தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

இக்கால இலக்கியம்

  • 6.4 இக்கால இலக்கியம்

    பாரதியாரும் அவருக்கு அடுத்து வந்தவர்களும் தொடங்கி இக்கால இலக்கியத்தின் எல்லையை அமைத்தல் பொருந்தும்.

    செய்யுள் இலக்கியமேயன்றி உரைநடை இலக்கியமும் இவ்விலக்கிய வகையில்தான் வளர்ச்சிபெறலாயிற்று.

    மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஐக்கூக் கவிதை எனப் பல வகைகளில் கவிதை சிறக்கும் காலகட்டம் இது.

    இவ்விலக்கியத்தின் உருவம், உள்ளடக்கம், உத்திமுறை குறித்துப் படிப்பது, இனிப் படைப்பதற்கும் உதவியாகும் என்பதை நினைவிற் கொள்வோம்.

    6.4.1 உருவம்

    நொண்டிச் சிந்து, விருத்தம், புதுக்கவிதை, ஐக்கூ என்பனவாக இவற்றைக் காண்கிறோம்.

    • நொண்டிச் சிந்து

    பாரதியார், பாரதிதாசன் போன்றோர் பாடல்களில் தனிச்சொல் பெற்றும், பெறாமலும் அமையும் நொண்டிச் சிந்துப் பாக்கள் எளிய சொல்லாட்சி கொண்டு இடம்பெறுவதைக் காணமுடிகின்றது.

    சான்று :

    நல்லதோர் வீணை செய்தே - அதை
    நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
    சொல்லடி சிவசக்தி - எனைச்
    சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
    வல்லமை தாராயோ - இந்த
    மாநிலம் பயனுற வாழ்வதற்கே !
    சொல்லடி சிவசக்தி - நிலச்
    சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? 
                                      (பாரதியார் கவிதைகள்)

    • விருத்தம்

    பாரதியார் கவிதைகளில் காணும் அறுசீர் விருத்தம் ஒன்று :

    இதம்தரு மனையின் நீங்கி
         இடர்மிகு சிறைப்பட் டாலும்
    பதம்திரு இரண்டும் மாறிப்
         பழிமிகுத்து இழிவுற் றாலும்
    விதம்தரு கோடி இன்னல்
         விளைந்தெனை அழித்திட் டாலும்
    சுதந்தர தேவி நின்னைத்
         தொழுதிடல் மறக்கி லேனே

    (இதம் = மகிழ்ச்சி; பதம் = பதவி; திரு = செல்வம்; விதம் = வகை)

    • புதுக்கவிதை

    சீர், அடி, தளை போன்றவற்றின் வரையறைகள் அற்றது. அதற்காக ஒடித்தெழுதும் உரைநடையெல்லாம் புதுக்கவிதையாகி விடுவதில்லை. கவிதை வீச்சு இருப்பதே புதுக்கவிதை எனப்படும்.

    வரையறை இல்லாதது ஆதலின், இன்ன நடையுடையது என இதனை வகுத்துரைத்தல் அரிது. எழுதுவோரும் பல தரப்பட்டவர்களாதலின் அவரவர்க்கும் தனித்தனிப் போக்கெனப் புதுக்கவிதை அமைகின்றது.

    வைரமுத்து, மு.மேத்தா, அப்துல் ரகுமான். ஈரோடு தமிழன்பன், அறிவுமதி, பழமலய், வாலி, சிற்பி, மீரா, நா.காமராசன் போன்றோர் கவிதைகள் புதுக்கவிதை படிப்போர்க்கும் படைப்போர்க்கும் மகிழ்வூட்டித் துணைபுரிவனவாகும்.

    மீராவின் கவிதையொன்று வருமாறு :

    பாதை முள்
    படுக்கை முள்
    இருக்கை முள்
    வாழ்க்கை முள்
    ஆன மனிதர்களைப் பார்த்துச்
    சிலிர்த்துக் கொண்டது
    முள்ளம்பன்றி. . .
    ஓ இவர்களுக்குத் தெரியாதா
    முள்ளும் ஓர்
    ஆயுதம் என்று !

    சிற்பியின் கவிதை, நாட்டுப்புறப்பாங்கில் அமைந்துள்ளமையையும் காண முடிகின்றது.

    ஏழைப்பெண் - தலையில்
    எப்போதும் பூப்பாரம்
    இவளோ தகப்பனுக்கு
    எப்போதும் மனப்பாரம்

    நா.காமராசனின் ‘ஒப்பாரிச் சாயல்’ கவிதை ஒன்று.

    எழுத்துச் சுமைக்காரர்
    எங்க ஊரு தபால்காரர்
    எழுத்து மங்கும் சாயங்காலம்
    எமனோடு போனதென்ன?

