தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கட்டட வகைச் சிற்பங்கள்

2.4 கட்டட வகைச் சிற்பங்கள் (Architectural Sculptures)

பெரிய பாறையில் ஒரு முழுக் கட்டடமே செதுக்கி
வடிவமைக்கப்படுவது கட்டடச் சிற்பம் ஆகும். இது ஒற்றைக்
கற்கோயில் எனவும் அழைக்கப்படும்.

2.4.1 முதலாம் நரசிம்ம வர்மன் காலம்

மாமல்லன் என அழைக்கப்படும் நரசிம்ம வர்மனால்
மகாபலிபுரத்தில் செதுக்கப்பட்ட ஒற்றைக்கல்     இரதங்கள்
சிற்பக் கலை வரலாற்றில் சிறப்பு மிக்க படைப்புகளாகும். இந்த
இரதங்கள் சிற்பங்களைச் செதுக்குவது போல மேலிருந்து கீழாகத்
தேவையற்ற பகுதிகளை நீக்கி அமைக்கப்பட்டவை. கோயில்
அமைப்புகளே என்றாலும் செதுக்கப்படும் முறையால் இவை
சிற்பங்களாகக் கருதப்படுகின்றன.

இக்கல் இரதங்களில் திரௌபதி இரதத்திலும், தர்மராசா
இரதத்தி்லும் கருவறைகளில் பிரதானக் கடவுளரின் புடைப்புச்
சிற்பங்கள்     செதுக்கப்பட்டுள்ளன. இந்த     இரதங்களின்
வெளிச்சுவர்களில் அழகுறச் செதுக்கப்பட்ட பல சிற்பத்
தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் தேவ கோட்டங்களில்
இறையுருவங்களும்     கோட்டங்களில்     சிற்பங்களும்
செதுக்கப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டுக்கு ஒரு சில இரதங்களைப்
பற்றியும் அவற்றில் இடம் பெற்றுள்ள சிற்பங்களைப் பற்றியும்
காணலாம்.

கோட்டம் : கோயில் விமானத்தில் - கருவறைச் சுவரின்
வெளிப் பக்கத்தில் குடையப்படும் சிறுகோயில் அமைப்பு.

தேவ கோட்டம் : விமானப் பகுதியில் இடம்பெறும் சிறு கோயில் அமைப்பு. இறை உருவங்கள் வைக்கப்படுவதால்
தேவ கோட்டம் எனப்படுகிறது.

  • திரௌபதி இரதம்


  • இந்த இரதத்தின் முன் சுவரில் துவார பாலகிகளின்
    சிற்பங்களும் ஏனைய பக்கங்களில் உள்ள தேவ கோட்டங்களில்
    பிற சிற்பங்களும் இடம் பெறுகின்றன. பின் சுவரில் தாமரை
    மலர்மேல் நிற்கும் துர்க்கை மற்றும் அவள் காலடியில்
    அமர்ந்துள்ள பணியாளர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளமை
    காணத் தக்கதாகும். இதில் ஒரு மனிதன் தனது தலையைத் தானே
    வெட்டி அம்மனுக்குச்     சமர்ப்பிக்க     முயலும் சிற்பம்
    செதுக்கப்பட்டுள்ளது. இது ஒருவகை வழிபாடு ஆகும்.
    இவ்வழிபாடு நவகண்ட விதி எனக் கூறப்படும்.


    திரௌபதி இரதம்


  • அர்ச்சுனன் இரதம்


  • இதன் ஒரு புறத்தில் சிவபெருமான் தனது வாகனமான
    நந்தியின் மீது சாய்ந்தபடி ரிசபாந்திகராகக் (ரிசபத்தின் மீது
    சாய்ந்திருப்பவர்) காட்சியளிக்கிறார். அவருடைய அமைதியான
    சிரிப்பும், தெய்வீகக் களையும் கவர்பவை.
    அர்ச்சுனன் இரதம்

    எதிர்ப்புறத்தில் நடு மாடக் குழியில் நான்கு கரங்களுடன்
    கூடிய கருடாந்திக விஷ்ணு (கருடனுடன் உள்ள திருமால்) இடம்
    பெறுகிறார்.

    அரச குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிகள் சிற்பமும், துவார
    பாலகர் சிற்பமும் குறிப்பிடத் தக்கவை.

  • தர்மராசா இரதம்


  • ஒற்றைக்கல் இரதங்களிலேயே மூன்று தளங்களையுடைய
    தர்மராசா இரதம் மிகச் சிறந்த படைப்பாகும். இதுவே
    பிற் காலத்தில் தோன்றிய அஷ்டாங்க விமானக் கோயில்களுக்கு
    அடிப்படையாகும். இதன் கண் இடம் பெற்றுள்ள புடைப்புச்
    சிற்பங்கள் பல்லவ இறையுருவங்களின் அருங்காட்சியகம் எனலாம்.


    தர்மராசா இரதம்

    கீழ்த் தளத்தின் சுவர்களில் சிவபெருமான் சிற்பங்கள் மூன்று,
    ஹரிஹரன், பிரம்மா, சுப்பிரமணியர், அர்த்த நாரீசுவரர், நரசிம்ம
    வர்மன் ஆகிய சிற்பங்கள் உள்ளன. அர்த்த நாரீசுவரர் சிற்பம்
    கவனத்தைக் கவர்வது. இடத்தோள், பெண் உருவத்திற்கு
    ஏற்றாற் போலக் கீழ்நோக்கிச் சரிந்தும் இடை வளைந்தும், கைகள்
    அழாகத் தொங்கியும் காணப்படுகின்றன.

    நடுத்தளத்தில் கங்காதரர், கருடாந்திக விஷ்ணு, நடராசர்,
    ரிசபாந்திக மூர்த்தி, வீணாதர தட்சிணா மூர்த்தி, கங்காள மூர்த்தி,
    நர்த்தன தட்சிணா மூர்த்தி, காளிய நர்த்தன கிருஷ்ணன் எனப் பல சிற்பங்கள் அமைந்துள்ளன.

    மேல் தளத்தில் சோமாஸ்கந்தர் சிற்பத் தொகுதி இடம்
    பெற்றுள்ளது. சிவனும் உமையும் முருகக் குழந்தையோடு
    அமர்ந்திருப்பதே சோமாஸ்கந்தர் சிற்பமாகும்.

    இவ்வாறாக மாமல்லன் காலத்தைக் சேர்ந்த கற்சிற்பங்களான
    ஒற்றைக்கல் இரதங்கள் ஒரே கல்லில் செதுக்கப்படும் மரபிற்கு
    அடிப்படையாய் அமைந்தன. எனினும் பின்னர்ப் பாண்டியரால்
    தோற்றுவிக்கப்பட்ட தென்னக எல்லோரா என்று அழைக்கப்படும்
    கழுகுமலை வெட்டுவான் கோயில் தவிர இந்த அமைப்பில்
    வேறு கோயில்கள் ஏனோ தோன்றவில்லை.

    1.
    மண்ணீட்டாளர் என்பவர் யார்?
    2.
    நடுகல் என்றால் என்ன?
    3.
    மகேந்திர வர்மனது முதல் குடைவரை எங்கு உள்ளது?
    4.
    மகிடாசுர மர்த்தினி சிற்ப அமைப்பை விளக்குக.
    5.
    கட்டட வகைச் சிற்பங்கள் என்றால் என்ன?

    Tags   :

    புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 05:30:04(இந்திய நேரம்)