தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தமிழ்விடு தூது

 • 3.1 தமிழ்விடு தூது

  தமிழ்விடு தூது என்ற நூல், மதுரையில் எழுந்தருளி உள்ள சோமசுந்தரக் கடவுளிடம் ஒரு பெண் தன் காதல் துன்பத்தைக் கூறித் தமிழ்மொழியைத் தூது அனுப்பியதாக அமைந்துள்ளது.

  இந்த நூலில் தூது பெறுவோர் கடவுள். அதாவது சோமசுந்தரக் கடவுள். தூது விடுவோர் ஒரு பெண். தூது செல்லும் பொருள் தமிழ்மொழி. இந்த நூல் 268 கண்ணிகளைக் கொண்டுள்ளது. இந்த நூலை இயற்றிய ஆசிரியரின் பெயர் தெரியவில்லை.

  3.1.1 நூல் கூறும் பொருள்கள்

  •  
  தூது செல்லும் தமிழ் மொழியின் பெருமைகளைக் கூறுதல்.
  •  
  பிற பொருட்களைத் தூதாக அனுப்பாமைக்குரிய காரணங்களைத் தலைவி தூதுப் பொருளிடம் கூறுதல்.
  •  
  தூது பெறும் தலைவன் ஆகிய சோமசுந்தரக் கடவுளைப் புகழ்ந்து கூறுதல்.
  •  
  தலைவி தன் துன்பம் கூறுதல்.
  •  
  தலைவி தமிழிடம் தன் தூதுச் செய்தியைக் கூறித் தூது வேண்டுதல்.

  என்ற பகுதிகளைக் கொண்டு திகழ்கின்றது தமிழ்விடுதூது.

  3.1.2 இடம் பெறும் செய்திகள்

  இனி, மேற்கண்ட செய்திகள் தமிழ்விடு தூதில் எவ்வாறு இடம்பெறுகின்றன என்பதைக் காண்போம்.

  • தமிழ்மொழியின் பெருமை

  தூது அனுப்புவோர் தூதுப்பொருளிடம் அதன் பெருமைகளைக் கூறித் தூது செல்ல வேண்டுவதை, எல்லாத் தூது நூல்களிலும் காணலாம். இந்த நூலில் தூது விடும் தலைவி, தூதுப் பொருளான தமிழின் பல்வேறு பெருமைகளைப் புகழ்ந்து கூறுகின்றாள்.

  • தமிழைப் புகழக் காரணம்

  சிவபெருமான், தடாதகைப் பிராட்டியார், விநாயகர், முருகன், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், அகத்தியர், தொல்காப்பியர், மெய்கண்ட தேவர், திருவிசைப்பாப்பாக்கள் பாடிய திருமாளிகைத் தேவர் முதலியவர்கள், திருமூலர், கபிலர், பரணர், நக்கீரர், ஐயடிகள் காடவர்கோன், கழறிற்றறிவார், திருவள்ளுவ நாயனார் முதலாகிய கல்வி, கேள்விகளில் சிறந்த எல்லாருமாய் நீ இருக்கின்றாய். ஆகவே, உன்னைக் கண்டு, உன் பொன் போன்ற அடிகளைப் புகல் இடமாகக் கொண்டு போற்றுகின்றேன் என்று, தலைவி முதலில் தமிழ்மொழியைப் போற்றக் காரணம் கூறுகின்றாள்.

  கல்லாதார் சிங்கம்எனக் கல்விகேள்விக்கு உரியர்
  எல்லாரும் நீயாய் இருந்தமையால் - சொல்ஆரும்
  என்அடிக ளேஉனைக்கண்டு ஏத்தின்இடர் தீரும்என்று
  பொன்அடிக ளேபுகலாப் போற்றினேன்
  (கண்ணிகள், 15-16)

  (ஏத்தின் = புகழ்ந்தால்; இடர் = துன்பம்; புகலா = அடைக்கலமாக) என்கிறாள்.

  • தமிழை அரசனாக உருவகம் செய்தல்

  ''பாவே ! நூலே ! கலையே ! புலவர்களுடைய உள்ளம் கருகாது சொல் விளையும் செய்யுளே ! வெண்பா முதலாக மருட்பா இறுதியாக உள்ள 5 குலங்களாய் நீ வந்தாய் ! கொப்பூழில் உதான வாயு தரித்து; வாக்கு ஆகிய கருப்பத்தை அடைந்து; தலை, கழுத்து, நெஞ்சு ஆகிய இடங்களைச் சார்ந்து; நாக்கு, பல், மேல் வாய் ஆகியவற்றில் உருவாகி; முதல் எழுத்துகள் முப்பதும், சார்பெழுத்துகள் இருநூற்று நாற்பதுமாய்ப் பிறந்தாய்” என்கிறாள் தலைவி. இப்பகுதியில் தமிழ் எழுத்துகளின் பிறப்பு முறை கூறப்படுகின்றது.

  எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல்நிலை, இடைநிலை, ஈற்றுநிலை, போலி, பதம், புணர்ச்சி என்ற 12 பருவங்களை உடையதாய் வளர்ந்தாய்.

  அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பாலும் ஊட்ட நீ நன்கு வளர்ந்தாய்.

  பிள்ளைத் தமிழ் நூலுக்குரிய பத்துப் பருவங்களாக வளர்ந்தாய்.

  இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் ஆகிய செய்யுள் ஈட்டச்சொற்கள் நான்கும்; பெயர், வினை, இடை, உரி ஆகிய செந்தமிழ்ச் சொற்கள் நான்கும்; அகத்திணைகள் ஏழும்; புறத்திணைகள் ஏழும்; எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா, பாவினம் என்ற எட்டும்; அணிகள் முப்பத்தைந்தும் கொண்ட மிக்க அழகுடைய மாப்பிள்ளையாய் உள்ளாய்.