    சொல்நயம் பொருந்த எழுதப் பெறுவதும் உண்டு. அதற்கொரு சான்று :

    அன்று
    நஞ்சை உண்டு
    சாகுபடி ஆனது !
    இன்று
    நஞ்சை உண்டு
    சாகும்படி ஆனது !                                                (நெல்லை ஜெயந்தா)

    என்பது தஞ்சை மக்களின் வாழ்நிலை தாழ்நிலையானதைச் சுட்டுகின்றது.

    • ஐக்கூ

    மூன்று வரிகளில் நறுக்குத் தெறித்தாற்போல் அமையும் இயல்புடையது.

    தீப்பெட்டியைத்
    திறந்து பார்த்தால்
    பிஞ்சு விரல்கள்                          (ஸ்ரீகுமாரன்)

    எனக் குழந்தைத் தொழிலாளர் நிலையுரைக்கின்றது.

    ஆராய்ச்சி மணி அடித்த மாடுகள்
    அரண்மனைத் தட்டில்
    பிரியாணி                                   (லிங்கு)

    என நீதிநிலையை விமரிசிக்கின்றது ஒரு கவிதை.

    அணிலே ! நகங்களை வெட்டு
    பூவின் முகங்களில்
    காயங்கள் -                                  (மித்ரா)

    6.4.2 உள்ளடக்கம்

    இக்காலக் கவிதைகளில் வாழ்க்கை பேசப்படுகிறது. அன்றாடச் சிக்கல்கள் பாடுபொருளாகின்றன. அகமும் புறமும் மட்டும் பாடுவதென்றோ, கற்பனைகளில் மிதப்பதென்றோ அமையாமல் அவரவரும் தத்தம் சிக்கல்களையும் தாம் தீர்வுகாண விழைவனவற்றையும் எடுத்துரைப்பதாக அமையக் காண்கிறோம். காரணம், உழைப்பாளியும் படைப்பாளியும் ஒருவராக இருப்பது எனலாம்.

    • பெண்கள் நலம்

    சங்க காலம் தொடங்கி அங்கொருவர் இங்கொருவர் என்பதன்றிப் பெண்கள் கல்வியில் மேம்பட்டிருந்ததான நிலை இல்லை. இடைக்காலத்தில் பெண்களுக்குக் கல்வி மறுக்கப் பட்டிருக்கிறது. அவர்கள் உடைமைகளாகக் கருதப்பட்டனர்; அடிமைகளாக நடத்தப்பட்டனர். அவர்களை அந்நிலையிலிருந்து மீட்கப் பெண்ணியம் என ஒன்று எழுந்தது. வரதட்சணையும், பெண் சிசுக்கொலையும் நீங்க வேண்டும், பெண்கல்வி ஓங்க வேண்டும் என்பது இதன் நோக்கமாகின்றது.

    வேலப்பனுக்குப்
    பெண் பிறந்ததாகத்
    தகவல் வந்தது
    ஊர்க்கவுண்டர் கேட்டார்
    இழவு இன்றைக்கா?
    நாளைக்கா?                                                             (கவிஞர் பால்ராஜ்)

    என்பது பெண்சிசுக் கொலைக் கொடுமையைப் பறை சாற்றுகின்றது.

    கல்வியில் விடி
    அரசியல் தெளி
    சட்டங்கள் செய்
    ஊர்வலம் போ
    முழக்கமிடு
    பெண்ணைப் பேசப்
    பெண்ணே எழு                          (அறிவுமதி)

    என்கிறார் கவிஞர் அறிவுமதி.

    • மொழிப்பற்று

    பல்வேறு புறச்சூழல்களால் காலந்தோறும் தமிழ் மொழியோடு வடமொழி (சமஸ்கிருதம்), பாலி, பிராகிருதம், உருது, இந்தி, ஆங்கிலம் எனப் பல மொழிகள் கலக்கும் நிலை நிகழ்ந்து வருகின்றது. இக்காலத்தில் ஆங்கிலத்தின் செல்வாக்கில் மூழ்கித் தாய்த்தமிழ் மொழியையே மறக்கும் நிலை நிலவுகின்றது. மொழிப்பற்றை ஊட்ட வேண்டிய நிலை அவசியமாகின்றது.

    பாரதிதாசனார் தமிழின் மேன்மையை இனிதே உணர்த்தி மொழிப்பற்று ஊட்டுகின்றார்.

    செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்
         தேக்கிய கறியின் வகையும்
    தன்னிகர் தானியம் முதிரை - கட்டித்
         தயிரொடு மிளகின் சாறும்
    நன்மது ரம்செய் கிழங்கு - காணில்
         நாவில் இனித்திடும் அப்பம்
    உன்னை வளர்ப்பன தமிழா - உயிரை
         உணர்வை வளர்ப்பது தமிழே !

    • நாட்டுப்பற்று

    பாரத நாட்டை உணர்வு பூர்வமாகப் போற்றுகின்றார் பாரதியார்.

