Primary tabs
-
2.2 சொல் மூலங்கள்
இரண்டாயிரமாண்டு வரலாற்றுப் பழமை கொண்ட தமிழ் மொழியின் மூலங்கள் பன்முகத் தன்மையுடையன. சங்க இலக்கியம், தொல்காப்பியம் முதலாக இன்றைய இக்கால இலக்கியம் வரை தமிழின் பரப்புப் பரந்துபட்டது. இந்நிலையில் சொல் சேகரிப்பு மூலங்களைப் பின்வருமாறு பகுக்கலாம்.
(1) பண்டைய இலக்கிய இலக்கணச் சொற்கள்
(2) நிகண்டுகள்
(3) அகராதிகள்
(4) இதழ்கள்
(5) கலைக்கஞ்சியம்
(6) பாடநூல்கள்
(7) சிறப்பு அகராதிகள்
2.2.1 பண்டைய இலக்கிய இலக்கணச் சொற்கள்தமிழ்மொழியின் சொற்களஞ்சியம் என்பது சங்க இலக்கியம், காப்பியங்கள், பக்தி இலக்கியம், புராணங்கள், சிற்றிலக்கியங்கள் என்று பல்கிப் பெருகக் கூடியது. சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் போலச் சில குறிப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் சொற்கள் பற்றிய முழுமையான தகவல்கள் உள்ளன. பிற மொழியிலிருந்து ஒரு சொல்லைத் தமிழாக்கும்போது ஏற்படும் சிக்கல்களை, இத்தகைய பழஞ்சொற்கள் தீர்த்து வைக்க வாய்ப்புண்டு. மிகப் புதிய சொல்லில் மிகப் பழைய சொல்லின் பொருள் பொதிந்திருக்க வாய்ப்புண்டு.
எடுத்துக்காட்டு:
Treasury-கருவூலம்Confidential-மந்தணம், கமுக்கம்Air-வளிDocument-ஆவணம்Nurse-செவிலிMatron-மூதாய்Age-அகவைஇங்கே தற்சமயம் வழக்கிலுள்ள துறை சார்ந்த ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான சொற்கள் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் இருந்து எடுத்துக் கையாளப்பட்டுள்ளன. எனவே தமிழில் உள்ள பண்டை இலக்கியச் சொற்றொகை, சொல்லாக்கத்தில் ஈடுபடுவோருக்கு அவசியம் தேவை.
2.2.2 நிகண்டுகள்ஒரு மொழியின் வளர்ச்சியையும் தனித்துவத்தினையும் மதிப்பிடும் துல்லியமான அளவுகோலாகச் சொற்றொகை அமைந்துள்ளது. சொற்றொகை பற்றிய தனி நூலின் தேவையை அறிந்து தமிழில் கி.பி.எட்டாம் நூற்றாண்டில் நிகண்டு உருவாக்கப்பட்டது. நிகண்டுகளில் திவாகரம் மிகவும் பழமையானது. அதற்குப் பின்னர் எழுதப்பட்ட பெரும்பாலான நிகண்டுகள் திவாகரத்தினை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். நிகண்டுகள் மூலம் தமிழ்ச் சொற்றொகையின் பரப்பினை அறிந்துகொள்ள முடியும். திவாகர நிகண்டு பன்னிரு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:
(1) தெய்வப் பெயர்த் தொகுதி
(2) மக்கள் பெயர்த் தொகுதி
(3) விலங்கினப் பெயர்த் தொகுதி
(4) மரப்பெயர்த் தொகுதி
(5) இடப்பெயர்த் தொகுதி
(6) பல்பொருள் பெயர்த் தொகுதி
(7) செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி
(8) பண்பு பற்றிய பெயர்த் தொகுதி
(9) செயல் பற்றிய பெயர்த் தொகுதி
(10) ஒலி பற்றிய பெயர்த் தொகுதி
(11) ஒருசொல் பல்பொருள் பெயர்த் தொகுதி
(12) பல்பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதிஇப்பன்னிரு தொகுதிகளில், முதல் பத்துத் தொகுதிகளையும் ஒன்றாகத் தொகுத்தால், நிகண்டு பின்வரும் மூன்று பெருந்தொகுதிகளாக அமையும்.
