தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இன்றைய நிலை

  • 4.2 இன்றைய இதழ்களின் நிலை

    இன்றைய இதழ்களின் அமைப்பு முறை (Lay-out), பக்க அமைப்பு (Page Make-up), வண்ணமயமான அச்சுக்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. மேலை நாடுகளைப் போலவே நம் நாட்டிலும் நக்கீரன், நெற்றிக்கண், ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர் போன்ற புலனாய்வு இதழ்கள் கொலை, கொள்ளை, ஊழல், சதித் திட்டம் முதலியவற்றின் உண்மைகளை வெளிக்கொண்டு வருகின்றன. அனைத்து இதழ்களுமே ஏதாவதொரு வகையில் சமூத்திற்குச் சில செய்திகளையாவது கொடுத்து வருகின்றன. மேற்குறிப்பிட்ட வகையில் சில நிலையில் வளர்ச்சியடைந்தாலும், வணிக நோக்கத்தாலும், கவனக் குறைவாலும் சில குறைகள் காணப்படுகின்றன.

    4.2.1 பாலுணர்வு

    இக்காலத்தில் வெளிவருகின்ற இதழ்கள் எல்லாம் விற்பனையைப் பெருக்கி, வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்ற வணிக நோக்கில்தான் செயல்பட்டு வருகின்றன.

    எனவே, சில இதழ்கள் பாலுணர்வைத் தூண்டக் கூடிய செய்திகள், கதைகள், படங்களை நேரடியாகவோ இலைமறைகாயாகவோ வெளியிட்டுச் சமுதாயத்திற்குத் தீங்கு விளைவிக்கின்றன. வார, மாத இதழ்களின் அட்டைகளில் நடிகைகளின் கவர்ச்சிப் படங்களைப் போட்டு இளைஞர்களின் உள்ளங்களைப் பாழ்படுத்துகின்றனர். எப்படியும் புகழ்பெற்றாக வேண்டும் என்ற உணர்வோடு நடிகைகள் பல்வேறு கோணங்களில் படங்களையும் பேட்டிகளையும் தருகின்றனர். குடும்ப இதழ் என்று தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளும் இதழ் கூட அட்டையில் ஆபாசப் படங்களையே வெளியிடுகின்றது.

    ஒருசில இதழ்கள் வாசகர்களின் உள்ளங்களைப் பாழ்படுத்தும் கதைகளை வெளியிட்டுச் சமூகத்திற்குத் தீங்கு விளைவிக்கின்றன. அறிவியல் தொழில் நுட்பங்கள் கிடைத்தாலும்கூட அவற்றை முழுமையாகப் பயன்படுத்தச் சில இதழ்கள் தவறிவிட்டன. அதனாலும் ஓரளவு சமூக வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதழ்கள் தங்களுக்குரிய சமூகக் கடமைகளையும், பொறுப்புகளையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

    4.2.2 ஒற்றுப் பிழைகள்

    இன்றைய இதழ்களில் ஒற்றுப் பிழைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. தமிழில் சொற்கள் ஒன்றை அடுத்து மற்றொன்று வரும்போது க் ச் த் ப் என்னும் வல்லின ஒற்றுக்களை இலக்கணப்படி, இயல்பாய் வரவேண்டிய இடங்களில் இடாமல் அச்சிடுவதே ஒற்றுப்பிழை என்பதாகும். உதாரணமாக, தமிழ் செல்வன் என்பது ஒற்றுப் பிழையான தொடராகும். தமிழ்ச் செல்வன் என்பதே பிழையற்ற நிலை, இத்தகைய மொழிநிலையை அறியாமல் தமிழ் இதழ்கள் ஒற்றுப் பிழைகள் நிறைந்து வெளிவருவது வருத்தத்திற்குரியது.

    “தருமபுரி-திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் மதிகோன்பாளையம் என்ற ஊர் அருகே கி.பி. 8 - 9 ஆம் நூற்றாண்டில் நடந்த போர் நிகழ்ச்சியை (x) குறிப்பிடும் வீர நடுகல் சிற்பம் ஒன்றை (x) தர்மபுரி தொல்பொருள் அருங்காட்சியகம் சேகரித்துள்ளது.”

    மேற்கண்ட செய்தியில் (x) என்று குறிப்பிட்ட இடங்களில் முறையே க், த் என்ற ஒற்றுக்கள் விடுபட்டுள்ளன. இத்தகைய ஒற்றுப் பிழைகள் வரக் கூடாது.

