தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

யாப்பிலக்கண அடிப்படை விதிகள்

  • 3.1 யாப்பிலக்கண அடிப்படை விதிகள்

    யாப்பிலக்கண நூல்கள் மரபுக்கவிதை இயற்றும் முறைகளை உறுப்பியல், செய்யுளியல் எனப் பாகுபடுத்தி எடுத்துரைக்கின்றன. அவற்றுள் உறுப்பியல் என்னும் பகுதி, எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியன குறித்து விளக்குவதாகும். இவற்றை அறிந்து கொண்டால் அன்றி, மரபுக்கவிதை எழுதுதல் இயலாது. இத்தகைய யாப்பிலக்கண அடிப்படை விதிகள் குறித்து இனிக் காண்போம்.

    3.1.1 எழுத்து

    குறில், நெடில், ஆய்தம், ஒற்று, அளபெடை, குறுக்கம் என ஆறு வகைகளில் எழுத்துக் குறித்துத் தெரிந்து கொள்ளுதல் போதுமானது.

    குறில் என்பது குறுகி ஒலிக்கும் எழுத்தாகும். இதற்குரிய மாத்திரை (ஒலிக்கும் கால அளவு) 1 ஆகும். அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும் உயிர்க்குறில்களாகும். க, கி, கு, கெ, கொ என்பன முதலாகிய தொண்ணூறும் (5x18=90) உயிர்மெய்க் குறில்களாகும்.

    நெடில் என்பது 2 மாத்திரையுடைய எழுத்தாகும். ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழும் உயிர் நெடில்களாகும். கா, கீ, கூ, கே, கை, கோ, கௌ என்பன முதலாகிய நூற்றிருபத்தாறும் (7x18=126) உயிர் மெய் நெடில்களாகும்.

    ஆய்த எழுத்தும், ‘க்’ முதல் ‘ன்’ வரையிலான பதினெட்டு மெய்யும் ஆகிய பத்தொன்பதும் ‘ஒற்று’ எனப்படும். இவை அரைமாத்திரை உடையனவாகும். சில இடங்களில் ஆய்தம் ஒரு மாத்திரையும் பெறும்.

    அளபெடை என்பது, ஓரெழுத்து தனக்குரிய மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பதாகும். நெடில் தனக்குரிய மாத்திரையிலிருந்து நீண்டு 3 அல்லது அதற்கு மேற்பட்ட மாத்திரையளவு நீண்டொலிப்பது ‘உயிரளபெடை’ எனப்படும். உயிர் நெடிலாயினும், உயிர்மெய் நெடிலாயினும் அவை நீண்டொலிப்பதற்கு அடையாளமாக அந்தந்த நெடிலுக்கு இனமான உயிர்க்குறில் அடுத்து எழுதப்படும். ஐ, ஒள என்னும் நெடில்களுக்கு முறையே இ, உ என்பன இனமாக அமையும். இவ்வாறே, ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள், ஃ ஆகிய பதினொன்றும் தமக்குரிய மாத்திரையிலிருந்து நீண்டொலிப்பது, ‘ஒற்றளபெடை’ எனப்படும். இவற்றிற்கு அடையாளமாக அதே ஒற்றெழுத்து அருகில் எழுதப் பெறும்.

    குறுக்கம் என்பது, ஓரெழுத்து தனக்குரிய மாத்திரையிலிருந்து குறுகி ஒலிப்பதாகும். உகரம் தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறுகி ஒலிப்பது குற்றியலுகரம் எனப்படும். தனிக்குறில் தவிர்த்து, பிற எழுத்துகளை அடுத்து ஒரு சொல்லின் இறுதியில் வரும் வல்லின மெய்களின் மேல் ஏறிவரும் உகரம் குற்றியலுகரமாகும். குற்றியலுகரச் சொற்களையடுத்து யகர வரிசைச் சொற்கள் வந்து புணரும்போது குற்றியலுகரம், குற்றியலிகரமாக மாறும். அதுவும், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறுகி ஒலிக்கும். ஐகாரம், மொழிமுதலில் நெடிலாகவும், இடையிலும் இறுதியிலும் குறிலாகவும் கருதப்பெறும்.

