தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

P202254.htm-திருமங்கை ஆழ்வார்

  • 5.4 திருமங்கை ஆழ்வார்

    திருமங்கையாழ்வார் சோழ நாட்டில் உள்ள திருவாலி
    திருநகரிக்கு அருகில் இருக்கின்ற திருக்குறையலூரில்
    கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் அவதரித்தவர்.
    இவர் அருளியவை:

    1.
    பெரிய திருமொழி (1084 பாசுரங்கள்)
    2.
    திருக்குறுந்தாண்டகம் (20 பாசுரங்கள்)
    3.
    திருநெடுந்தாண்டகம் (30 பாசுரங்கள்)
    4.
    திரு எழு கூற்றிருக்கை ( 1 பாசுரம்)
    5.
    சிறிய திருமடல் (40 பாசுரங்கள்)
    6.
    பெரிய திருமடல் (78 பாசுரங்கள்)

    ஆக ஆறு திவ்வியப் பிரபந்தங்களில் 1253 பாசுரங்கள்
    அருளியுள்ளார். இவற்றுள் பல யாப்பு வடிவங்களைப்
    பயன்படுத்தி உள்ளார்.

    திருமங்கை ஆழ்வார் பிறக்கும் பொழுது கரிய
    நிறம் உடையவராய் இருந்ததால் பெற்றோர்கள்
    நீலன் என்னும் திருநாமம் சூட்டினார். சோழ
    மன்னன் ஆழ்வாரின் வீரத்தைப் போற்றி,
    அவரைத் திருவாலியின் குறுநில மன்னன்
    ஆக்கினான்.

    இவர் திருவெள்ளக் கோயிலில் குமுதவல்லியைக் கண்டு
    காதல்கொண்டார்.     அம்மையார், ஒருவருடம் 1008
    வைணவர்களுக்கு அமுது செய்விக்க வேண்டும் எனப்
    பணித்தார்.

    • அடியார்களுக்கு அமுது செய்வித்தல்

    அடியார்களுக்கு அமுது செய்யவே பணம் தீர்ந்தது. சோழ
    மன்னனுக்கு வரி செலுத்தப் பணம் இல்லை. அரசன்
    படையுடன் வந்து திருமங்கையைச் சிறைப்பிடித்தான். காஞ்சி
    வரதராசப் பெருமான் இவர் கனவில்தோன்றி, பணம்
    தருவதாகச் சொல்லி, மறைந்தார். இறைவன் கொடுத்த
    பணத்தில் வரி செலுத்தியதை அறிந்த மன்னன் பணத்தைத்
    திருமங்கையாரிடம் திரும்பக் கொடுத்தான்.

    • எட்டெழுத்து மந்திரம்

    திருமங்கை, கொள்ளை அடித்தாவது அடியார்களைப் பேண
    வேண்டும் என்னும் கொள்கை உடையவர் ஆனார். ஒருமுறை
    பெருமான், மணக்கோலத்தில் வர, ஆழ்வார் அவர்களிடம்
    இருந்த பொருள்களைப் பறித்தார். அப்பொழுது மணமகன்
    காலில் உள்ள நகையைக் கழற்ற இயலாமல் பல்லால் கடிக்க,
    பெருமானால், கலியன்     (பலம்     மிக்கவன்) என
    அழைக்கப்பட்டார். அவர்களிடம் கவர்ந்த பொருள்களை
    அடியாரால் எடுத்துச் செல்ல முடியவில்லை. அதற்கான
    காரணத்தை அந்தணர் வடிவில் வந்த பெருமானிடம் கேட்க,
    எட்டெழுத்து மந்திரம் (ஓம் நமோ நாராயணாய)
    உபதேசிக்கப்பட்டு, திவ்வியப் பிரபந்தங்களை அருளும் பேறு
    பெற்றார்.

