Primary tabs
பாரதி சக்தியின் பல வடிங்களைப் பாடியவர் என்பதை முன்னரே கண்டோம்.சக்தியை
மட்டுமன்றி, பிள்ளையார், முருகன், வள்ளி, கலைமகள், திருமகள், ஞாயிறு, நிலவு, அக்கினி, ஆகிய தெய்வங்களைப் பாடுவதோடு
தோத்திரப் பாடல்கள் அல்லது தெய்வப்பாடல்களில் கண்ணனையும் பாடுகின்றார். தெய்வப்
பாடல்களிலேயே பாரதியார் கண்ணனைக் கண்ணம்மா ஆக்கியிருக்கிறார். இவற்றைத் தவிரக்
‘கண்ணன் பாட்டு’ என்ற தலைப்பில் இருபத்து மூன்று தலைப்புகளில் கண்ணனைப் பல கோணங்களில்
புனைந்து எழுதியுள்ளார். தோழன், தாய், தந்தை, சேவகன், அரசன், சீடன், சற்குரு,
குழந்தை, விளையாட்டுப்பிள்ளை, காதலன், காதலி, ஆண்டாள், குல தெய்வம் எனப்
பல்வேறு உறவு நிலைகளில் பாரதியார் கண்ணனை இப்பாடல்களில் வைத்து எண்ணுகின்றார்.
மகாபாரதம், பாகவதம் ஆகிய இரு நூல்கள் கண்ணனின் அழகு, இளமை,
அறிவு, ஆண்மை, அரசியல் தந்திரம், ஆட்சித்திறம், எல்லாவற்றுக்கும் மலோன தெய்வப்
பேராற்றல் ஆகியவற்றைப் புனைகின்றன. மகாபாரதத்தின் பகுதியாகிய ‘பகவத் கீதை’யில்
கண்ணனை அத்வைத வேதாந்தத்தின்
சிகரமாகக் காண்கிறோம். தமிழில் தோன்றிய சிலப்பதிகாரம் காட்டும் ’ஆய்ச்சியர்
குரவை’, ஆழ்வார்களின் பாசுரங்கள் ஆகியன கண்ணனைப் போற்றுகின்றன. பகவத் கீதையில்
அருச்சுனன் "மகனுக்குத் தந்தையாகவும், தோழனுக்குத் தோழனாகவும், காதலிக்குக்
காதலனாகவும் அருள் செய்க" என்று கண்ணனை வேண்டுகிறான்.
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்
(கண்ணன் பாட்டு - 4)
விளங்குகிறான் கண்ணன் எனப் பாரதியார் கூறுவது அவர் பகவத் கீதையின் தாக்கத்தைப் பெற்றிருந்தார் எனக்காட்டும். ஆழ்வார்கள் வைணவ சித்தாந்தங்களுடன் பக்தி உணர்ச்சியோடும் கண்ணனை அணுகியிருக்கின்றனர். பாரதி இந்த எல்லைகளைத் தாண்டி மிக உரிமையோடு கண்ணனை அணுகுகின்றார்.
பாரதி கண்ணனைத் திருமாலின் ஓர் அவதாரமாகக் கண்டு, அந்த அவதாரத்தின் செயற்கரிய செயல்கள் புரிந்த வித்தகத்தைப் (திறமையை) போற்றி வழிபடும் தோத்திரப் பாடல்களுக்கு உரிய கருப்பொருளாகக் காணவில்லை. மனிதர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களின் தேவைகளை நிறைவேற்றுகின்றவனாகவும், மனிதர்களுக்கு மிக நெருங்கிய உறவினனாகவும் பாரதி கண்ணனைக் காண்கிறார். அவருடைய இந்த அணுகு முறை குறித்து,
இறைவனைப் பாடுதல் இரண்டு வகை. ஒன்று
உலகியல்
வட்டத்திலிருந்து பாடுதல். பிறிதொன்று
இறை
வட்டத்திலிருந்து பாடுதல்’ என்கிறார்
பி.ஸ்ரீ. பாரதி உலகியல்
வட்டத்திலிருந்து கண்ணன்
பாடல்களைப் பாடுகிறார் என்பது
தெளிவு.
மீராபாய், ஆழ்வார்கள் போல் பாரதி பக்தி மயமாக
மட்டும் வாழ்ந்தவரல்லர். தன் இறைப்பற்றின்
வெளிப்படலாகப் பல பக்திப் பாடல்களைப் பாடுகிறார்.
என்றாலும் அவர் வறுமை, அறியாமை, நோய், பிணி
ஆகிய
சமுதாயத் தீமைகளை நீக்கும் ஆசையும்,
தேசவிடுதலை,
பெண்விடுதலை போன்ற சமுதாயக்
கடமைகளும் நிறைந்தவர்.