    3.1.2 அசை

    ஓரெழுத்தோ, இரண்டெழுத்தோ நிற்பது அசை எனப்படும். ஒற்றெழுத்தைக் கணக்கிடுவதில்லை. (ஒற்றெழுத்து = மெய்யெழுத்து). அசையானது நேரசை, நிரையசை என இருவகைப்படும்.

    • நேரசை அமையும் முறை
    1) தனிக்குறில் - க
    2) தனிக்குறில் ஒற்று - கல்
    3) தனிநெடில் - கா
    4) தனிநெடில் ஒற்று - கால்
    • நிரையசை அமையும் முறை
    1) இரு குறில் - படி
    2) இருகுறில் ஒற்று - தமிழ்
    3) குறில் நெடில் - பலா
    4) குறில் நெடில் ஒற்று - புலால்

    அசை பிரிக்கும் பொழுது, ஒன்றிற்கு மேற்பட்ட ஒற்றுகளும் ஓரொற்றாகவே கருதப்படும் (ஈர்க்/கு); நெடில் குறில் சேர்ந்து ஓரசை ஆவதில்லை (ஏ/ணி); அளபெடைகள், குற்றியலிகரம், ஆய்தம் என்பன சூழலுக்கேற்ப அலகுபெறுவதும் உண்டு; அலகு பெறாதிருப்பதும் உண்டு. (அலகு பெறுதலாவது, அசைபிரிக்கத் தகுதி வாய்ந்த எழுத்தாகக் கருதப் பெறுவதாகும்).

    வெண்பாவின் இறுதியில் இடம்பெறும் நேரசை, நிரையசை ஆகியவை குற்றியலுகரம் பெறுவது உண்டு. அக் குற்றியலுகரங்கள் தனியசையாகக் கருதப்படுவதில்லை; நேர்பு, நிரைபு என இவை முறையே பெயர் பெறும். எ.டு :நாடு - நேர்பு; உலகு - நிரைபு

    3.1.3 சீர்

    அசைகளால் அமைவது சீர். ஒரு சொல்லோ, ஒரு சொல்லின் பகுதியோ, இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சொற்களோ ஒரு சீராக அமையும். ஒரு சீர் பொருள் நிறைவுடையதாய் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

    சீர் நான்கு வகைப்படும். அவை பின்வருமாறு:

    • ஓரசைச்சீர் - வாய்பாடு - (2)
    நேரசை - நாள்
    நிரையசை - மலர்

    (வெண்பாவில் மட்டுமே ஓரசைச்சீர் (இறுதிச் சீராக) வரும். அதற்குரிய வாய்பாடு ‘நாள்’, ‘மலர்’ ஆகும். அவ்வாறே ஈரசைச் சீருக்குக் ‘காசு’, ‘பிறப்பு’ என்பன வாய்பாடு ஆகும்).

    • ஈரசைச்சீர் - வாய்பாடு - (4) (இயற்சீர்)
    நேர் நேர் - தேமா
    நிரை நேர் - புளிமா
    இவற்றை மாச்சீர் (2)
    என்று குறிப்பிடுவர்
    நேர் நிரை - கூவிளம்
    நிரை நிரை - கருவிளம்
    இவற்றை விளச்சீர் (2)
    என்பர்.

    இவ்வாறே இறுதிச் சொல்லை வைத்து, காய்ச்சீர், கனிச்சீர் முதலியனவும் வரும்.

    • மூவசைச்சீர் - வாய்பாடு - (8)
    நேர் நேர் நேர் - தேமாங்காய்
    நிரை நேர் நேர் - புளிமாங்காய்
    நேர் நிரை நேர் - கூவிளங்காய்
    நிரை நிரை நேர் - கருவிளங்காய்
    காய்ச்சீர் (4)
    (வெண்சீர்)
    நேர் நேர் நிரை - தேமாங்கனி
    நிரை நேர் நிரை - புளிமாங்கனி
    நேர் நிரை நிரை - கூவிளங்கனி
    நிரை நிரை நிரை - கருவிளங்கனி
    கனிச்சீர் (4)
    (வஞ்சிஉரிச்சீர்)
    • நாலசைச்சீர் (16)

    மூவசைச்சீருடன் நேரசையைச் சேர்க்கப் பூச்சீர் என எட்டும், நிரையைச் சேர்க்க நிழற்சீர் என எட்டும் அமையும்.