    திருமங்கை,     தமிழ் யாப்பு வடிவங்களைக் கவினுறக்
    கையாண்டு நூல் அருளியவர்; 108 திவ்ய தேசங்களில் 85
    திருத்தலங்கள் பற்றிப் பாடி உள்ளார் என்பர். திருஉருவ
    வழிபாட்டில் (அர்ச்சா அவதாரம்) மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

    5.4.1 பெரிய திருமொழி

    நலம் தரும் சொல் திருக் குடந்தையைத் தொழுது
    நற்பொருளை நல்ல துணையாகப் பெற்றேன்; ‘நலம் தரும்
    சொல் நான் கண்டு கொண்டேன்’ எனப் பாடுகிறார்
    திருமங்கையாழ்வார் .


    ‘நாடினேன்; நாடி நான் கண்டு கொண்டேன்

    நாராயணா என்னும் நாமம்

    (948:4)

    என அச்சொல் எதுவெனக் காட்டி, பெரிய திருமொழியை
    ஏக்கத்துடனும் மனநிறைவுடனும் தொடங்குகின்றார்.

    • நாமப் பெருமை

    நாராயணா என்ற பெயர் தரும் பயன் திருமாலின் திருநாமம்
    ‘குலம் தரும்; செல்வம் தரும்; வெற்றி தரும்; அருள் தரும்;
    பெற்ற தாயினும் நல்லன செய்யும்’(956) என்று புகழ்கின்றார்.
    ‘பரமனைப் பாடி நீர் உய்தி பெறுவீர். நம்முடைய வினைக்கு
    நஞ்சுதான் கண்டீர் நாராயணா என்னும் நாமம்’ (954) என்பர்.
    இராம, கிருஷ்ண அவதாரங்களின் பெருமையைக் கதை
    போலச் சொல்லும் பாசுரங்கள் பல (978-997) உள்ளன.

    இலங்கை அரக்கன் இராவணனின் தலைபத்தும் அறுத்தவன்
    வாழும் இடம், இரணியனைப் பிளந்தவன், ஐம்பெரும்
    பூதங்களானவன், சாளக்கிராமத்து அடிகள் எனத் திருமால்
    கோயில் கொண்டுள்ள இடங்களின் திருமூர்த்தியைப்
    போற்றுகின்றார் (996:1-2)

    5.4.2 அவதாரங்கள்

    எல்லாப் பாசுரங்களும் அவதாரங்களைச் சுட்டுகின்றன,
    எனினும் ‘திருமாலின் திருஅவதாரங்களில் ஈடுபடுதல்’
    (1982-1991) பெரிய திருமொழியில் நாலாம் பத்தில் உள்ளது.
    அதில் முறையே மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம்,
    வாமனம், பரசுராமன், இராமன் அவதாரங்கள் மூலம்
    திருமாலின் பெருமை பற்றிப் பேசுகின்றார் ஆழ்வார்.

    • மானிட உறுப்புகள் பயன்

    புள்ளில் (கருடன்) ஊர்ந்து திரிவான் பொன்மலையைக்
    கண்கள்     காணவேண்டும். செவிகள் தொண்டர்க்கு
    இனியவனைக் கேட்க வேண்டும். பேச்சு திருமாலின் பெருமை
    பற்றிய பேச்சாக இருக்க வேண்டும். பாட்டு நறுந்துழாய்
    மாலை அணிந்தவனை ஆர்வத்தால் பாடவேண்டும். கைகள்
    சங்கேந்தும் கையானைத் தொழ வேண்டும். உள்ளம் அவனை
    உள்ள (நினைக்க) வேண்டும். நெஞ்சு மலரிட்டு அவனை
    நினைக்க வேண்டும். (2012-2019) நப்பின்னைக்காக ஏழு
    எருதுகளை வென்றவனுக்கு ஆட்படாதவர்கள் ‘மானிடவர்
    அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே’ (2020) எனப்
    பக்தியின் எல்லைக்கே சென்று விடுகின்றார்.

    • இரணியன் வதம்

    நரசிம்மர் கோயில் கொண்டுள்ள சிங்கவேள் குன்றம் பற்றிய
    பாசுரங்கள் பத்தும் (1008-1017) நரசிம்ம அவதாரத்தை மட்டும்
    பேசுகின்றன.

