தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

P20224mn.htm-[Back]

E

பாடம் - 4

P20224 திருத்தொண்டும் காதலும்



இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

பெரியாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், குலசேகராழ்வார், ஆண்டாள் ஆகியோரின் திருத்தொண்டையும் திருமால்மீது அவர்கள் கொண்ட காதலையும் விவரித்துக் கூறுகிறது இப்பாடம்.

பல்லாண்டு வாழ அருள்புரியும் பெருமானுக்குப் பல்லாண்டு பாடிய பெரியாழ்வார் தாயாக மாறிக் கண்ணனைத் தாலாட்டிப் பரவசமடைந்தவர். பிள்ளைத்தமிழ் இலக்கிய வகை தோன்ற வித்தூன்றிய பெருமைக்கும் உரியவர்.

தொண்டர் அடிப்பொடியாழ்வாரோ திருமாலையே சரணடைந்து அவன் நாமத்தைச் சொல்லுவதில் பெரும் பேறடைந்தவர். திருவரங்கனின் பெருமையும் இராமாவதாரச் சிறப்பும் இவர் பாசுரங்களில் விளக்கம் பெறுகின்றன.

திருப்பாணாழ்வாரின் பாசுரங்கள் இறைவனையே மகிழ்வித்து, நம்பாடுவான் என்ற நாமத்தை அவருக்குச் சூட்டும்படி செய்தன.

மன்னர் பரம்பரையில் பிறந்தும் மண்ணரசு வேண்டாது விண்ணரசை வேண்டி நின்றவர் குலசேகர ஆழ்வார். திருவேங்கடத்தான் கருணையை எதிர்நோக்கியிருந்தவர், தானே தசரதனாகி இராமாவதாரப் பெருமையைப் பாடி மகிழ்ந்தவர்.

இறைவன் சூட வேண்டிய மாலையைத் தான் சூடிக் கொடுத்து, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகியவற்றை அருளிச்செய்து, ஆழ்வார்களில் ஒருவராய் உயர்ந்து நின்றார்; மானிடர்க்கென்று பேச்சுப் படில் வாழகில்லேன் என்று இறைவனையே அடைந்தவள்.

மேற்கூறிய அனைத்தையும் இப்பாடம் விரிவாகப் பேசுகிறது.



இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • பூமாலை தொடுத்துத் திருமாலை வழிபட்டவர்களாகிய பெரியாழ்வாரும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் அருளிய பாசுரங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

  • இறைவனுக்குப் பாசுரங்களால் மாலை தொடுத்துச் சொல் மாலையை இசைபாடிச் சூட்டிய திருப்பாணாழ்வாரின் பாதாதி கேச (திருவடி முதல் திருமுடிவரை) வருணனையில் தோய்ந்து பக்தி இலக்கிய வகையை அடையாளங் காணலாம்.

  • இராம அவதாரத்தில் தோய்ந்து தந்தையாக நின்று, இராமன்மேல் கொண்ட காதலைப் புலப்படுத்திய குலசேகரரின் "மகன்மேல் காதல் நெறியில்" ஆழ்ந்து அனுபவிக்கலாம்.

  • பன்னிரு ஆழ்வார்களுள் ஒரே பெண்ணான ஆண்டாள் (பக்திக்) காதலின் ஆளுமையை அடையாளங் காணலாம்.

  • ஒவ்வொரு ஆழ்வாரும் காட்டும் பக்திக் காதலின் புலப்பாட்டு நெறியில் தோய்ந்து, அவர்கள் (உளவியல் பாங்கில் நின்று) தாயாக - தலைவியாக - தந்தையாக - அடியாராகப் பாவிக்கும் பாவனை முறைகளைத் தொகுத்துப் பட்டியலிடலாம்.

  • அரங்கன் மீது கொண்ட காதலில் கனிந்து நின்ற ஆண்டாளின் தனித்தன்மையை அறிந்து கொள்ளலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-06-2018 18:12:22(இந்திய நேரம்)