Primary tabs
1.2 கிறித்தவக் கவிதைகள் - II (புதுக் கவிதை)
கிறித்தவக் கவிஞர்கள் பலர் கிறித்தவப் பொருள் பொதிந்த புதுக்கவிதைகளைப் படைத்துள்ளனர். மேலும் கிறித்தவக் கூறுகள் குறியீடுகளாகவும் (symbol) படிமங்களாகவும் (image) புதுக்கவிஞர்களால் எடுத்தாளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சிலுவையைக் குறியீடாகப் பயன்படுத்தும் போக்கைத் தமிழ்ப் புதுக்கவிதைகளில் மிகுதியாகக் காண முடிகிறது.
• சிலுவையும் குறியீடும்
கிறித்தவப் பொருள் பொதிந்த புதுக்கவிதைகளில் இயேசுவின் வாழ்வும், சிலுவையின் மாண்பும் சிறப்பாகப் பேசப்பட்டுள்ளன. விவிலியச் செய்திகள் சிறப்பாக எடுத்தாளப்பட்டுள்ளன. இவற்றின் வாயிலாகச் சமுதாய அக்கறையும் சீர்திருத்த நோக்கும் வெளிப்படுவதைக் காணமுடிகிறது.
• புதுக்கவிதை நூல்கள்
பிரியகுமாரனின் ‘இவனைச் சிலுவையில் அறையுங்கள்’ ஜெசர் ஜெபநேசனின் சுதந்திரத்தின் பரப்பளவு ஆகிய கவிதை நூல்கள் குறிப்பிடத்தக்க கிறித்தவப் புதுக்கவிதைத் தொகுப்புகள் எனலாம். நிர்மலா சுரேஷின் இயேசு மாகாவியம் புதுக்கவிதையால் இயேசுவின் வரலாற்றைச் சிறப்பாக கூறுகிறது. தே.சுவாமிநாதனின் ‘மண்ணில் இருக்குது மோட்சம்’ ‘இந்தக் கற்கள் உரக்கப் பேசும்’ ‘ஒரு சிங்கம் கர்ச்சிக்கிறது’ போன்ற படைப்புகள் புதுக்கவிதை நடையில் விவிலியச் செய்திகளைக் கூறுகின்றன. கவிஞர் தயா, வலம்புரி ஜான், மதுரை புனிதன், மு.அ.எழிலன், குரூஸ், பாரதி கண்ணம்மா, மோகனப் பிரியன், ஆத்தூர் சாதனா, பிளாரான்ஸ் போன்றோர் கிறித்தவப் புதுக்கவிதை படைப்பாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.
இயேசுவின் பிறப்பும், வாழ்வும், மரணப்பாடுகளும், மறு உயிர்ப்பும் தமிழ்ப் புதுக்கவிதைகளில் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளன. இயேசு கையாண்ட உவமைக் கதைகள், நிகழ்த்திய அருட் செயல்கள், உணர்த்திய அறவுரைகள் ஆகியனவும் புதுக்கவிதைகளில் சிறப்பாக எடுத்தாளப்பட்டுள்ளன.
• இயேசுவின் பிறப்பு
இயேசுவின் பிறப்புக் காட்சியைக் கவிஞர் நிர்மலா சுரேஷ் பின்வருமாறு விவரிக்கிறார். குழந்தை இயேசுவுக்காக வைக்கோலைப் பரப்புகிறார் மரியாள்; மேற்புறத்தில் கூடு கட்டியிருந்த சிட்டுக் குருவிகளும் சில சருகுகளைக் சிந்துகின்றன.
அந்த நடு நிசியின்
அடுத்த நொடியில்
புல் படுக்கையில்
பூமியின் அச்சு -
தேவ சாசனத்தின்
மனித மொழிபெயர்ப்பு -
நிலவிளக்கு பெற்றெடுத்த
நிரந்தர மின்னல்(இயேசு மாகாவியம் : பக். 33-34)
உலகம் முழுவதையும் இயக்குவதற்கு அடிப்படையாயுள்ள அச்சாகிய இயேசு தோன்றினார். இறைவனின் பிரதிநிதியாக மனித குலத்தில் தேவ கட்டளையை மனித மொழியில் கூற வந்தார் இயேசு. உலகம் எப்போதும் ஒளிபெற்றுத் திகழ, பெற்றெடுத்த நிலையான மின்னல் போன்ற இயேசு பிறந்தார் என்று மேற்குறிப்பிட்ட பாடலுக்குப் பொருள் கூறலாம். மேலும் மின்னல் தோன்றி மறைவது. ஆனால், இயேசு மனித குல வாழ்விற்கு நிலையான ஒளி தருபவர். எனவே, ‘நிரந்தர மின்னல்’ என்று சுட்டுகிறார் கவிஞர். இயேசுவின் பிறப்பின் சிறப்பினை வெளிப்படுத்துவதற்குக் கவிஞர் எடுத்துக் காட்டும் படிமங்கள் மிகவும் சிறப்பாக உள்ளன.
