Primary tabs
-
பழந்தமிழ் நூல்களைச் சங்க இலக்கியம் என்னும் பெயரில் குறிப்பிடுவார்கள். பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்க இலக்கியங்கள் ஆகும். அவற்றில் காணும் குறிப்புகளையே இந்தப் பகுதியில் நாம் பயில இருக்கிறோம்.
தொல்காப்பியம் ஓர் இலக்கணநூல் என்பதையும் அது சங்க காலத்திற்கு முற்பட்டது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். என்றாலும் தொல்காப்பியத்தில் சிவன் பற்றி வெளிப்படையாக எந்தச் செய்தியும் இல்லை. பொதுவாக உள்ள சில கருத்துகள் சைவத்தைக் குறிப்பதாகக் கொள்ள இடம் இருப்பதால் அதனைப்பற்றி இந்தப் பகுதியிலேயே காண இருக்கிறோம்.
'மண வாழ்க்கையில் ஈடுபட்டு மக்களைப் பெற்று இன்பவாழ்வு வாழ்ந்ததும், தலைவனும் தலைவியும் கடவுளைப் பற்றி எண்ண முற்பட வேண்டும். அதுவே வாழ்க்கையின் குறிக்கோளாகும்’ என்று தொல்காப்பிய நூற்பா கூறுகின்றது.
காமஞ் சான்ற கடைக்கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே
(பொருள். கற்பியல்: 190)
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற நானிலத்திற்கும் உரிய தெய்வங்கள் இவையெனக் கீழ்வரும் நூற்பா கூறுகின்றது.
மாயோன் மேய காடு உறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே
(பொருள். அகத்திணையியல் - 5)
(மாயோன் = திருமால், மேய = விரும்பிய, காடுறை = முல்லை நிலம் (காடும் காட்டைச் சார்ந்த இடமும்), சேயோன் = முருகன், மைவரை = குறிஞ்சி நிலம் (மலையும் மலையைச் சார்ந்த இடமும்), வேந்தன் = இந்திரன், தீம்புனல் = மருதநிலம் (வயலும் வயலைச் சார்ந்த நிலமும்), பெருமணல் = நெய்தல் (கடலும் கடலைச் சார்ந்த இடமும்)
இவற்றிலிருந்து பழந்தமிழர்கள் கடவுட்கொள்கை உடையவர்கள் என்பதும், எல்லாவற்றையும் கடந்து நின்ற முழுமுதற் கடவுள் ஒருவனைப் பற்றிய கோட்பாட்டினை உடையவர்கள் என்பதும் பெறப்படும்.
''வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூலாகும்'' என்பது மற்றொரு நூற்பா. ‘வினையின் நீங்கிய முனைவன்’ என்பதாலேயே, அவன் என்றுமே வினையினால் கட்டப்படாதவன் என்பது பெறப்படுகிறது. பழந்தமிழர்கள் முழுமுதற் கடவுளையே தம் கருத்தில் கொண்டிருந்தனர் என்பர். இன்றும் பேச்சு வழக்கில் தெய்வத்தைக் குறிப்பதாக உள்ள கடவுள் என்னும் சொல் எல்லாவற்றையும் ''கடந்து நிற்பது'' என்னும் பொருளைக் காட்டி நிற்கிறது. தொல்காப்பியர் இச்சொல்லை ஆள்கிறார்.
இங்கே 'கடவுள்' என்பது தத்துவப் பொருளாக அமைந்த கடவுளராவர். மாயோன், சேயோன், வருணன், இந்திரன் முதலியோர் திணைநிலைக் கடவுளர்.
திருவள்ளுவர் ஆண்ட 'இறை' (388) என்னும் சொல், இருத்தலையும் எல்லா இடத்திலும் நிறைந்திருத்தலையும் குறிக்கும். இக்கருத்தைத் திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்திலிருந்து பெறுகிறோம். (இறைவன் 5,10) இறைவன் என்ற சொல்லால் எங்கும் நிறைந்தும் எல்லாவற்றையும் கடந்தும் உள்ள கடவுளைப் பற்றிய கோட்பாடு தமிழர்களிடையே நிலவி வந்தது எனலாம். தொல்காப்பியத்தில் வரும் கந்தழி என்னும் சொல்லும் தெய்வத்தையே குறிக்கும்.
(பொருள், புறத்திணையியல் : 85)
''இறைவன்'' முழுமுதற் கடவுள், சுதந்திரமுடையவன், கடந்து நிற்பவன் என்னும் பொருள்களை இச்சொல் குறிக்கும் என்று நச்சினார்க்கினியர் கூறுகிறார்.
அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்துப் போன்ற எட்டு நூல்களையும் எட்டுத்தொகை எனக் குறிப்பிடுவார்கள். இந்த நூல்கள் அகம், புறம் என்னும் இருவகை வாழ்வையும் எடுத்துக் காட்டுகின்றன. அவற்றுள் சிவன் பற்றிய குறிப்புகளை இந்தப் பகுதியில் காணலாம்.
