தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Saivam - 1.3 சங்கம் மருவிய காலத்தில்-1.3 சங்கம் மருவிய காலத்தில்

  • 1.3 சங்கம் மருவிய காலத்தில்
    E

    சங்க காலத்திற்கு அடுத்து வந்த காலப்பகுதியில் அறவழி கூறும் நூல்கள் மிகுதியாக வெளிவந்தன. சமயம் பற்றிய குறிப்புகள் பெரும்பாலும் இல்லையென்றே சொல்லலாம். பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்று அழைக்கப்படும் இந்தத் தொகுதியைச் சேர்ந்ததே திருக்குறள்.

    சங்கம் மருவிய காலத்தில்தான் சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இருபெரும் காப்பியங்கள் தோன்றின. இரண்டிலும் சமயக் கருத்துகள் பல கூறப்படுகின்றன. அவற்றுள் சிவனைப் பற்றிய குறிப்புகளை இங்கே நாம் காணலாம்.

    1.3.1 திருக்குறள்

    திருக்குறளில் அமைந்துள்ள கருத்துகள் அனைத்தும் பொதுவாக இருப்பதால் எல்லாச் சமயத்தினரும் திருக்குறளைத் தமது நூலாகவே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கேற்ப, இக்கருத்துகள் சைவசமயக் கொள்கைகளை எவ்வாறு புலப்படுத்துகின்றன என்று காணலாம்.

    கிறிஸ்துவுக்கு முற்பட்டதாகிய திருக்குறள் தனது முதல் அதிகாரத்தில் இறைவனுடைய இயல்புகளை எடுத்துக் கூறுகிறது.

    உலகில் நிறைந்தும், அதனைக் கடந்தும், அதனோடு உடனாயும் இருப்பவன் இறைவன் என்ற கருத்தை கடவுள் வாழ்த்தின்

     
    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு
    (குறள்:1)

    என்ற முதற் குறள் விளக்குகிறது.

    அகரஒலி மற்ற எழுத்தொலிகளோடு கலந்தும், தனித்தும், உடனாகவும் தான் மட்டும் இருப்பது போல (அ = அடிப்படை ஒலி அகரம். ஆகவே, அது எல்லா ஒலிகளிலும் கலந்து நிற்கிறது. அ = அகர ஒலி தனி ஒலி, க = க் + அ = க - அகர ஒலி உடனாக இருக்கிறது, ) இறைவன் மூன்று நிலைகளில் விளங்குகிறான் என்பது இக்குறளின் கருத்து.

    இறைவன் தூய அறிவுடையவன், தன்னை நினைப்பவர்களின் மனமாகிய மலரில் இருப்பவன்; அவனுடைய திருவடியை வணங்குபவர்கள் நீண்ட காலம் வாழ்வார்கள்; அவன் விருப்பு வெறுப்பற்றவன்; நல்வினை, தீவினை இரண்டும் அவனைச் சென்று பற்றுவதில்லை. புலன்களின் மயக்கத்தில் அவன் சிக்காதவன்; தனக்கு உவமை இல்லாதவன், அருட்கடலாய் விளங்குபவன், எண்குணத்தான்; இவ்வாறெல்லாம் இறைவனைத் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். அவன் திருவடியைச் சேர்ந்தவர்களே பிறவிக்கடலை நீந்துவார்கள். இவைபோன்ற சைவ சமயக் கருத்துகளைத் திருக்குறள் கடவுள் வாழ்த்துத் தொடர்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இதிலிருந்து சிவனை வழிபடும் வழக்கம் இருந்ததை அறிகிறோம்.

    1.3.2 சிலப்பதிகாரம்

    கிறிஸ்துவுக்குப்பின் தோன்றிய சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரண்டு காப்பியங்களும் சிவபெருமானைக் குறிக்கின்றன. இந்திரவிழவூர் எடுத்தகாதையில் ''பிறவா யாக்கைப் பெரியோன்'' என்று சிவனைச் சிலப்பதிகாரம் குறிக்கிறது (169-170).

    சிவந்த சடையினை உடைய சிவபெருமான் திருவருளினாலே வஞ்சிப்பதி விளங்குமாறு உதித்த சேரன் என்று சேரன் செங்குட்டுவனைக் குறிப்பதைக் கீழ்வரும் அடிகள் தெளிவாக உணர்த்துகின்றன.