  செப்பல் பண், அகவல் பண், துள்ளல் பண், தூங்கல் பண் ஆகிய பண்கள் பட்டத்துப் பெண்களாக உள்ளனர்.

  ஐந்து வகை இசைக் கருவிகள் வெளியிடும் 103 பண்கள் பின்னர் மணந்த பாவையராக உள்ளனர்.

  வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், நகை, நடுவுநிலை, உருத்திரம் ஆகிய ஒன்பது சுவைகள் ஆகிய குழந்தைகளைப் பெற்றாய்.

  நாடகமாகிய மனைவியுடன் கொலுவில் வீற்றிருக்கின்றாய் எனத் தமிழ்மொழியின் சிறப்புகள் கூறப்படுகின்றன.

  பெரும் காப்பிய இலக்கியத்திற்குரிய 18 வருணனைகள் ஆகிய வாழ்வு எல்லாம் கண்டு மகிழ்ந்தாய்.

  வையை ஆற்றில் பெருகி வந்த நீரைத் தடுக்க மண் சுமந்த சிவபெருமானைப் பாண்டிய மன்னன் அடித்த பிரம்பை உன் செங்கோல் ஆகக் கொண்டாய்.

  திசைச் சொற்கள் ஆகிய தமிழ் நீங்கிய 17 மொழிகளும் உன் சிற்றரசர்கள் ஆவர்.

  உன் நாட்டின் எல்லை ஆக மேல் கடல், கீழ்க்கடல், குமரி ஆறு, திருவேங்கடம் ஆகியவற்றைக் கொண்டாய்.

  வையை ஆற்றின் வடக்கும், கருவூரின் கிழக்கும், மருவூரின் மேற்கும், மருத ஆற்றின் தெற்கும் ஆகிய நாட்டை உன் அரண்மனையாகக் கொண்டாய்.

  மூன்று வேந்தர்கள் ஆகிய சேரன், சோழன், பாண்டியன் ஆகியவர்களின் வாகனமாக நீ நில உலகம், தேவர் உலகம், பாதாள உலகம் ஆகியவற்றிற்குச் சென்றாய்.

  வேதங்கள், ஆகமங்கள் ஆகியன உன் புரோகிதர்கள். பெரும் காப்பியங்கள், நாடக நூல்கள் ஆகியவை உன் நண்பர்கள். சாத்திரங்கள் ஆகிய சமய நூல்கள் உன் நாட்டைப் பாதுகாக்கும் படைத்தலைவர்கள். மகாபாரதம், பதினெட்டுப் புராணங்கள் ஆகியன உன் படைகள்.

  சொல் அணிகள் உன் அங்கங்கள்.

  தேவார மூவர் பாடிய பதிகங்களும், வாதவூரர் அருளிய திருவாசகமும் அவர் கூறத் தில்லையம்பலவன் எழுதிய திருக்கோவையாரும், ஐந்து பெரும் காப்பியங்களும், திருவாரூர் மும்மணிக்கோவை, திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, திருவாமாத்தூர்க் கலம்பகம், கலிங்கத்துப் பரணி, பொன்வண்ணத்தந்தாதி, இராசராச சோழன் உலா, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் ஆகியன உன் மெய்க்காப்பாளர்கள். இவ்வாறு தமிழ்மொழியை மன்னனாக உருவகம் செய்து பல சிறப்புக்களையும் கூறக் காணலாம்.

  • தமிழைக் கனியாக உருவகம் செய்தல்

  வெண்பா முதலிய நான்கு வகைப் பாக்களும் வயல்களின் வரப்புகள். பாவினங்கள் மடை. நல்ல வனப்பாகிய காளைகளால் மனம், புத்தி, அகங்காரம், அந்தக்கரணம் என்ற ஏரைப் பூட்டி, நல்ல நான்கு நெறிகளை விதையாக விதைத்து, அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு வகைப் பொருள்களை விளைவிக்கும் நாளில், புன்கவிகளாகிய களைகளை, அதிவீரராம பாண்டியன், வில்லிபுத்தூரர், ஒட்டக்கூத்தர் ஆகியோர் களைகின்றனர். இதனால், பெருங்கனியாகத் திகழும் தமிழே என்று தமிழ்மொழியைக் கனியாக உருவகித்துப் போற்றுகிறாள்.

  • சிறப்புக்கள்

  சிந்தாமணியாய் உள்ள உன்னைச் சிந்து என்று கூறிய நாக்கு சிந்தும். (சிந்தாமணி = ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. சிந்து = சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.) உலகில் வெண்மை, செம்மை, கருமை, பொன்மை, பசுமை என்ற 5 நிறங்கள் உண்டு. ஆனால் உனக்கு நூறு (பா) வண்ணங்கள் உண்டு. கைப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு, இனிப்பு என்ற ஆறுவகைச் சுவைகள் (ரசம்) உண்டு. ஆனால் உனக்கு வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், நகை, நடுவுநிலை, உருத்திரம் என்ற 9 வகைச் சுவைகள் உண்டு.

  அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பால்களுடன் ஆண்பால், பெண்பால் என்ற இரண்டு பால்களும் சேர்ந்து உனக்கு ஐந்து பால்கள் உண்டு என்று புகழ்கின்றாள்.

புதுப்பிக்கபட்ட நாள் : 13-08-2018 17:15:19(இந்திய நேரம்)