காவிரிப்பூம்பட்டினம், மதுரை, வஞ்சி முதலிய பெருநகரங்களில் இக்கடவுளர்க்குரிய கோயில்கள் இருந்தன. எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை ஆகிய ஐந்து நூல்களின் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் சிவனைப் பற்றியே அமைந்துள்ளன. ஆயின் இப்பாடல்கள் பிற்காலத்தைச் சார்ந்தவை.
சங்க நூல்களில் சிவனைப் பற்றிய குறிப்புகள் விரிவாக வந்துள்ளன. ஆனால் சிவன் என்ற பெயர் அங்கே வழங்கப்படவில்லை. சிவனை அடையாளங் காட்டும் வகையில் தொடர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
• கலித்தொகை
இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன்
உமை யமர்ந் துயர்மலை இருந்தனனாக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத் தம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல........
(கலித்தொகை, 38)
(ஈர்ஞ்சடை = ஈரத்தை உடைய சடையினை உடைய, அந்தணன் = இங்குச் சிவன், அரக்கர் கோமான் = இராவணன், தொடி = ஓர் அணிகலன், பொலி = விளங்குகின்ற, உழப்பவன் = வருந்துபவன்)
இமயமலையிடத்துப் பிறந்த மூங்கிலாகிய வில்லை வளைத்தவனும் ஆகிய ஈரத்தை உடைத்தாகிய சடையினை உடையவனும் ஆகிய இறைவன் இறைவியோடு பொருந்தி, உயர்ந்த கயிலைமலையில் இருந்தனன். அரக்கர்க்கு அரசனாகிய பத்துத் தலையை உடைய இராவணன் மலையை எடுப்பதற்குக் கையைக் கீழே செருகித் தொடிப்பொலிவு பெற்ற அத்தடக்கையினாலே அம்மலையை எடுக்க இயலாது வருந்திய நிலைபோல.....
இங்குச் சிவனைப் பற்றிய குறிப்பும் இராவணன் கயிலாய மலையைத் தூக்க முயன்று முடியாமற் போனதும் இடம்பெற்றுள்ளன. (குறிஞ்சிக்கலி - 38)
கலித்தொகையில் வேறொரு பாடலிலும் சிவனைக் குறிக்கும் முக்கண்ணான் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. அச்சொல் இடம்பெறும் பாடலைக் கீழே பார்க்கலாமா?
தொடங்கற்கட் டோன்றிய முதியவன் முதலா
அடங்காதார் மிடல்சாய அமரர் வந்திரத்தலின்
மடங்கல்போற் சினைஇ மாயஞ்செய் அவுணரைக்
கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலும்
உடன்றக்கால் முகம்போல ஒண்கதிர் தெறுதலின்
(கலித்தொகை, 2)
(தொடங்கற்கண் = உலகங்களைப் படைக்கக் கருதியபோது, முதியவன் = அயன், பிரம்மா; அடங்காதார் = அரக்கர், மிடல்சாய = வலிமை கெட, மடங்கல் = சிங்கம், சினை = கோபித்து, மூவெயில் = திரிபுரங்கள், மூன்று கோட்டைகள்)
இதில் முக்கண்ணான் என்ற தொடர் இடம் பெறுகிறது. தேவர்களுக்காக அவுணர்களை அடக்க மூன்று புரங்களை எரித்த சிவனின் செயல்பாடு விரிவாகக் குறிக்கப்படுகிறது.
• புறநானூறு
உண்டவரை நீண்ட நாள் வாழ்விக்கும் அரிய நெல்லிக்கனியை அதியமானிடமிருந்து பெற்ற ஒளவை அவனை வாழ்த்தும்போது,
(மிடறு - கழுத்து)
என்கிறார்.
பால்போலும் பிறை நெற்றியில் பொருந்திப் பொலிந்த திருமுடியினையும் நீலமணி போலும் கரிய திருமிடற்றினையும் உடைய ஒருவனைப்போல (சிவனைப்போல) நிலைபெறுவாயாக என வாழ்த்துகிறார்.
இங்கு, சிவன் அணிந்திருக்கும் பிறையும் அவனுடைய நீலமணிமிடறும் குறிப்பிடப்படுகின்றன.
மற்றொரு புறப்பாட்டில் முழுமுதற் கடவுள் என்று பொருள்படும் முதுமுதல்வன் என்ற தொடர் கீழ்வரும் அடிகளில் இடம்பெறுகிறது.
