Primary tabs
எது
நாட்டுப்புற மருத்துவம்? அதன் வகைகள் எவை? அதன்
சிறப்புகள் எவை? நாட்டுப்புற மருத்துவத்தின் வழி நோய்கள்
எவ்வொறெல்லாம் எளிதில் குணப்படுத்தப் படுகின்றன? இவை
குறித்து இப்பாடத்தின் வழி நீங்கள் தெளிவாக உணர்ந்திருப்பீர்கள்.
மேலும் நாட்டுப்புற மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் இயற்கைப்
பொருட்களை ஆய்விற்கு உட்படுத்திச் சித்தர்கள் உருவாக்கிய சித்த
மருத்துவம் பற்றியும் அதன் சிறப்புத் தன்மைகள்
குறித்தும்
அறிந்திருப்பீர்கள். மந்திர மருத்துவம் நாட்டுப்புற மக்களிடம் ஆழமாக
வேரூன்றியுள்ளதையும் பாடம் தெளிவுபடுத்தி உள்ளது. நாட்டுப்புற
மருத்துவ முறைகளைத் தங்களது வாய்மொழி வழக்காறுகளில் மக்கள்
பதிவு செய்துள்ள விதமும் சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளது.
நாட்டுப்புற மருத்துவ முறைகளை இன்றளவும் செயல்பாட்டில்
வைத்திருக்கும் நாட்டுப்புற மருத்துவர்களின் தொண்டுள்ளமும்
தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.
நாட்டுப்புற
மருத்துவம் உடல், மனம், சமூகம் என்ற மூன்றையும்
குணப்படுத்தும் சக்தியுள்ளதாக விளங்கி வருகிறது. பண்பாட்டின் பிரிக்க
முடியாத கூறாக இன்றளவும் நிலைத்து வருகிறது. நவீன
மருத்துவ முறைகளின் அசுரத் தாக்குதலுக்கு இடையேயும் எதிர்த்து
நின்று சாகாவரம் பெற்றதாய்த் திகழ்ந்து வருகிறது.
எத்தகைய
நோயாக இருப்பினும், உணவைக் கட்டுப்படுத்துவதன்
மூலமும் சில உணவுகளைத் தவிர்ப்பதன் வாயிலாகவும் நோயிலிருந்து
விடுதலை பெறலாம் என்ற
அடிப்படைத் தத்துவத்தை
வெளிப்படுத்துவதாக நாட்டுப்புற மருத்துவம் விளங்கி வருகிறது.
இயற்கை
சார்ந்த வாழ்க்கை முறைக்கும் உணவுப் பழக்கத்திற்கும்
மக்கள் மாற மனங்கொண்டு வருகின்றனர். இதனால் நாட்டுப்புற மருத்துவ
முறைகளும் புத்தொளி பெற்று வருகின்றன.
நோயைத்
தடுப்பது நவீன மருத்துவம். நோயை மறுப்பது நாட்டுப்புற
மருத்துவம். நோயைத் தடுப்பதைக் காட்டிலும் நோயை மறுப்பது ஒருபடி
உயர்ந்ததுதானே?
தமிழ்
மருத்துவம் வளர்ப்போம்! உலக உயிர்களைக் காப்போம்!
சரிதானே?