    மன்னும் இமயமலை எங்கள் மலையே !
         மாநிலம் மீதுஅது போற்பிறி திலையே !
    இன்நறும் நீர்க்கங்கை யாறெங்கள் யாறே !
         இங்கிதன் மாண்பிற்கு எதிர்எது வேறே !
    பன்னரும் உபநிட நூலெங்கள் நூலே !
         பார்மிசை ஏதொரு நூலிது போலே !
    பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே !
         போற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே !

    • தொழிலாளர் நலம்

    தொழிலாளர்கள் பெரிதும் உழைத்தும் வறுமையிலேயே வாடுகின்றனர்.

    கஞ்சி குடிப்பதற்கு
    வசதியில்லை
    காரணங்கள் என்னவென்று
    தெரியவில்லை. . .
    உழைப்புதான் இவர்களின்
    உயிர்மூச்சு
    உற்பத்திப்பயன் முதலாளியின்
    உடைமை ஆச்சு . . . .                             (கவிஞர் தமிழ்ப்பித்தன்)

    என்னும் கவிதை தொழிலாளர் நிலையை எடுத்துரைக்கின்றது. சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்கும் தலித்தியம் என்னும் ஒரு கவிதையியக்கம் பரவி வளர்கின்றது.

    • மத நல்லிணக்கம்

    சமயங்கள் பலவும் நிலைபெற்றுள்ள நாடாக இந்தியா விளங்குதலின், இடையிடையே சமயப் போராட்டங்கள் நிலவுகின்றன. அவற்றிடை நல்லிணக்கம் காண வேண்டியது இன்றியமையாததாகும்.

    இறைவா !
    நீ
    எங்கே இருக்கிறாய்?
    இந்துவின் கோயிலிலா?
    முஸ்லீமின் மசூதியிலா?
    என்றேன்.
    இறைவன் சொன்னான்
    இந்த இருவரும்
    ஒருவரை ஒருவர் பார்த்துப்
    புன்னகைத்துக் கொள்ளும்
    புன்னகையில் நான் இருக்கிறேன்
    என்று !                                                                                  (பா.விஜய்)

    என்னும் கவிதை வேறுபட்டு மாறுபடும் மத உணர்வை மறுக்கக் காண்கிறோம்.

    • மனித நேயம்

    சுயநலம் மிகுந்து மனித நேயம் குறைந்து வருவதாய் இன்றைய மானுட வாழ்க்கையின் நிலை உள்ளது. இது மாறவேண்டும். யாவரிடத்தும் கைம்மாறு கருதாத அன்புணர்வு கொள்ள வேண்டும்.

    ஆயுதம் அழிந்து
    மானுடம் மிஞ்சுமா?
    இல்லை
    மானுடம் அழிந்து
    ஆயுதம் மிஞ்சுமா?                                           (வைரமுத்து)

    என்னும் வினா இன்றைய அறிவியல் யுகத்தில் முன்னிற்பதைக் காட்டுகின்றார் கவிஞர்.

    நட்பு, காதல், அரசியல், மூடநம்பிக்கை, எதிர்ப்பு, பகுத்தறிவு, அறிவியல் செய்திகள், சுற்றுச்சூழல் எனப் பல்வேறு உள்ளடக்கங்களைக் கொண்டதாக இக்கால இலக்கியங்கள் திகழ்கின்றன.

    6.4.3 உத்திமுறை

    இக்கால இலக்கியங்களில் உவமை, படிமம், குறியீடு போன்ற உத்திமுறைகள் இடம்பெறுகின்றன.

    • உவமை

    சாதிப் பிரச்சனை பெரிதென உவமையுடன் உணர்த்துகின்றது ஓர் கவிதை :

    சாதி என்பது
    மெலிந்து காட்சிதரும்
    ஊசியல்ல
    தலையெல்லாம்
    கனத்துக் கொழுத்த
    கத்தரிக்கோல்

    • படிமம்

    ஒரு பொருளின் உணர்வுத் தூண்டுதலை ஏற்படுத்தும் வெளியீடு படிமம் எனலாம்.

    சான்று : நடைபாதை குறித்த காமராசன் கவிதை.

    மழைக்கால நரகம்
    மாலைநேரச் சொர்க்கம்
    ஏழைகள் உறங்கிட இயற்கையால்
    ஏற்படுத்தப்பட்ட புழுதிக் கட்டில்

    • குறியீடு

    மற்ற பொருளைக் குறிப்பதுடன் தன்னையும் அதனுடன் இணைத்து நிற்பது குறியீடு ஆகும்.

    இயற்கைப்பொருளைக் குறியீடாக்குகின்றார் ஈரோடு தமிழன்பன். அது வருமாறு :

    விதைக்குள் தவமிருக்கும் - உயிர்
    விளக்கே . . . தரையுள்ளே
    புதைத்துன்னை மூடிவிட்டார் - இனிப்
    புதுவாழ்வைச் சாதிப்பாய் !

புதுப்பிக்கபட்ட நாள் : 03-10-2017 16:24:00(இந்திய நேரம்)