தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4:3-தூது

  • 4.3 தூது

    காதல் துயரத்தால் வருந்திய மதனவல்லி தன் மனநிலையை உலா வந்த தலைவனுக்குச் சொல்ல விரும்புகிறாள். அதற்குத் தூது விடுகிறாள்.

    4.3.1 தூது விடுதல்

    மதனவல்லி உலா வரும் தலைவனைப் பார்த்து மயங்கிக் காம நோயால் வருந்துகின்றாள். அச்சமயம் தன் தோழியை அழைத்துத் தலைவனிடம் தூது சென்று வருமாறு வேண்டுகின்றாள். மதனவல்லியின் தோழி வருவதை,

    மகிதலம் போற்றிடும் சரபோஜி மன்னவன்
    மருவும் உயர்தஞ்சை நகரம் இதுதன்னில்
    சகி வந்தாள் ஐயா - மதனவல்லிக்கு இசைந்த
    சகி வந்தாள் ஐயா

    (மகிதலம் = உலகம்; மருவும் = வாழும்; சகி = தோழி)

    என்கிறார். தோழியும்

    கலிர்கலிர் என்னச் சிலம்புகள் ஆர்க்க
    கடுநடை உடனே மலர்முகம் வேர்க்க
    பலபல பெண்கள்அங் கேநின்று பார்க்கப்
    பட்சமாம் மதனவல்லி மனத்துயர் தீர்க்க
    சரசமா கக்கூடி விளையாடப் பண்டு
    சரபோஜி மகாராஜா தயவுஉனக்கு உண்டு
    பரவசமாய் அழைத்து வருகின்றேன் கண்டு
    பயந்திடா தேஎன்று திடம்சொல்லிக் கொண்டு

    (ஆர்க்க = ஒலிக்க; கடுநடை = விரைந்தநடை; வேர்க்க = வியர்க்க; பகரம் = அன்பு; திடம் = ஆறுதல்)

    வருகின்றாள் என்கிறார்.

    உலகம் போற்றும் மன்னன் சரபோஜியின் நகர் ஆகிய தஞ்சாவூரில் சிலம்புகள் ஒலிக்க, விரைந்த நடையுடன் மலர் போன்ற முகம் வியர்க்க, பல பெண்கள் பார்க்க, மதனவல்லியின் துன்பத்தைப் போக்கத் தோழி வருகின்றாள். சரபோஜி மன்னனின் அன்பு உனக்கு உண்டு; நான் உறுதியாக அவரை அழைத்து வருகின்றேன்; பயப்படாதே எனக் கூறிக் கொண்டு வருகின்றாள்.

    தோழியைக் கண்ட மதனவல்லி தான் மன்னனிடம் காதல் கொண்டு மயங்கியதைக் கூறுகின்றாள். பின்,

    இந்த மட்டும் செய்யடி - சகியே நீ
    இந்த மட்டும் செய்யடி
    சந்தம் வளரும் தஞ்சை சரபோஜி மன்னர் தம்பால்
    சார்ந்துஎன் விரகம் எல்லாம்
    ஓய்ந்திடச் சொல்ல வேண்டும்

    எனத் தூது வேண்டுகின்றாள்.

    அழகு வளர்கின்ற தஞ்சாவூர் சரபோஜி மன்னனிடம் சென்று என் துன்பங்களைக் கூறுவாயாக என்று மதனவல்லி தன் தோழியிடம் தூது வேண்டுகின்றாள்.

    4.3.2 தூதுச் செய்தி கூறுதல்

    மதனவல்லி தன் தோழியிடம் சரபோஜி மன்னனிடம் சென்று தூது கூற வேண்டிய முறையினையும் கூறுகின்றாள்.

    சூரியன் உதிக்கும் முன்பு எழுந்து நீராடி, திரு நீறு அணிந்து சிவ பூசை செய்பவர்கள், புராணங்களைக் கூறுவோர்கள், பெரியோர்கள் ஆகியோருடன் மன்னர் அமர்ந்து இருப்பார். அவர்களுக்குத் தானங்கள் செய்வார். அப்போது நீ சென்று இந்தச் செய்தியைக் கூறக் கூடாது.

    பல நாட்டு மன்னர்களும் வந்து வணங்கும் பொழுது நீ இந்தச் செய்தியைக் கூறக் கூடாது.

    மந்திரிகள், படைத்தலைவர்கள் ஆகியோருடன் மன்னர் கலந்து ஆலோசிக்கும் பொழுது நீ சென்று இந்தச் செய்தியைக் கூறக்கூடாது.

    பெண்கள் நடனம் ஆடும் போதும், புலவர்கள் பாடல்களுக்கு உரை கூறும் போதும் நீ இந்தச் செய்தியைக் கூறக் கூடாது.

    படைகள் தம்மைச் சுற்றி வர மன்னர் உலாப் புறப்படும் சமயம் சென்று கூற வேண்டும்.

    அதுவும் வாசல் புறத்தில் நின்று, பணிவுடன் கூறி, அவர் மாலையை வாங்கி வர வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றாள்.

  • மதனவல்லி வருந்துதல்
  • சரபோஜி மன்னனிடம் தூது சென்ற தோழி திரும்பி வரவில்லையே என எண்ணி மதனவல்லி வருந்துகின்றாள். இது,

    இன்னம் வரக் காணேனே - சகியை நான்
    இன்னம் வரக் காணேனே
    மன்னர் புகழும் தென்தஞ்சை சரபோஜி
    மன்னன்பால் தூதுசென்ற கன்னிகை தனைஇங்கே


    என்று காட்டப்படுகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-08-2018 18:30:47(இந்திய நேரம்)