(1) ஒருபொருள் பல்பெயர்த் தொகுதி
(2) ஒரு சொல் பல்பொருள் பெயர்த் தொகுதி
(3) பல்பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதிபண்டைக் காலத் தமிழையும் மரபினையும் அறிந்துகொள்ள நிகண்டுகள் வாயில்களாக உள்ளன. சில நிகண்டுகளில் சமஸ்கிருதச் சொற்கள் மிகுந்து இருப்பினும், பல நிகண்டுகளில் வழக்கிறந்த சொற்கள் கூடுதலாக இருப்பினும், சொற்களின் குவியல் என்ற நிலையில் சொல்லாக்கத்திற்குத் துணை செய்கின்றனவாக உள்ளன. எனினும் அவை தொகுக்கப்பட்ட காலத்தில் வழக்கிலிருந்த எல்லாச் சொற்களும் தரப்படவில்லை. தற்காலத் தமிழுக்குத் தேவையான சொற்கள் நிகண்டுகளில் இல்லை என்பது இங்குக் குறிக்கத்தக்கது.
2.2.3 அகராதிகள்கி.பி.17ஆம் நூற்றாண்டிலிருந்து அகராதிகள் தமிழில் வழக்கிலுள்ளன. கிறிஸ்தவ சமயப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மேலைநாட்டுச் சமயக் குருமார்கள், இந்திய மொழிகளை அறிந்துகொள்ள முயன்ற போது, இரு மொழி அகராதிகளைத் தயாரித்தனர். பின்னர்த் ‘தமிழ்-தமிழ்’ அகராதி உருவாக்கப்பட்டது. யாழ்ப்பாணத்து அகராதி, மதுரைத் தமிழ்ச் சங்க அகராதி போன்றன சொல்லாக்க முயற்சியில் ஈடுபடுகின்றவர்களுக்கு, தமிழ்ச் சொல்லின் நுட்பத்தை அறிந்துகொள்ள உதவின. ஆங்கிலம்-தமிழ் அகராதிகள் ஆங்கிலத்திற்கு நிகரான தமிழ்ச் சொல்லைக் கண்டறியப் பயன்படுகின்றன. இத்தகைய அகராதிகளால் இலக்கிய வழக்குச் சொற்களும் மக்களிடம் அன்றாட வாழ்க்கையில் புழக்கத்திலிருக்கும் சொற்களும் நிரம்ப உள்ளன. எனவே அகராதிகள் சொல் சேகரிப்பு மூலமாக விளங்குகின்றன.
- பேரகராதிகள் (Lexicons)
பேரகராதிகள் ஒரு சொல்லின் மூல வடிவத்தினையும், அது தொடக்க காலத்தில் பெற்றிருந்த பொருளினையும் பின்னர்க் காலந்தோறும் மாற்றமடைந்து வந்துள்ள பொருள்களையும் அட்டவணையிடுகின்றன. மேலும் அச்சொல் இதுவரையிலும் கையாளப்பட்டுள்ள இலக்கிய இலக்கண நூற்களையும், அவற்றில் பெற்றுள்ள பொருள்களையும் குறிப்பிடுகின்றன. புதிய சொல்லாக்கத்தில் ஈடுபடும் துறை வல்லுநர்களுக்குப் பேரகராதிகள் பெரிதும் துணை செய்கின்றன; பிற மொழிச் சொல்லினைத் தமிழாக்கும் போது அதற்கு நிகரான பண்டைய வழக்குச் சொல்லினை மீட்டுருவாக்கம் செய்திடத் துணைபுரிகின்றன.
- ஆட்சிச் சொல் அகராதிகள்
ஆட்சிச் சொல்லகராதி தமிழில் 1957ஆம் ஆண்டு தமிழக அரசாங்கத்தினரால் வெளியிடப்பட்டது. அதற்குப் பின்னர் அப்புத்தகம் இதுவரை நான்கு பதிப்புகளைக் கண்டுள்ளது. கடந்த இருநூறு ஆண்டுகளாக அரசாங்கத்தின் ஆட்சி மொழியாகச் செயற்பட்ட ஆங்கில மொழியினை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் தமிழினை வைத்திட ஆட்சிச் சொல் அகராதிகள் அடிப்படையாக விளங்குகின்றன. கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ச் சொற்கள் அடைந்துள்ள மாற்றங்களைக் கண்டறிய ஆட்சிச் சொல் அகராதி பெரிதும் உதவுகின்றது. எனவே சொற்களின் பன்முகத் தன்மைகளை அறிந்து கொள்ளவும் இவ்வகராதி முதன்மைச் சான்றாக உள்ளது.