• இயேசுவின் இரக்கம்
ஹைகூ வடிவில் கவிஞர் பிரியகுமாரன் எழுதியுள்ள கவிதை நம் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது. இயேசுவின் கைகளில் ஆணி அடிக்கப்படுகிறது. அடிக்கிறவன் ஆவேசமாக அடிக்கிறான். அப்பொழுது ஆணி அடிப்பவனைப் பார்த்து இயேசு கூறுவதாக அமைந்த கவிதை இது.
ஆணி அறைபவனே
அடி மெதுவாக
உன் விரல் மீது
சுத்தியல் விழுந்து விடப் போகிறது!(இவனைச் சிலுவையில் அறையுங்கள் : பக்.38)
சித்திரவதைக்குள் அகப்பட்டுள்ள இயேசுவின் கால்களிலும் கூர்மையான ஆணிகள் வேகமாக அடிக்கப்படுகின்றன. அதனால் அவரது உடல் மிகவும் துன்புறுகிறது. இருப்பினும், அத்துன்பங்களைப் பொறுத்துக்கொண்ட இயேசு, பிறருக்கு வரும் துன்பத்திற்கும் இரங்கக் கூடியவர் என்பதனை, ‘அடி மெதுவாக; சுத்தியல் உன் விரல் மீது விழுந்து விடப் போகிறது; விழுந்தால் துன்பம் தரும். எனவே மெதுவாக அறை’ என்று கூறுவதாக, பாடுகின்றார் கவிஞர்.
தன்னைத் துன்புறுத்துகிறவர்கள் மீதும் இரக்கம் காட்டுபவர் இயேசு என்பது இக்கவிதையில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
சிலுவை அன்பின் அடையாளம்; தியாகத்தின் குறியீடு; சகிப்பின் உச்சக் கட்டம், மரணப்பாடுகளின் படுக்கை; மானுட மீட்பின் தொடக்கம் என, புதுக்கவிதைகளில் சிலுவையின் மேன்மை பலவாறாகச் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளது.
‘சிலுவை - அது, தன்னை அறுத்தவனுக்கே பால் சுரக்கும் அற்புத மரம்; அதற்கு நாம் உரமாக வேண்டும்’ என்கிறார் கவிஞர் மோகனப் பிரியன், மேலும் அவர்,
சிலுவை தன் மேல்
தங்கம் பூசப்படுவதை
தாங்கிக் கொள்வதில்லை
ஆணிகளால் கோர்க்கப்படுவதையே
விரும்புகிறது(தரு: இளவேனில் 1996:பக்-11)
என்று சிலுவையின் பண்பு குறித்துப் பாடியுள்ளார்.
• சிலுவை சுமக்கும் இயேசு
‘வெள்ளியிலும் தங்கத்திலும் உருவாகுவதில்லை சிலுவைகள்’ எனக் கூறும் கவிஞர் நிர்மலா சுரேஷ், இயேசு சிலுவை சுமக்கும் காட்சியைப் பார்த்துப் பின்வருமாறு வினா எழுப்புகிறார்.
விழுப்புண் பட்ட வீரன்
தன் நடு கல்லைத் தானே
சுமக்கிறானோ?(இயேசு மாகாவியம் : பக் 601)
(விழுப்புண் = போரில் பகைவரை எதிர்கொண்டு மார்பில் பெற்ற புண், நடுகல் = போரில் மாய்ந்த வீரன் நினைவாக நடும் கல்)
தமிழர் பண்பாட்டில், போரில் மார்பிலே புண்பட்டு வீரமரணம் அடையும் வீரர்களுக்கு அவர்கள் இறந்த பின்னர், நடுகல் நடுவது மரபு. அதில், இறந்த வீரனுக்குப் பிறரே நடுகல் நடுவர். இங்கு, இப்பாடலில், பிறரின் பாவங்களைச் சுமக்கிற இயேசு, பிறர் சுமக்க வேண்டிய கல்லைத் தானே சுமப்பதாகக் கவிஞர் எடுத்துரைக்கிறார்.
புதுக்கவிதைகள் சமகால நோக்கு கொண்டவை; சமுதாய அக்கறை கொண்டவை; சமுதாயச் சீர்கேடுகளை இடித்துரைக்கத் தயங்காதவை.
• ஐந்து அப்பமும் ஐயாயிரம் பேரும்
கிறித்தவக் கவிஞர்களும் கிறித்தவத் திருச்சபைகளில் காணப்படுகின்ற சீர்கேடுகளையும் கடிந்துரைக்கத் தவறவில்லை.
ஐந்து அப்பங்களை
ஐயாயிரம் பேருக்கு
பகிர்ந்தளித்த வள்ளலே
இங்கே!
ஐயாயிரம் பேரின் அப்பங்களை
ஐந்து பேர்
அபகரிப்பது உன்
கண்களுக்குத் தெரிகிறதா?எனக் கவிஞர் பிரிய குமாரன் எழுப்பும் கேள்வி சமுதாயச் சுரண்டலை அம்பலப்படுத்துகிறது.