தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

New Page 1-1.1 உரைநடையின் தொன்மை

  • 1.1 உரைநடையின் தொன்மை 

    தமிழின் முதல் இலக்கண நூல் தொல்காப்பியம் என்பது தெரியும் அல்லவா? அதன் ஆசிரியர் தொல்காப்பியர் காலத்திலேயே உரைநடை இருந்தது என்பதற்கு, 

    பாட்டிடை வைத்த குறிப்பி னானும். . . . .
    உரை வகை நடையே நான்கென மொழிப

    - (செய்யுளியல், 163)

    என்னும் தொல்காப்பிய நூற்பாவே சான்று பகரும். 

    இந்நூற்பாவிற்கு விளக்கங்கூறும் பேராசிரியர் உரைநடையினைப் பாட்டுகளுக்கு இடையே வருகின்ற குறிப்புகள் எனவும், நூற்பாக்களுக்கு  எழுதப்படும் விளக்கவுரைகள் எனவும், பொய்யானதாக அன்றி மெய்ம்மையை எடுத்துக் கூறும் உரை எனவும், நகைச்சுவை பொருந்திய உரைநடை எனவும் நான்காக எடுத்துக் கூறுவார். தொல்காப்பியத்திற்கு முன்னர் இருந்த நூல்கள் கிடைக்காத காரணத்தினால் பழங்கால உரைநடையைப் பற்றி அறிவதற்கு எதுவும் கிடைக்கவில்லை. சிலப்பதிகாரத்தில்தான் உரைநடை முதன்முதலாக இடம்பெறுகிறது. 

    உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
     

    எனச் சிலப்பதிகாரத்தைக் கூறுவர். இதில் காணப்படும் உரைநடை செறிவும், ஓசையும் கொண்டு செய்யுள் போலவே அமைந்துள்ளது. பெருந்தேவனார் பாடிய பாரதமும், தகடூர் யாத்திரை என்ற ஒரு பெருநூலும் உரைநடை கலந்த செய்யுள்களால் ஆகியவை என்பதை உரையாசிரியர் கூற்றால் அறிய முடிகிறது. இறையனார் களவியல் என்ற அகப்பொருள் இலக்கண நூலுக்கு எழுதப்பட்ட உரையே முதன்முதலில் எழுந்த உரை எனலாம். இதை எழுதியவர் மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்பர்.

    1.1.1 உரைநடை - விளக்கம் 

    உரைநடை என்பது பொருளின் தன்மையை உள்ளது உள்ளவாறு உரைப்பதாகும். உலக வழக்காகப் பேசப்படுவதும் எழுதப்படுவதும் உரைநடை ஆகும். வசனம் என்ற வடமொழிச் சொல்லே, அண்மைக்காலத்தில் தமிழில் உரைநடையைக் குறிப்பதாய் அமைந்தது. அதுவே பெருவழக்காகவும் நிலவியது. 

    உரைக்கு இலக்கணம் கூறவந்த தொல்காப்பியர், 

    தொன்மை தானே
    உரையொடு புணர்ந்த பழமை மேற்றே

    - (செய்யுளியல்-229)

    எனக் கூறியுள்ளார். எனவே, உரைநடை என்பது பாட்டைவிடப் பழைமையானது என்பது நன்கு விளங்கும். உரைநடை என்பது இலக்கிய மரபு கெடாத நல்ல நடையில், ஆழ்ந்த கருத்தோடு, பாட்டுக்குள்ள சந்தச் சேர்க்கை இன்றியே நல்ல ஓசை நயம் உடையதாகி அமையும். மேலும் ஒளிவு மறைவு இன்றி உள்ளதை உள்ளபடி உரையிட்டுக் காட்டும். கருத்துக்கும், காரணத்துக்கும் பொருத்தமானதாக ஒன்றைப் பற்றியோ, ஒருவரைப் பற்றியோ, விளக்கி உரைப்பது உரைநடை எனப்படுகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:32:57(இந்திய நேரம்)