- சிறப்புச் சொல் துணையகராதிகள்
தமிழக அரசின் நிர்வாகத்தினை நடத்திச் சென்றிடும் பல்வேறு துறையினரும் தத்தம் அலுவலக நடைமுறையில் தமிழைப் பயன்படுத்திட,ஏற்கனவே துறைதோறும் வழக்கிலிருக்கும் ஆங்கிலச் சொற்களைத் தொகுத்து அவற்றுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைத் தந்து சிறப்புச் சொல் துணையகராதிகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆவணக் காப்பகம், ஆவணப் பதிவகம், இந்து அறநிலையத் துறை, கூட்டுறவுத் துறை, சிறைத் துறை போன்ற நாற்பத்து நான்கு துறைகளின் பயன்பாட்டினுக்காகத் தனித்தனியாக அகராதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள அகராதிகளில் மொத்தம் 892 பக்கங்கள் உள்ளன. அத்துடன் ஆட்சிச் சொல் அகராதியிலுள்ள 280 பக்கங்களையும் சேர்த்து மொத்தம் 1172 பக்கங்களில் அரசுத் துறை சார்ந்த சொற்களின் அகராதிகள் வெளியாகி உள்ளன. இத்தகைய அகராதிகள் பல்வேறு துறைகளில் புத்தகங்கள், ஆய்வுக் கட்டுரைகள் எழுத முயலும் வல்லுநர்களுக்கு வழிகாட்டியாக விளங்குகின்றன. இன்னொரு நிலையில் சொல் சேகரிப்பு மூலங்களாக விளங்குகின்றன.
- கலைச் சொல்லகராதிகள்
கி.பி.1875ஆம் ஆண்டில் அமெரிக்க மருத்துவரான ஃபிஷ் கிரீன் இலங்கையில் எஸ்.சுவாமிநாதன், சாப்மன் ஆகியோருடன் இணைந்து மருத்துவச் சொற்களைத் தொகுத்து நான்கு தொகுதிகளாக வெளியிட்டார். அவரது முயற்சிக்குப் பின்னர், டி.வி.சாம்பசிவம் என்பவர் மருத்துவம், வேதியியல், புவியியல் ஆகிய துறைகள் சார்ந்த சொற்களைத் தொகுத்து 1931இல் வெளியிட்ட கலைச்சொல்லகராதி குறிப்பிட்டத்தக்க நூலாகும். அதற்குப் பின்னர், சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம், தமிழக அரசு, சென்னைப் பல்கலைக்கழகம், கலைக்கதிர் நிறுவனம், தனியார் நிறுவனங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் கலைச் சொல்லகராதிகளை வெளியிட்டுள்ளன. இத்தகைய அகராதிகளில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான சொற்கள் தமிழில் உள்ளன. எனவே இவ்வகராதிகள் சிறந்த சொல் சேகரிப்பு மூலங்கள் ஆகும்.
2.2.4 இதழ்கள்இன்று தமிழில் பல்வேறு துறைகளில் இதழ்கள் வெளியாகின்றன. துறை சார்ந்த வல்லுநர்களுக்காகவும், பொது மக்களுக்காகவும் நடத்தப்படும் ஒரு துறைசார்ந்த இதழில் வெளியாகும் கட்டுரைகளில் இடம்பெறும் சொல்லாக்கங்கள் முக்கியமானவை. ஒரு துறையில் நடைபெறும் அண்மைக் காலத்திய ஆய்வுகள், இதழ்களின் மூலம்தான் வெளியாகின்றன. அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் நடைபெறும் அண்மைக் காலத்திய ஆய்வுகளின் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் இதழ்களில் வெளியாகின்றன. இதனால் துறைசார்ந்த புதிய சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை உருவாக்க வேண்டிய தேவை, கட்டுரையாளர்களுக்கு ஏற்படுகின்றது.
மக்களிடம் மிகுதியாக வரவேற்புப் பெற்றுள்ள நாளிதழ்கள், வார மாத இதழ்கள் போன்றனவற்றில் வெளியாகும் விளம்பரங்கள் புதிய சொல்லாக்கத்தில் முக்கிய இடம் வகிக்கின்றன. அறிவியல் வளர்ச்சியினால் தயாரிக்கப்படும் பொருட்களை மக்களிடம் சந்தைப்படுத்திடவும், நுகர் பொருட்களைப் பிரபலப்படுத்திடவும், சொற்களினால் உருவாக்கப்படும் வாசகங்களையே விளம்பரங்கள் பெரிதும் நம்பியுள்ளன. ஆங்கிலச் சொற்களைத் தமிழ் ஒலிபெயர்ப்புச் செய்து தமிழ்ச் சொற்களுடன் கலந்து புதிய வகையிலான நடையில் வெளியாகும் விளம்பரங்கள், ஒரு நிலையில் தமிழ் மரபினுக்கு முரணானதாக அமைந்தாலும், பரந்துபட்ட நிலையில் மக்களிடையே பெரும் வரவேற்புப் பெற்றவை ஆகும். எனவே சொல் சேகரிப்பு மூலங்களில் விளம்பரச் சொற்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அண்மையில் நடைபெற்றுள்ள புதிய சொல்லாக்கங்கள், மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ள புதிய சொற்கள் பற்றி அறிந்திட இதழ்கள் அடிப்படையான மூலங்களாக விளங்குகின்றன.