    தேமாந்தண்பூ, தேமாந்தண்ணிழல் போன்றவை.

    3.1.4 தளை

    நின்ற சீரின் இறுதி அசையும், வரும் சீரின் முதல் அசையும் தம்முள் பொருந்துவது ‘தளை’ எனப்படும். தளை ஏழு வகைப்படும். அவை:

    · நேர் ஒன்று ஆசிரியத் தளை
    - மாமுன் நேர்
    (நின்/ சொல்/லர்)
    · நிரைஒன்று ஆசிரியத்தளை
    - விளமுன் நிரை
    (செம்/மொழி தமிழ்/ மொழி)
    · இயற்சீர் வெண்டளை
    - மாமுன் நிரை
    (கற்/ கச/டற)
    - விளமுன் நேர்
    (கற்/பவை கற்/றபின்)
    - வெண்சீர் வெண்டளை
    - காய்முன் நேர்
    (செல்/வத்/துளசெல்/வம்)
    · கலித்தளை
    - காய்முன் நிரை
    (பல்/லுல/குமபல/வுயி/ரும்)
    · ஒன்றிய வஞ்சித்தளை
    - கனி முன் நிரை
    (வினைத்/திண்/பகை
    விழச்/செற்/றவன்)
    · ஒன்றாத வஞ்சித்தளை
    - கனி முன் நேர்
    (நல/மலிந்/திடு நன்/னா/ளிது)

    3.1.5 அடி

    சீர்களால் அமைவது அடி. இது ஐவகைப்படும். அவை:

    · குறளடி
    - 2 சீர்களை உடையது.
    · சிந்தடி
    - 3 சீர்களை உடையது.
    · அளவடி (அ) நேரடி
    - 4 சீர்களை உடையது.
    · நெடிலடி
    - 5 சீர்களை உடையது.
    · கழிநெடிலடி
    - 6 (அ) அதற்குமேற்பட்ட சீர்களை உடையது.
    சீர்களுக்கேற்ப அறுசீர்க்கழிநெடிலடி,
    எழுசீர்க்கழிநெடிலடி என்றவாறு பெயர் பெறும்.

    3.1.6 தொடை

    அடிகளிலும் சீர்களிலும் எழுத்து முதலியன பொருந்துமாறு தொடுக்கப்படுவது ‘தொடை’ எனப்படும்.

    • தொடை வகை

    தொடை எட்டு வகைப்படும். அவை :

    · மோனை
    -  முதலெழுத்து ஒன்றி வருவது.
    · எதுகை
    - முதலெழுத்தை அடுத்து வரும் இரண்டாம் எழுத்துப் பொருந்தி வருதல்.
    · முரண்
    - சொல்லாலோ பொருளாலோ தம்முள் மாறுபடச் சொற்களைத் தொடுத்தல்.
    · இயைபு
    - சீர்களின் இறுதி ஓசை ஒன்றி வருதல்.
    · அளபெடை
    - அளபெடைச் சொற்கள் சீர்களில் அமையப் பெறுதல்.
    · அந்தாதி
    - எழுத்து, அசை, சீர் முதலான ஒன்றன் இறுதி எழுத்து, அடுத்ததன் முதலாக அமைதல்.
    · இரட்டை
    - அடி முழுவதும் வந்த சொல்லே வருவது.
    · செந்தொடை
    - மோனை முதலான தொடைகள் ஏதுமில்லாமல் பொருளால் சிறந்திருத்தல்.

    இவற்றுள் மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை ஆகிய ஐந்தும் அடிதோறுமாக இடம் பெறுதல் ‘முதல் தொடை’ எனப்படும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 30-09-2017 12:57:25(இந்திய நேரம்)