    • இராமகாதை

    காவித்துணியால் உடம்பை மூடி, சானகியைக் காதல் செய்த
    இராவணனை அழித்தவன்; அனுமனைத் தூது அனுப்பியவன்
    (1074) என்றும், விபீடணனைச் ‘செல்வ விபீடணன் (1522),
    எந்தை விபீடணன் (1541) என்றும் போற்றுகின்றார்.
    தோல்வியுற்ற அரக்கர் நிலை (1858-1877), இரணியன்
    பிரகலாதன் உரையாடல், நரசிம்ம அவதாரம் (1075) பற்றியும்
    பேசும் ஆழ்வார், கிருஷ்ண அவதாரத்தையும் பாரதக்
    கதையையும் இணைத்து, திவ்விய தேசப் பெருமையைப்
    பாடுவது குறிப்பிடத்தக்கது.

    • திருவடிச் சிறப்பு

    வையம் தொ¿ம்,

    முனியை வானவ ரால் வணங்கப்படும்
    முத்தினைப் பத்தர்தாம் நுகர் கின்றதோர்
    கனியைக் காதல் செய்து என்உள்ளங் கொண்ட
    கள்வனை இன்று கண்டு கொண்டேனே

    (1575:3-4)

    எனச் சிக்கெனப் பிடிக்கின்றார் ஆழ்வார்.

    ‘பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர்கள் பின் உதவார்
    என்பது அறிந்தேன். நீ பணித்த அருள் என்னும் ஒளி
    பொருந்திய வாளை உருவி எறிந்தேன். ஐம்புலன்கள் இடர்தீர
    எறிந்து வந்து நின்னடியைச் செறிந்தேன்’ (1461) என ஆன்மா
    இறைவனுடன் இரண்டறக் கலக்க விழைந்த பேற்றைப்
    பாடுகின்றார். பிறவிப்பிணி வேண்டேன். அந்தோ! மனை
    வாழ்க்கை தன்னை வேண்டேன் (1462). கல்லா ஐம்புலன்களும்
    பாடாய்ப்படுத்துகின்றன அவற்றிலிருந்து விடுபட்டு உன்னைச்
    சரண் அடைந்தேன். ‘சுடர்போல் என் மனத்து இருந்த
    வேதனே’ எனத் தமிழ் மாலையால் திருமாலை ஆட்படுத்திக்
    கொள்கிறார் ஆழ்வார்.

    • வழிபாடு: பிறவி நீங்க வழிபடல்

    மக்கள் கருவில் என்னைத் தோற்றுவிப்பாயோ'

    என அஞ்சும் ஆழ்வார்

    ஆற்றங் கரைவாழ் மரம்போல அஞ்சுகின்றேன்
    (2022:3)

    காற்றில் அகப்பட்ட கலத்தில் உள்ளவர் மனம்போல் (கலவர்)
    நடுங்குகின்றேன் (2023), பிறவிக்கண் புகச் செய்வாய் எனக்
    கருதி ‘பாம்போடு ஒரு கூரையில் (கூட்டில்) வாழ்வது போல
    மனம் அஞ்சுகின்றது’ (2024) இருபக்கமும் நெருப்பு எரிகிற
    கொள்ளியில் மாட்டிக் கொண்ட எறும்புபோல் என் உள்ளம்
    உருகும் (2025) இடும்பைக் குழியில் விழச் செய்வாய் என
    அஞ்சி ‘வெள்ளத்திடை சிக்கிக் கொண்ட நரிக்கூட்டம் போல
    (2026) என் உள்ளம் தடுமாறுகின்றது என்றெல்லாம் பிறப்பைப்
    போக்க வேண்டிப் பெருமாளைக் கெஞ்சும் திருமங்கை
    ஆழ்வார் அழகிய உவமைகளைப் பெய்து, அவற்றின் வழித்
    தம் நிலையையும் உணர வைக்கின்றார்.

    ஆழ்வாரின் அச்சம் பாசுரங்களைப் படிப்போரை பக்தி
    உலகுக்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் மிக்கவை.

    பாடோமே எந்தை பெருமானை? பாடிநின்று
    ஆடோமே ஆயிரம் பேரானை? பேர்நினைந்து
    சூடோமே சூடும் துழாய் அலங்கல்? சூடிநாம்
    கூடோமே கூடக் குறிப்பாகில் நன்னெஞ்சே!

