தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

வாழ்வும் படைப்புகளும்

  • 5.1 வாழ்வும் படைப்புகளும்

    ஒரு படைப்பாளியின் படைப்புகள் அவன் வாழ்க்கையில் இருந்து மலர்கின்றன. அவன் வாழ்ந்த காலமும் அவனது வாழ்க்கைச் சூழலும் அவனது படைப்புகளுக்கு உள்ளீடாக அமைகின்றன. எனவே கண்ணதாசனின் படைப்புகளில் ஒரு பிரிவான உரைநடையைப் பற்றிய செய்திகளைத் தெரிந்து கொள்வதற்குமுன் அவரது வாழ்க்கைச் சூழலைப் பற்றி அறிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் அல்லவா? 

    கண்ணதாசன் இராமநாதபுரம் மாவட்டம் சிறுகூடல் பட்டி என்னும்  சிற்றூரில்  பிறந்தவர்.   இவரது   தாயார் விசாலாட்சி ஆச்சி.

    தந்தையார் சாத்தப்பனார். கண்ணதாசன் 24.6.1927இல் பிறந்தார். சாதாரண வணிகக் குடும்பத்தில் பிறந்த இவர் குறைவான பள்ளிக் கல்வியை மட்டுமே பெற முடிந்தது. இளமையிலேயே இவர் மற்றொரு குடும்பத்திற்குத் தத்துக் கொடுக்கப்பட்டார். பெற்றோர் இவருக்கு இட்டபெயர் முத்தையா என்பதாகும்.

    கண்ணதாசன்

    புராணங்களில் வரும் கண்ணனைப் போலவே தானும் ஒருத்திக்கு மகனாகப் பிறந்து மற்றொரு தாய்க்கு மகனாக வளரும் வாய்ப்பைப் பெற்ற முத்தையா தன் பெயரைக் கண்ணதாசன் என்று புனைந்து கொண்டதில் வியப்பில்லை அல்லவா?

    கண்ணதாசன் இளமையிலேயே கவி புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். பாடல் எழுதுவதிலும் பயிற்சி பெற்றிருந்தார். ஆதலின் திரையிசைப் பாடல் எழுதும் வாய்ப்பினைப் பெற்றார். அக்காலத்தில் 1945ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் மலர்ந்து வந்த திராவிட இயக்க உணர்வினில் உந்தப்பட்டுத் தானும் அதில் இணைந்தார். ஆதலால் அரசியல் துறையிலும் அடியெடுத்து வைத்து உழைக்கலானார். இத்தகைய திரைப்பட, அரசியல் சூழல்கள் கண்ணதாசனைப் பல்வேறு துறைகளில் ஈடுபட வைத்தன எனலாம். 

    1927ஆம் ஆண்டு பிறந்த கண்ணதாசன் 1981ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். ஏறத்தாழ 54 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அவர் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் என்று அறிகிற போது நமக்கு வியப்பு எழுகிறதல்லவா? அவரது படைப்புகளை வகைப்படுத்திக் காண்போம். இந்த வகைப்பாடு கண்ணதாசனின் பல்வேறு பரிமாணங்களை உங்களுக்கு உணர்த்தும். 

    வ.எண்
    படைப்பின் வகை

    எண்ணிக்கை

    (1)
    கவிதை நூல்கள்
    7 தொகுதிகள்
    (2)
    புதினங்கள்
    15
    (3)
    குறும் புதினங்கள்
    13
    (4)
    காப்பியங்கள்
    9
    (5)
    சிற்றிலக்கியங்களும் பக்தி இலக்கியங்களும்
    10
    (6)
    சிறுகதைத் தொகுப்பு
    7
    (7)
    நாடகங்கள்
    3
    (8)
    மேடை நாடகங்கள்
    3
    (9)
    கட்டுரை நூல்கள்
    27
    (10)
    தத்துவ நூல்கள்
    10
    (11)
    சுய சரிதை (தன் வரலாறு)
    3
    (12)
    திரைப்படப் பாடல்கள்
    5 தொகுதிகள்
    (13)
    திரைக் கதை வசனங்கள்
    12 திரைப்படங்கள்

    மேற்காணும் படைப்புகளில் கவிதைத் தொகுதிகள் (7), திரைப்படப் பாடல்கள் (5) தொகுதிகள், காப்பியங்கள் (9), சிற்றிலக்கியங்கள் மற்றும் பக்தி இலக்கியங்கள் (10) என்பன நீங்கலாக எஞ்சியிருக்கும் அனைத்தும் உரைநடை என்னும் தலைப்பிற்குள் அடங்கும் படைப்புகள் ஆகும். ஆதலின் கண்ணதாசன் உரைநடையின் பரப்பு மிகவும் விரிவாக அமைந்துள்ளது என்பது தெளிவாகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-07-2018 11:49:18(இந்திய நேரம்)