2.2.5 கலைக்களஞ்சியமும் அகராதிகளும்தமிழில் கலைக்களஞ்சியம், குழந்தைகள் கலைக்களஞ்சியம், வாழ்வியல் களஞ்சியம், அறிவியல் களஞ்சியம், கோயிற் களஞ்சியம் போன்ற களஞ்சியங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் பல்வேறு துறைகளின் கருத்தியலை வெளிப்படுத்தும் அருமையான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இக்கட்டுரைகளில் இடம்பெற்றுள்ள சொற்கள் கட்டுரையாளர்களின் சீரிய முயற்சியினால் உருவாக்கப்பட்டவை. எனவே கலைக்களஞ்சியங்களும் சொல் சேகரிப்பு மூலமாக விளங்குவதை அறிய முடிகின்றது.
- சிறப்பு அகராதிகள்
ஒரு மொழியின் வளம் என்பது அம்மொழியில் வெளியாகும் பலதரப்பட்ட அகராதிகளின் எண்ணிக்கையைச் சார்ந்துள்ளது. ஒரு பொருட் பன்மொழி அகராதி, எதிர்ச்சொல் அகராதி போன்ற அகராதிகள் மொழியின் பெருக்கத்தினைப் பதிவு செய்கின்றன. தமிழில் வெளிவந்துள்ள தற்காலத் தமிழ்அகராதி என்பது இன்று புழக்கத்திலிருக்கும் சொற்களின் தொகுப்பாக வெளிவந்துள்ளது. தமிழைப் புதிதாகக் கற்கும் பிறமொழியினருக்குத் துணை செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள அகராதிகளில் சொற்களின் ஆழத்தினையும் விரிவினையும் கண்டறிய முடியும். எனவே இத்தகைய அகராதிகள் சொல் சேகரிப்பதற்கான மூலங்களாக உள்ளன.
2.2.6 பாட நூல்கள்தமிழில் அறிவியல், சமூக அறிவியல் பாடநூல்கள் எழுதப்பட்டது நீண்ட வரலாறு உடையது. கி.பி.1911இல் முதன் முதலாகப் பள்ளி இறுதித் தேர்வினைத் தமிழில் எழுத அனுமதி வழங்கப்பட்டது. 1930 முதல் தாய்மொழிக் கல்வித் திட்டம் வகுக்கப்பட்டது. ராஜாஜி, பெ.நா.அப்புஸ்வாமி, லட்சுமி, கல்வி கோபாலகிருஷ்ணன், திரிகூடசுந்தரம் பிள்ளை, ஆர்.கே.விஸ்வநாதன், ஈ.த.ராஜேஸ்வரி, டி.எஸ்.எஸ்.ராஜன் போன்றோர் ஏராளமான அறிவியல் நூல்களைத் தமிழாக்கினர். இதனால் பாடநூல் எழுதும் ஆசிரியர்களுக்கும் துறை வல்லுநர்களுக்கும் வலுவான அடித்தளம் அமைந்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கல்லூரிக் கல்விக்கென 1938இல் வேதியியல், 1941இல் இயற்பியல், 1942இல் உயிரியல் பாடநூல்களை விரிவான அளவில் வெளியிட்டது. 1959இல் தமிழை உயர்கல்விப் பயிற்று மொழியாக்கிடத் தமிழக அரசு ஆணை வெளியிட்டது.
இதனால் 1962இல் நிறுவப்பட்ட தமிழ் வெளியீட்டுக் கழகம் பல அறிவியல் நூல்களைத் தமிழில் வெளியிட்டது. பின்னர், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் என்று பெயர் மாற்றம் பெற்ற இந்நிறுவனம் நூற்றுக்கணக்கான சமூக அறிவியல், அறிவியல், கலை பாடநூல்களை வெளியிட்டுள்ளது. இத்தகைய நூல்களில் மொழிபெயர்ப்பு நூல்களும் அடங்கும். இவை தவிர உயர்கல்வியில் பயிலும் மாணவர்களுக்காக நூற்றுக்கணக்கான பல்துறை நூல்கள் தமிழில் வெளியிடப்பட்டுள்ளன.கணினி பற்றித் தமிழில் பல நூல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய நூல்களின் மூலம் பன்னெடுங்காலமாகத் தொடர்ந்து, தமிழில் நடைபெற்று வரும் சொல்லாக்க முயற்சிகளின் இயல்புகளை அறிந்து கொள்ளமுடியும். இன்றைய நவீன அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த நிலையில் உருவாக்கப்பட்டுள்ள சொற்களையும் அறியலாம். எனவே பாடநூல்கள் என்பவை பரந்துபட்ட நிலையில் அருமையான சொல் சேகரிப்பு மூலங்கள் ஆகும்.