புறநானூறு கடவுள் வாழ்த்துப்பாடலில் கொன்றைப்பூ அணிந்த திருமார்பும், ஆனேறு (நந்தி) ஏறப்படும் வாகனமாகவும், கொடியாகவும் குறிக்கப்படுகின்றன. நஞ்சினது கறுப்பு, திருமிடற்றை அழகு செய்தது... ஒரு பக்கம் பெண்வடிவு ஆயிற்று என்று சிவனின் அடையாளங்களை விரிவாகப் பேசுகிறது. (புறம்: கடவுள் வாழ்த்து)
என்று மற்றொரு புறநானூற்றுப்பாடல் (56) குறிக்கிறது.
(எரிமரு = அழல்போலும், கணிச்சி = மழுப்படை, மணி = இங்கு நீலமணி, மிடறு = கழுத்து)
அதாவது ஆனேற்றை வெற்றியாக உயர்த்த அழல்போலும் விளங்கிய சடையினையும் விலக்குதற்கு அரிய நீலமணிபோலும் திருமிடற்றை உடையோனும் என்று பொருள்படுகிறது.
சிவனுடைய சடையும், அவன் கையில் தாங்கியிருக்கும் மழுப்படையும் நீலமணிமிடறும் இங்கு விளக்கம் பெறுகின்றன. கலித்தொகை (103) வாள் ஏந்தியவன் என்னும் பொருள்தரும் கணிச்சியோன் என்று குறிப்பிடுகிறது.
ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்துப் பாடலில் ‘நீலமணி வாலிழை பாகத்து ஒருவன்’ என்று சிவனைக் குறிப்பிடுகிறது.
இந்தக் கூற்றுகள் குறிப்பிடத்தக்கவை. காத்தல் கடவுளாகிய சிவபெருமானே எல்லாவற்றையும் அழிக்கிறான் (எல்லாவுயிர்க்கும் ஏமமாகிய - புறநானூறு, கடவுள் வாழ்த்து) அழித்தபிறகு கொடு கொட்டி என்னும் கூத்தினை ஆடுகிறான் (கொடுகொட்டி ஆடுங்கால் ..... நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ- கலித்தொகை, கடவுள் வாழ்த்து) (நுசுப்பினாள் = இடையை உடையவள், சீர் = தாளவகை) என்ற இந்தக் குறிப்புகள் - குறிப்பாக, காத்தலும் அழித்தலும் சிவபெருமானாலேயே நடைபெறுகின்றன என்னும் கருத்து - சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களைச் செய்கிறான் என்ற சைவசித்தாந்தக் கருத்தைக் குறிப்பால் உணர்த்தும்.
சங்க இலக்கியத்தின் மற்றொரு தொகுதி பத்துப்பாட்டு ஆகும். ஆற்றுப்படை நூல்கள் ஐந்தும் இதில் அடங்கும். காவிரிப்பூம்பட்டினத்தைச் சிறப்பிக்கும் பட்டினப்பாலையும் தமிழகத்துப் பூக்களைப் பற்றிக் கூறும் குறிஞ்சிப்பாட்டும், நிலையாமையைக் கூறும் மதுரைக்காஞ்சியும் பத்துப்பாட்டில் இடம் பெறுகின்றன. அகப்பொருள் நூலோ என்று கருதும் அளவுக்குச் சிறப்பாக உள்ள நெடுநல்வாடையும், தலைவி தலைவன் வருகைக்காகக் காத்திருக்கும் செய்தியைக் கூறும் முல்லைப்பாட்டும் இத்தொகுதியைச் சேர்ந்தவை. மக்கள் வாழ்க்கையை விரிவாகக் கூறும் இந்த நூல்களில் சிவனைப் பற்றிய குறிப்புகளும் இடம் பெறுகின்றன.
(கலிங்கம் = ஆடை, ஆலமர் செல்வன் = சிவன், ஆய் = கடையெழு வள்ளல்களுள் ஒருவன்)
இது, பாம்பு ஈன்று கொடுத்த ஒளிவிளங்கும் நீலநிறத்தை உடைய உடையினை, ஆலின் கீழிருந்த அமரர் இறைவனுக்கு நெஞ்சு பொருந்தி (மனம் விரும்பி) கொடுத்த ஆய் எனப் பொருள்படும்.
மதுரைக் காஞ்சியில் சிவனின் பல சிறப்புகள் கூறப்படுகின்றன. ஆனால் சிவன் என்ற பெயர் காணப்படவில்லை.
(வளி = காற்று, விசும்பு = ஆகாயம்)
என்ற குறிப்பு வருகிறது.
இதன் பொருள்: திக்குகளை உடைய ஆகாயத்துடனே நீரும் நிலனுமாகிய ஐந்தினையும் சேரப்படைத்த மழுவாகிய வாளை உடைய பெரியோனை ஏனையோரின் முதல்வனாகக் கொண்டு .... என்று கொள்ளலாம்.
இவ்வாறெல்லாம் பத்துப்பாட்டில் சிவனைப் பற்றிய அடையாளங்களுக்கான குறிப்புகள் காணப்படுகின்றன.