    (1979)

    (துழாய் = துளசி, அலங்கல் = மாலை)

    வழிபாடு செய்யும் ஆழ்வாரின் மன நிலையைக் காட்டுவது
    மேற்காட்டிய பாசுரம்.

    • திருச்சாழல்

    பெருமானின் எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள்
    எதிர் எதிராகக் கூறும் வினா விடையில் காட்டும் நிலையில்
    அமைந்தது திருச்சாழல் என்னும் இலக்கியவகை. இதைத்
    திருமங்கையாழ்வார் கையாள்கிறார் (1992 - 2001) இது
    பக்தியைப் பரப்ப நாட்டுப்புற இலக்கிய வகை பயன்பட்டதற்கு
    சான்று

    வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு
    கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ
    கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும்
    எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே!

    (1996)

    என்று பெண்கள் பாடுவதாக அமைத்து, பக்திப் பாடல்களைப்
    பாடும்போது, எழுதப் படிக்கத் தெரியாத மக்களிடமும்
    அப்பாடலை நினைவில் வைத்துப் பாடுகின்ற ஆற்றலும்
    வாய்ப்பும் உருவாகும் வண்ணம் பாடியுள்ளார்.

    • திருமங்கை நாயகி

    தலைவனைப் பிரிந்த தலைவி வண்டு முதலியவற்றை நோக்கிக்
    கூறுதல் (1198-1207), உடன்போக்கில் சென்ற தலைமகளைக்
    குறிக்கத் தாய் இரங்குதல் (1208-1217) போன்ற அகப்பொருள்
    துறையில் அமைந்த பாசுரங்கள் நாயகியாகிய ஆழ்வார்
    இறைவன் மீது கொண்ட காதலைப் பாடுகின்றன.

    மண் அளந்தவன், குடந்தை நகர் உள்ளவன் தனக்குத்
    துணையாளன் ஆகவேண்டும் (1206) எனச் சொல்லி, சிறு
    வண்டைத் தன் காதல் நோய் உரைக்க வேண்டுகின்றாள்.



    வெள்ளி வளைக் கைப்பற்ற

    பெற்ற தாயரை விட்டு அகன்று
    அள்ளல் அம் பூங்கழனி
    அணி யாலி புகுவர் கொலோ?

    (1208:3-4)

    (வெள்ளி வளை = ஒளி பொருந்திய வளை, அள்ளல் =
    சேறு, ஆலி = திருவாலி நகர்)

    எனத் திருமணத்திற்கு முன் உடன் சென்ற மகள் நிலையைச்
    சொல்லி இரங்குகின்றாள்.

    அகப்பொருள் துறையில் தாய், தலைவன் பெயரை அறிந்து
    சொன்னதாகப் பாடல் அமையாது. ஈண்டு பக்தி இலக்கியம்,
    பக்தியைப் பரப்பும் இலக்கியம் என்பதால் தாய் தலைவன்
    பெயர் அறிந்து சுட்டுகிறாள். மேலும் தன் மகள் ‘கண்ணன்’
    என்றும் ‘நேசன்’ என்றும் தேவதேவன் என்றும் சொல்லி,


    பலரும் ஏச என்மடந்தை

    பார்த்தன் பள்ளி பாடுவாளே

    (1325:4)

    எனத் தாமரையாள் (திருமகள்) கேள்வனைத் தன் மகள்
    நினைந்து உருகுவதைச் சொல்லிப் புலம்புகின்றாள்.

    5.4.3 திருக்குறுந்தாண்டகம்

    • இறையனுபவம்


    இரும்பு அனன்று உண்ட நீர்போல்
    எம் பெருமானுக்கு என்தன்
    அரும் பெறல் அன்பு புக்கிட்டு
    அடிமை பூண்டு உய்ந்து போனேன்


    (2036)

    (அனன்று = பழுக்கக் காய்ச்சிய)

    என்னும் இப்பாசுரம் ஆழ்வாரின் இறை அனுபவத்தை
    விளக்கும்     அழகிய உவமை கொண்ட அற்புதமான
    எடுத்துக்காட்டு. ‘காய்ச்சிய இரும்பில் பட்ட நீர்’ என்பது
    ஆன்மாவும் பரமான்மாவும் கூடிய நிலையைக் காட்டும்.

