தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இதழியலில் மொழிநடை

  • 6.1 இதழியலில் மொழிநடை

    இதழ்களின் நடை எளிமையாக இருக்க வேண்டும் என்பதில் திரு.வி.க. மிகவும் கவனமாக இருந்தார். தமிழ் ஆசிரியராக இருந்த அவர் தேசபக்தன் பத்திரிகைக்காக ஒரு தனி நடையை மேற்கொண்டார். எளிமையில் கருத்துகள் விளங்கும் என்று கருதி அம்முறையைப் பின்பற்றினார். எழுத்தாளர் கல்கியின் வெற்றியில் அவரது எளிய மொழி நடைக்கு முக்கியமான பங்குண்டு என்றால் அது மிகையன்று.

    தினத்தந்தி செய்தித்தாளின் நிறுவனரான சி.பா. ஆதித்தனார் “பேச்சு வழக்கில் உள்ள தமிழைக் கொச்சை நீக்கி எழுத வேண்டும்” என்ற கொள்கையைக் கடைப்பிடித்தார். அதனாலேயே அப்பத்திரிகை கைவண்டி இழுப்பவருக்கும் புரியக் கூடியதாக அமைந்தது.

    ஜான் ஹோஹன் பெர்க் என்பவர், “எளிமையைப் போன்றே தெளிவாக எழுதுவதும் இன்றிமையாதது. செய்தி எழுதுவது என்பது தெளிவாக எழுதுவது (News writing isclear writing)” என்கிறார். இவ்வாறு எளிமையாகவும், தெளிவாகவும், சுருக்கமாகவும் செய்திகளைக் கூறுவதன் மூலமே இதழ்களின் இடச்சிக்கல், வாசகரின் படிக்கும் நேரச்சிக்கல் ஆகியவற்றிற்குச் செய்தியாளர்களும், செம்மையாக்கம் செய்வோரும் தீர்வு காண்கிறார்கள்.

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 15:39:50(இந்திய நேரம்)