     
    செஞ்சடை வானவன் அருளின் விளங்க
    வஞ்சித் தோன்றிய வானவன்

    (கால்கோள்காதை: 98-99)

    (செஞ்சடை வானவன் = சிவந்த சடையை உடைய தெய்வம் (சிவன்), வஞ்சித் தோன்றிய = வஞ்சி நகரில் பிறந்த, வானவன் = சேரன்)

    ஒளிபொருந்திய திங்களைச் சூடிய நீண்ட பெரிய சடை முடியினையும் உலகினை அகப்படுத்தும் வடிவத்தினையும் உடைய சிவபெருமான் திருவடிகளை, வெற்றி பொருந்திய வஞ்சி மாலை அணிந்து எவர்க்கும் வணங்காத தலையால் வணங்கி வலம் வந்ததைக் கீழ்வரும் அடிகள் உணர்த்துகின்றன.

     

    நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி
    உலகுபொதி யுருவத் துயர்ந்தோன் சேவடி
    மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து
    இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலங்கொண்டு

    (கால்கோள்காதை: 54)

    இவை சிவவழிபாடு இருந்தமையைத் தெளிவாகக் காட்டுகின்றன,

    1.3.3 மணிமேகலை

    புத்த சமயக் காப்பியமான மணிமேகலையில், அக்காலத்தில் இருந்த பல சமயங்களின் கருத்துகளைக் காண்கிறோம். மணிமேகலை அந்தந்த சமயவாதிகளிடம் அவற்றைக் கேட்டதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

    சிவனைப் பற்றிக் குறிப்பிடுகையில் ''நுதல்விழி நாட்டத்து இறைவன்'' என்று மணிமேகலை குறிப்பிடுகிறது. (இதற்கு நெற்றியில் கண் உடைய இறைவன் என்பது பொருள்). மணிமேகலை காலத்துக்குள் சிவன் என்னும் சொல்லும் அதனோடு தொடர்புடைய சைவம், சைவவாதி (27. அடி 87) முதலிய சொற்களும் நடைமுறையில் நன்கு பயின்றிருந்தன என்பதைத்தான் இவை குறிக்கின்றன. சைவத்தைப் பற்றிய முதல் குறிப்பு இதுவேயாகும்.

     

    .........இறைவன் ஈச னென
    நின்ற சைவ வாதிநேர்படுதலும்
    பரசுநின் தெய்வ மெப்படித் தென்ன
    இருசுட ரோடுஇய மான்ம் பூதமென்று
    ட்டு வகையும் உயிரும்யாக் கையுமாய்க்
    கட்டிநிற் போனும் கலையுருவி னோனும்
    படைத்துவிளை யாடும் பண்பி னோனும்
    துடைத்துத் துயர்தீர் தோற்றத் தோனும்
    தன்னில் வேறு தானொன் றிலோனும்
    அன்னோன் றைவன் குமென்று ரைத்தனன்

    (27: 86-95)


    இதன் பொருள்:

    இறைவன் எட்டு வடிவங்களை உடையவன். சூரியனும் நிலவும் ஐந்து பூதங்களும் உயிரும் சிவனுடைய வடிவங்கள். பலவகை அறிவு அவனுடைய உடலாக அமைந்துள்ளது. உலகத்தைப் படைப்பதும், அழிப்பதும் அவனுக்கு விளையாட்டு, பிறப்பு இறப்புகளினால் உயிர்கள் அடையும் இளைப்பை அவன் மாற்றுகின்றான். அவனினும் உயர்ந்தவர் யாரும் இல்லை. அவன் பெயர் ஈசன் என்பதாகும். மணிமேகலையின் இப்பகுதி, சைவசமயம் விரிவாகப் பரவியிருந்ததையும் அதன் கொள்கைகள் வரையறுக்கப்பட்டிருந்ததையும் குறிப்பிடுகிறது.

    1.3.4 கல்லாடம்

    சைவத் தமிழ் இலக்கிய வரிசையில் குறிப்பிடத்தக்க பழமையான நூல் கல்லாடம். ‘கல்லாடம் கற்றவனோடு சொல்லாடாதே’ என்பது இந்நூலைக் கற்றாரின் ஆற்றலை விளக்கும் ஒரு பழமொழி. கல்லாடர் என்பார் இந்நூலை இயற்றினார். இந்நூல் கடைச்சங்க காலத்திற்கும், தேவார ஆசிரியர்கள் காலத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியைச் சார்ந்தது. பிற்காலத்தில் சைவ சமயம் சார்ந்த கோவை நூல்கள் தோன்றுவதற்குக் கல்லாடம் வழிவகுத்தது. இந்நூல் மதுரையில் எழுந்தருளியிருக்கும் இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல்களையும், மதுரை நகரச் சிறப்புகளையும் விரித்துரைக்கிறது. திருமுருகாற்றுப்படையை முதல் முருக இலக்கியமாகக் கொள்வது போல், சிவன் சிறப்புரைக்கும் முதல் இலக்கியமாக இதனைக் கருதலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 15-09-2017 11:09:19(இந்திய நேரம்)