    • அடியார்க்கு அடியார்

    திருமலை ஒருமையானை
    தன்மையை, நினைவார் என்தன்
    தலைமிசை மன்னு வாரே

    (2038)

    (ஒருமையானை = ஒப்பற்றவனை)

    என்று இறை அருளையும், வண்ணத்தையும் சொல்லி
    அரங்கநாதனைப் போற்றி நினைப்பவர்கள் தலைமேல் வைத்து
    மலர் போலச் சூடத் தக்கவர்கள் என அடியார்க்கு அடியார்
    ஆகின்றார் திருமங்கை.

    இன்பப்பாடல், பச்சைத் தேன், பைம்பொன், மரகதம், நிதி,
    பவளத் தூண் என அலைகடல் வண்ணனைக் கண்ணுக்கும்
    மனத்துக்கும் இனியவன் ஆகக் காண்கின்றார்.

    கரும்பினைக் கண்டு கொண்டுஎன்
    கண்ணிணைக் களிக்கு மாறே

    (2044:4)


    அரங்கனை இரண்டு கண்களாலும் கண்டதாகப் பாடுகிறார்
    ஆழ்வார்.

    அன்பினால் ஞான நீர் கொண்டு
    ஆட்டுவன் அடியனேனே

    (2046:3-4)

    என்றும், மாரீசமானைக் கொன்று, மருதமரங்களை முறித்து,
    வையம் அளந்தவனை, வானில் வாழும் தேவர்களுக்கு
    அமுதம் கொடுத்தவனை ‘என்னுடைச் சொற்கள் என்னும்,
    தூயமாமாலை கொண்டு சூட்டுவன் தொண்டனேனே’

    (2048:4) ஏனெனில் பிறவி நீக்குவதற்கு ஆசை பெரிதும்
    உடையேன் என்கின்றார்.

    5.4.4 திருநெடுந்தாண்டகம்

    செந்திறத்த தமிழ்ஓசை வடசொல்லாகி

    (2055:2)

    என்று எல்லாம் ஆக இறைவனைக் காணும் ஆழ்வார்
    மொழியாகவும் காண்பது சிறப்பு. குலசேகரரும் (650)
    இருமொழியாகப் பெருமாளைக் காண்பதைத் திருமொழி
    காட்டுகிறது. தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் இரங்கல்
    போன்ற அகப்பொருள் துறைகளில் அமைந்த பாசுரங்கள்
    உள்ளன.

    திருமங்கை ஆழ்வார் தாய், தலைவி ஆகிய இருநிலைகளிலும்
    தன் பக்திக் காதலைப் பொழிகின்றார். தலைவியாக (நாயகி)
    இருந்து பக்திக் காதலை வெளிப்படுத்துவதில் மனநிறைவு
    பெறாத அடியார்கள், மகள் நிலையைப் படைத்துக் கொண்டு,
    தாயாகிப் பேசுகின்றனர் என்று கொள்ளத் தோன்றுகிறது.
    அதாவது தலைவி கூற்றைவிடத் தாய் கூற்றில் மகள் நிலை
    உரைத்தல் பக்தி உணர்வை வளப்படுத்துகிறது போலும்!

    நீரகத்தாய்! நெடுவரையின் உச்சி மலோய்!
    நிலாத் திங்கள் துண்டத்தாய்! நிறைந்த கச்சி
    ஊரகத்தாய்!
    ஒண்துறைநீர் வெஃகா உள்ளாய்!
    உள்ளுவார் உள்ளத்தாய்! உலகம் ஏத்தும்
    காரகத்தாய்! கார்வானத் துள்ளாய்! கள்வா!

    காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு
    பேரகத்தாய்! பேராதுஎன் நெஞ்சின் உள்ளாய்

    பெருமான்! உன் திருவடியே பேணி னேனே

    (2059)

    (நெடுவரைஉச்சி = திருவேங்கடம், நிலாத்திங்கள்
    துண்டம்
    = ஏகம்பர் கோயிலில் உள்ள பெருமாள், கச்சி =
    காஞ்சி, ஊரகம் = உலகளந்தார் கோவில்; நீரகம், காரகம்,
    கார்வானம் மூன்றும் உலகளந்தார் கோவிலில் உள்ள
    சந்நிதிகள், வெஃகா = சொன்ன வண்ணம் செய்த பெருமாள்
    கோவில், கள்வன் = காமாட்சி கோவிலின் உள்ளே உள்ளது,
    காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய்
    = திருவரங்கம்)

    இப்பாசுரம் காமருபூங்கச்சியில் எழுந்து அருளும் பெருமானின்
    திருத்தலங்களையும் நீக்கம் அற நிறைந்து இருக்கும்
    நிலையையும் காட்டுகின்றது.

    5.4.5 திருஎழு கூற்றிருக்கை

    திரு எழு கூற்றிருக்கை என்பது தமிழ் யாப்பு வகைகளில் மிகக்
    கடினமானது. இதைச் சித்திரகவி என்றும் அழைப்பர்.

    கவிதை முழுக்க முழுக்க திருக்குடந்தைப் பிரானின்
    பெருமையையும் குடந்தையின் இயற்கைக் காட்சிகளையும்
    காணலாம்.

    பக்தியை எண்களில் வடித்து வெளிப்படுத்த முடியும்
    என்பதற்கு இப்பாசுரம் ஓர் எடுத்துக்காட்டு.

    செல்வம் மல்குதென் திருக்குடந்தை
    அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
    ஆடு அரவு அமளியில் அறிதுயில் அமர்ந்த
    பரம! நின் அடியிணை பணிவன்

    வரும் இடர் அகல - மாற்றோ வினையே

    (3774:43-47)

    (அரவு அமளி = பாம்புப் படுக்கை)

    என்று துன்பங்களைக் களைந்து அருள் தரும்படி பாசுரம்
    நிறைவு பெறுகின்றது.

    ஆழ்வார்கள் அருளிய பனுவலில் சற்று வித்தியாசமான
    நோக்குடைய - வடிவம் உடைய நூல் இப்பிரபந்தம் ஆகும்.

    திருமங்கை ஆழ்வார் அருளிய சிறிய திருமடல், (3775) பெரிய
    திருமடல் (3815) ஆகியவற்றைத் தனித்தனிப் பாடலாகவும்,
    பாசுரங்களாகவும் (40,78), கண்ணிகளாகவும் (771/2. 1481/2)
    கணக்கிடும் முறை அறிஞர்கள் இடையே உள்ளது. இருப்பினும்
    யாப்பு விதிப்படி தனித்தனிப் பாடல்களாகக் கொள்வது சிறப்பு.

    5.4.6 சிறிய திருமடல்

    தெருவில் செங்கண்மால் என்று ஒருவன் வந்தான்.
    எல்லோரும் என்னை அழைக்க நான் சென்றேன்.
    கைவளையும்     காணவில்லை     என்கிறாள் தலைவி.
    கட்டுவிச்சியிடம் குறிகேட்க, சுளகில் சில நெல்லை வீசி
    நும்மகளை நோய் செய்தவன் இவன் என வலம்புரியானின்
    அவதாரப் பெருமையைத் தொகுத்துக் கூறுவது போல் மடல்
    அமைந்து உள்ளது. மணிவண்ணனிடம் திருத்துழாய் மாலை
    வேண்டி நிற்கின்றாள் திருமங்கை நாயகி

    பேரா யிரமும் பிதற்றி - பெருந்தெருவே
    ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
    வாரார்பூம் பெண்ணை மடல்

    எனச் சிறிய திருமடல் நிறைவு பெறுகின்றது.