    அதே போல் இரண்டாம் வரியில் 8-9ஆம் நூற்றாண்டிற்கிடையில் என்றிருக்க வேண்டும், இரண்டு நூற்றாண்டிற்கு இடையில் நடந்த நிகழ்வைக் குறிப்பிடும் முறை இதுவே.

    தமிழ் இதழ்களில் ஒற்றுக்களைத் தவிர்ப்பதால் இடம் மிச்சமாகும் என்று கூறுகின்றனர். ஆனால், ஆங்கில வார்த்தைகளில் ஓர் எழுத்தை மட்டும் விட்டுவிட்டுச் செய்திகளை வெளியிடுவார்களா? வெளியிட மாட்டார்கள். செய்திகளை எழுதுவோர் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும், செய்தியில் கூறப்படும் தகவல்கள் சரியாகவும் துல்லியமாகவும் இருக்க வேண்டும். அதைப் போலவே மொழிப் பயன்பாட்டிலும் பிழை நேராதவாறு கருத்துச் செலுத்த வேண்டும். ஏனெனில், இக்காலத்தில் மக்கள் மொழியைக் கற்றலில் இதழ்களையே வழிகாட்டிகளாக எண்ணிவருகின்றனர். இதனால் மொழித் தூய்மை காப்பது இதழாளர்களின் முக்கியப் பொறுப்பாகும்.

    4.2.3 கட்டுப்பாடும் நெறிமுறைகளும்

    இன்றைய இதழ்கள் மக்களிடையே பொதுக் கருத்தை உருவாக்குவதிலும் ஆட்சியின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டித் திருத்துவதிலும் நிறைகளைப் பாராட்டுவதிலும் அதிக அளவில் கவனம் செலுத்துகின்றன. அதிக அளவில் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காகப் பொறுப்பற்ற முறையில் செய்திகளை இதழ்கள் வெளியிடக்கூடாது. யாருக்கும் அஞ்சிக் கொண்டு செய்திகளை வெளியிடக் கூடாது. உண்மையான செய்திகளைத் துணிவாக வெளியிட வேண்டும். தனிமனித நலன்களுக்காகச் சிலருக்குக் கட்டுப்பட்டுச் செய்திகளை வெளியிடக்கூடாது. உண்மையான செய்திகளை ஆதாரத்துடன் வெளியிட வேண்டும். செய்திகளோடு தங்கள் சொந்தக் கருத்தை வெளியிடக் கூடாது. ஆதாரமின்றி யாருடைய புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் செய்திகளை வெளியிடக்கூடாது.

    வாசகர்களுக்குப் பயன்படக் கூடிய, தெரிய வேண்டிய செய்திகள் அனைத்தையும் முழுமையாக வெளியிட வேண்டும். உலக, தேசிய, வட்டாரச் செய்திகளில் வாசகர்களுக்குத் தேவையானதை வெளியிடல் இன்றியமையாதது. படைப்பாற்றலுடன் செய்திகளை வெளியிடல் வாசகர்களுக்கு உதவியாக இருக்கும். எளிய சொற்களைக் கையாண்டு, வாசகர்களுக்குப் புரியக்கூடிய மொழிநடையில் செய்திகள் இருத்தல் அவசியம். எந்தெந்தச் செய்திகளை எல்லாம் வாசகர்கள் விரும்புகிறார்கள் என்பதை ஒரு களஆய்வு மூலம் கண்டறிந்து இதழ்கள் செய்திகளை வெளியிடலாம். உண்மையான செய்திகளைத் துணிவுடன் வெளியிட வேண்டும். சமூக, பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சி போன்றவற்றைக் காட்டும் காலக் கண்ணாடியாக இதழ்கள் விளங்க வேண்டும்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1

    கணையாழி எவ்வகை இதழ்?

    2

    எந்தெந்த மாநிலங்களில் காலை 11 மணிக்கும் ஒரு காலை இதழ் வெளியிடப்படுகிறது?

    3

    இக்கால இதழ்களின் நோக்கம் என்ன?

    4

    தமிழகத்தில் வெளியிடப்பட்டு வரும் இரண்டு புலனாய்வு இதழ்களின் பெயர்களைக் கூறுக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 18:13:30(இந்திய நேரம்)