Primary tabs
4.1 தமிழ் இதழ்கள்
பொதுவாக இதழ்களை,
1) செய்தித்தாள்கள் (News Papers)
2) பருவ இதழ்கள் (Journals)
என்று இரண்டு வகைப்படுத்தலாம். செய்தித்தாள்கள் காலை அல்லது மாலையில் வெளியிடப்படுகின்றன. தற்போது புதுதில்லி, மும்பை, கொல்கத்தா போன்ற பெரிய நகரங்களில் முற்பகல் 11.00 மணிக்கும்கூட காலை இதழ் ஒன்றைச் சில நிறுவனங்கள் வெளியிடுகின்றன.
வார இதழ்கள், வாரம் இருமுறை இதழ்கள், பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வெளிவரும் இதழ்கள், மாத இதழ்கள், காலாண்டு இதழ்கள், அரையாண்டு இதழ்கள், வருட இதழ்கள் என்று பருவ இதழ்களைப் பிரிக்கலாம்.
4.1.1 எண்ணிக்கையும் இதழ்களும்
சில இதழ்களைக் கொள்கை அடிப்படையிலும், இலக்கியங்கள் அடிப்படையிலும் பிரிக்கலாம். ஓர் இதழின் விற்பனையாகும் எண்ணிக்கையின் அடிப்படையிலும் வகைப்படுத்தலாம். எண்ணிக்கை அடிப்படையில்
1) பெரிய இதழ்கள்
2) நடுத்தர இதழ்கள்
3) சிறிய இதழ்கள்
என்று வகைப்படுத்தலாம். குமுதம், ராணி, ஆனந்த விகடன், குங்குமம் முதலிய இதழ்கள் பல இலட்சம் படிகள் விற்பனையாகின்றன. அதனால் இவை பெரிய இதழ்கள் எனப்படுகின்றன. கலைமகள், கணையாழி, அமுதசுரபி போன்றவை நடுத்தர இதழ்களாகும். இவை ஒவ்வொன்றும் ஒரு இலட்சம் படிகளுக்குக் குறைவாகவே விற்பனையாகின்றன. அதற்கும் குறைவாகச் சில ஆயிரம் படிகளே விற்பனையாகும் செந்தமிழ், செந்தமிழ்ச்செல்வி, காலச்சுவடு, மதுரை மணி போன்றவை சிற்றிதழ்கள் எனப்படுகின்றன.
4.1.2 ஆசிரியர்களும் இதழ்களும்
இதழ் ஆசிரியர்களின் பெயர்களுக்காகவும் சில இதழ்களின் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்கின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக, தியாராஜ செட்டியார் (தமிழ்நாடு இதழ்), கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி (கல்கி), திரு.வி.க. (நவசக்தி, தேசபக்தன்) ஆகியோரைச் சொல்லலாம். மொழி நடைக்காகவும் முற்கால இதழ்கள் வாசகர்களால் வாங்கி வாசிக்கப்பட்டன.
இன்றைய நிலை முற்கால நிலையிலிருந்து மாறுபட்டதாக அமைந்துள்ளது. ஆசிரியர்களின் பெயர்களைப் பற்றியோ, ஒரு பத்திரிகையின் ஆசிரியர் யார் என்பது பற்றியோ இன்றைய வாசகர்கள் கண்டுகொள்வதில்லை.
4.1.3 கொள்கையும் இதழ்களும்
பொதுவான இதழ்களைத் தவிர, தமது கட்சியின் செய்திகளையே தரும் கட்சி இதழ்கள், அரசின் கொள்கைகளை விளக்கும் அரசு இதழ்கள், நாட்டில் நடக்கும் ஆராய்ச்சிகளை வெளியிடும் ஆராய்ச்சி இதழ்கள், சாதி சமய இதழ்கள் போன்றவையும் இன்று வெளியிடப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் செய்திகளை வெளியிட்டுத் தங்களுக்கென்று ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டுள்ளன.