வேலை என்று பல வேலைகளையும் செய்தனர். இவர்களில் வடக்கத்தியான் குடும்பத்தினர் மட்டும் பெரியண்ணன் குடும்பத்தில் ஒருவராகவே வாழ்ந்தனர். வடக்கத்தியான் மகளான பூங்காவனம் வீட்டு வேலை செய்யப்போன இடத்தில் துரை என்பவனுடன் ஏற்பட்ட பழக்கம் திருமணமாகாமலே குழந்தையைப் பெற்றெடுக்கும் நிலைக்கு கொண்டு போய் விடுகிறது. ஊரைவிட்டு துரை ஓடிய பிறகு பல்வேறு துன்பங்களை அவள் அனுபவிக்கிறாள். ஓடிய துரை திரும்பி வந்து சேர்ந்து வாழ அழைக்கிறான். அவள் மறுத்து விடுகிறாள். வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தையை வயிற்றில் சுமந்து சமுதாயத்தை எதிர்த்து வாழ்கிறாள்.

    • தனிச் சலுகை

    போதிய வருமானம் வந்தபோதிலும் குடும்பத் தலைவன் என்பதால் பெரியண்ணனுக்கு மட்டும் நெல்லரிசிச் சோறும், மற்றவர்களுக்கு தங்கள் நிலத்தில் விளைந்த வரகுச்சோறும், கேழ்வரகு களியும் கிடைக்கின்றன. தனக்குப் பேத்தி பிறந்ததும் பெரியண்ணன் மிக்க மகிழ்ச்சியோடு வெள்ளி அரைமூடியும், கடுக்கனும் செய்து போடுகிறான்.

    • குடும்பம்

    ஆனந்தாயியின் சிறிய மகள் அருள் இயற்கை அழகை ரசிப்பவள். அவள் தும்பியில் வாழை நார் கட்டி விளையாடுவதோடு, பூவரசு இலையில் பீப்பீ செய்து ஊதுவாள். மேலும், தீப்பெட்டியில் பொன் வண்டைப் பிடித்து வைத்தும் விளையாடுவாள். அருள் மட்டும் இலட்சுமியிடம் கதைகேட்பாள். இலட்சுமியும் அருள் மீது அன்புடன் இருந்தாள். ஆனால் விவரமறிந்த தனம், லட்சுமியைத் தீயவார்த்தைகளைக் கூறி நேரடியாகவே திட்டுகிறாள். ஒரு குடும்பத்தின் தலைவனான ஒருவனுடன் அவன் வீட்டிற்கே வந்தது தவறு என்று உணர்ந்த இலட்சுமி அவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்கிறாள்.

    • கோஷ்டி சண்டையும் அழிவும்

    இலட்சுமி பெரியண்ணனின் ஆதிக்கத்தைத் தாங்க முடியாமல் முதலில் லாரிக்காரன் ஒருவனுடன் ஓடிவிட அங்கிருந்து பெரியண்ணனே மீட்டு வருகிறான். மீண்டும் அவள் கங்காணி மகன் இராஜமாணிக்கத்துடன் ஓடிவிடுகிறாள். விவரமறிந்த பெரியண்ணன் கங்காணி குடும்பத்தை அழிக்க முற்படுகிறான். அதனால் கங்காணி குடும்பத்தைப் பழிவாங்கும் எண்ணத்தில் அவனுடைய காட்டில் விளைந்திருந்த பயிர்களை இரவோடு இரவாக அறுத்துக் கொண்டு வந்து தனது வீட்டில் வைத்து விற்பதற்குத் தயார் செய்து கொண்டிருந்தான். இதை ஆனந்தாயி கண்டித்தாள். பிறகு அவர்கள் அய்யாக்கண்ணுவையும், பெரியண்ணாவையும் தீர்த்துக்கட்ட நினைத்தனர். இதைக் கங்காணி வீட்டில் வேலை செய்யும் பூங்காவனத்தின் மூலம் இவர்கள் அறிந்து கொள்கின்றனர். பெரியண்ணன் கோஷ்டியினர், கத்தி கம்பி என்று எடுத்துக்கொண்டு அவர்களை அழிக்கச் செல்கின்றனர். இதில் அய்யாக்கண்ணு இறந்து போகிறான். பெரியண்ணன் வெட்டுப்படுகிறான். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அவன் வெளியே அதிகம் நடமாடுவதில்லை.

    • பொருளாதாரச் சரிவு

    பெரியண்ணன் பொருளாதாரப் பற்றாக்குறையால் நிலத்தை வீட்டுமனைகளாக்கி விற்றான். விற்ற பணத்தில் ஏஜென்சி ஒன்று எடுத்து குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தான். ஏஜென்சி மூலம் வரும் பணம் குடும்பம் நடத்த பற்றாக்குறையாக இருந்த காரணத்தால் குடியிருக்கும் வீட்டையே அடகு வைத்துச் செலவு செய்கிறான். மனைவிக்குக் குடும்பச் செலவிற்குப் பணம் கொடுக்காமல் இலட்சுமிக்கு நகை செய்து போட்டு அழகு பார்க்கிறான். இத்தகைய பொறுப்பற்ற தன்மையால் குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. பேரன் பேத்தி பிறந்த பிறகும்கூட அவனுடைய ஆதிக்கம் குறையவில்லை. மனைவியை அடிமையாக எண்ணும் குணமும் சிறிதுகூட மாறவில்லை. இதுதான் கதை.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:27:33(இந்திய நேரம்)