    5.4.7 பெரிய திருமடல்

    திருமங்கை நாயகியின் பெண்மையும் நலனும் முலையும்
    மலர்மங்கை மைந்தன் கண்ணபுரத்தானுக்கு அவனுடைய
    நுகர்வுக்கு உடையன. அவை அழகிய கொடிமலரின் மணம்
    யாரும் நுகரப் பெறாமல் வீணாக நிலத்தில் உதிர்வது போல்
    பயனற்றுப் போவதற்கு உரியது அன்று என்பதாம். தலைவியின்
    எழில் மூப்பு அடைவதால் குறையும். மூப்பு அடையாமல்
    இருக்க மருந்து அறிவார் இல்லையோ? என வினவுகின்றாள்.

    காமத்தின்பால் நின்ற நாயகி,
    'அன்ன நடையார் அலர் ஏச ஆடவர் மேல் மன்னும்
    மடல் ஊரார் என்பது ஓர் வாசகமும் தென் உரையில்
    கேட்டு அறிவது உண்டு அதனையாம் தெளியோம்!
    மன்னும் வடநெறியே வேண்டினோம்'

    எனத்தன் நோக்கைத் தெளிவுபடுத்துகிறாள். உலகம் அறியப்
    பெருமானை நினைந்து பெண்ணை (பனை) மடல் ஊர்வேன்
    என்பதாகப் பெரிய திருமடல் நிறைவடைகின்றது.

    தொல்காப்பியம் பெண்கள் மடலூர்தல் (நூற்பா: 54-1) இல்லை
    என்று குறிக்கின்றது. பன்னிருபாட்டியல் இறைவன் தலைவனாக
    வரும்பொழுது தலைவி மடலூர்வாள் எனப் பெண்
    மடலூர்தலை இலக்கணப்படுத்துகிறது.

    ‘மடல்’ என்னும் அகப்பொருள் துறை ஆழ்வாருக்கு ஓர்
    இலக்கிய வகையைப் படைக்கத் துணை நின்றுள்ளது.

    தலைவியிடம் தலைவன் கண்ட இன்பம், இறைவனிடம்
    அடியார் காண்கின்றனர்.

    எனவே அகப்பொருளில் தலைவி பெற்றிருந்த இடத்தைப்
    பக்தி இலக்கியத்தில் இறைவன் பிடித்துக் கொள்கின்றான்.
    நாயகி நிலையில் நிற்கும் ஆழ்வார்கள் அகப்பொருள்
    தலைவன் செயலை மேற்கொண்டு ஒழுகுவதாக பக்தி
    இலக்கியம் காட்டுகிறது. திருமங்கை ஆழ்வார் தாம் அருளிய
    6 திவ்வியப்பிரபந்தங்கள் வழி:

    • பல்வேறு யாப்பு வடிவங்களைப் பக்தி இலக்கியத்திற்குப்
      பயன்படுத்திக் கொண்டார்.

    • நாட்டுப்புறப்பாடல் வகைகளைப் பின்பற்றி, பக்தி
      நெறியைப் புலப்படுத்தினார்.

    • சித்திரகவி படைத்துப் பக்தி உலகுக்கு வளம் சேர்த்தார்.

    • தாண்டகங்கள் அருளி அவற்றுள்ளும் நாயகநாயகி
      பாவத்தை அருளினார்.

    • அகப்பொருள் துறையைப் பயன்படுத்திக் கொண்ட
      ஆழ்வார் நாயகி நிலையில் இருந்து பாடியிருப்பவை
      பக்தியின் முதிர்கனிகள் ஆகும்.

    • மடல் துறைவழி ஓர் புதிய இலக்கிய வகையைப் படைத்த
      பெருமைக்கு உரியவர்.

    • பக்தி இலக்கியத்தை, பக்தி இயக்க இலக்கியம் ஆக்கி,
      தமிழ் வளத்துக்கும் இலக்கிய வகைப் பெருக்கத்திற்கும்
      வித்திட்டவர்.

    • இறைவன் கோயிலில் எழுந்தருளி இருக்கும் தோற்றத்தில்
      (அர்ச்சாவதாரம்) ஈடுபாடு கொண்டு ஏராளமான
      பாசுரங்களைப் பக்திச் சுவை ததும்பப் பாடிய
      பெருமைக்கு உரியவர்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:39:22(இந்திய நேரம்)