அவர் பாடிய கண்ணன்
பாடல்களிலும் இச் சமுதாய
உணர்வுதான் மேலோங்கிச்
சிறக்கிறது"
(கண்ணன் பாட்டு - மா.செண்பகம் பக்.15)
என்று கூறுவது கருதத்தக்கது. கண்ணனை வைணவ சமயவழியாக அணுகும் அணுகுமுறை பாரதியிடம் இல்லை. இதனைப் பக்தி இலக்கியத்தின் ஒரு வளர்ச்சி என்றும், இறைவனைக் கோயிலிலிருந்து வீட்டுக்கே கொண்டு போய்விடும் நோக்கு எனவும் கூறலாம்.
4.3.2 பக்தி இலக்கியத்தில் ஒரு பரிணாமம்
பக்தி இலக்கியத்தில் மூன்றுவகைக் கோட்பாடுகளை இலக்கியங்களின் வழியாக நாம் காணலாம். அவையாவன:
1.
இறைவனைப் போற்றும் மந்திரங்கள், (108, 1008 போன்றவை) போற்றிப் பாடல்கள் வழியாகத் தொழுது போற்றுதல்.
2.
இறைவனை ஆண்டவனாகவும், பிறவிப்பிணி நீக்குபவனாகவும் கருதி வீட்டுலகம் வேண்டும் பாடல்களைப் பாடுதல்.
3.
இறைவனை நாயகனாகவும் தன்னை நாயகியாகவும் வைத்து, பக்தியில்காதற்சுவையைக் குழைத்து என்னை ஏற்றுக் கொள் என வேண்டுதல்.
தமிழ் இலக்கிய வரலாற்றின் இருபது நூற்றாண்டு இலக்கியங்களில்மேற்கூறிய
மூன்று தன்மைகளே காணப்பெறுகின்றன. பாரதி இந்த மூன்றையும் கடந்து, கடவுளை
இன்னும் நெருக்கமான முறையில் நோக்குகின்றார். இந்த உரிமையைப் பாரதியாருக்கு
யார் கொடுத்தது? நாட்டின், சமூகத்தின் கதியற்ற நிலை, பிணி தீர்ப்பதற்குரிய
நெருக்கமான
ஆள் இல்லாத சூழல் ஆகியன பாரதியாருக்கு இந்த நோக்கு நிலையை (உரிமையை) வழங்கியிருக்கிறது.
மேலும் முன்னை இலக்கியங்களில் இந்த உரிமை மனப்பாங்கு ஆங்காங்கு இல்லாமல்
இல்லை. முருகனை கடவுள் ஆயினும் ஆக, மடவை மன்ற வாழிய முருகே’ (முருகனே
வாழ்க! நீ
திண்ணமாக அறியாமை உடையவன்) என்று நற்றிணையில்(34, அடி 11) கூறுவதையும்,
இடைக்காலத்தில் இறைவனைப் பழிப்பதுபோல் புகழும் நெறியில் புலவர்கள் பாடிய
(நிந்தாஸ்துதி) பாடல்களையும் இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். எனினும்
பாரதியே இதனை முழுப் பரிமாணங்களோடு விரிவு படுத்தியவர் என்பதைக் கண்ணன் பாட்டுக்
காட்டுகின்றது. பாரதியார் பாடியுள்ள தெய்வப்பாடல்களில், கண்ணன் பாட்டிலேயே
இந்தப் பரிணாமம் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
கண்ணன் பாட்டின் சொற்கள் எளிமை உடையவை; ஆனால் ஆழமான பொருள்
உடையவை. மழைக்குக்குடை; பசிநேரத்து உணவு என்றன் வாழ்வினுக்கு எங்கள் கண்ணன்
என்கிறார் பாரதியார். வழிபடுபொருளாக இல்லாமல் கடவுளைப் பயன்படு பொருளாகப்
பாரதியார் மாற்றுகின்றார். உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும்
வெற்றிலையும் எங்கள் கண்ணன் என்று நம்மாழ்வார் கூறியதை இங்கு நாம் ஒப்பு
நோக்கலாம்.
ஆனால் பக்தி இலக்கியப் பாரம்பரியம் கூறமுடியாத, வகையில்.
நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர்
சீலம் அறிவு கருமம் - இவை
சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்
(கண்ணன் என் தந்தை - 8)
என்று கண்ணனின் குலப்பகுப்பைக் கூறுவதைக் காணலாம். சேவகனாக வரும்கண்ணன்
மாடுகன்று மேய்த்திடுவேன்; மக்களை நான் காத்திடுவேன்
வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்;
சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்
(கண்ணன் என் சேவகன் - 4)
என்று கூறுமளவு இறங்கி வரக் காண்கிறோம். சங்கு சக்கரங்கள் ஏந்திய திருமாலின்
அவதாரத்தின் கையில் ‘வீடுபெருக்கி’ வைக்கும் துடைப்பத்தைக் கொடுத்துத் தமக்குச் சேவகனாக்கிக்
கொள்ளும் உரிமை பாரதிக்கே வாய்த்திருக்கின்றது.
கண்ணனை நான் ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்
(கண்ணன் என் சேவகன் - 4)
என்று கூறுகிறார். இங்குத் தெய்வம் ஆட்கொள்வது போய் தெய்வத்தை
இவர் ஆட்கொள்வது தொடங்கி விட்டது. என்ன இது! கண்ணனை வேலைக்காரனாக்கி ஆட்கொண்டதாகப்
பாரதி கூறி விட்டாரே! அவதாரப் பெருமையே போய்விட்டதே என்று யாரும் துயருறத்
தேவையில்லை. இதோ! கண்ணனைக் குழந்தையாக்கித் தோளிலே ஏற்றிக் கொள்கிறார். மரபு
வழியிலான பிள்ளைத் தமிழ் நூற் பகுதிகளைக் ‘கண்ணம்மா என் குழந்தை’
வென்று விடுகிறது.
ஓடி வருகையிலே - கண்ணம்மா
உள்ளங் குளிருதடீ!
ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
ஆவி தழுவுதடீ!
(கண்ணம்மா என் குழந்தை - 8)
குழந்தை விழுந்துவிடுமோ என்ற கவலையிலும் பதைப்பிலும், உடல்போய்த் தழுவ முடியாத விரைவில் ஆவி தழுவுவதாகக் கூறுவதில்தான் எவ்வளவு உண்மை இருக்கிறது!
பக்தி இலக்கிய உலகில் இறைவனைக் காதலனாகவும் அன்பர்கள் தம்மைக் காதலியாகவும் எண்ணுவதே பெரும்பான்மை மரபு. தாகூர் கீதாஞ்சலியில் ஓரிடத்தில் இறைவனைக் காதலியாகவும் புனைந்துள்ளார். பாரதி இறைவனைக் காதலனாகவும் காதலியாகவும் பாடியுள்ளார். சுத்தானந்த பாரதியார்.
இன்பமும் அனுபவிக்கிறார். இது ஒரு புத்தம் புதுமையான
மதுரபாவனை. சைதன்யர் பரம ஹம்ஸாதிகள் தம்மை
ராதையாகவே பாவித்து நாயகியாகவே காதல் செய்தனர்.
பாரதியார் கண்ணனைத் தம் சொந்தக் காதலியாகவே
எண்ணுகிறார்"
(பாரதி விளக்கம்)
(சைதன்யர் - கிருஷ்ண சைதன்யர் ஒரு கிருஷ்ண பக்தர்,
பரம
ஹம்ஸாதிகள் - இராம கிருஷ்ண பரம ஹம்ஸர் முதலானோர்)
என்று கூறுகிறார். கண்ணம்மா என் காதலியில்,
சூரிய சந்திரரோ?
வட்டக் கரிய விழி கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ
பட்டுக் கருநீலப் - புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடுநிசியில் - தெரியும்
நட்சத்திரங்க ளடீ!
(கண்ணம்மா என் காதலி: 16)
என்று பாடும் பாடலில் கண்ணன் பெண்ணுருக் கொண்டு இயற்கையையே தன் உடலாகவும் உறுப்புகளாகவும் கொண்டு தோன்றுவதை மாறாத காதலன்போடு பேசுகின்றார்.
தோயும் மது நீ எனக்குக் தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூய சுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!
(சூறை- சுழற்காற்று)
.
(கண்ணம்மா என் காதலி: 21)
எனக் கண்ணம்மாவுக்கும் தமக்குமுள்ள நீங்காத, நீக்க முடியாத தொடர்புகளை அழகாகக் கூறுகின்றார். தமக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு பல பிறவிகளாகத் தொடர்வது என்கிறார்.
நேற்று முன்னாளில் வந்த உறவன்றடீ! மிக
நெடும்பண்டைக் காலமுதல் நேர்ந்து வந்ததாம்;
போற்றும் இராமனென முன்புஉதித்தனை - அங்கு
பொன்மிதிலைக் கரசன் பூமடந்தை நான்
ஊற்றமு தென்னஒரு வேய்ங்குழல் கொண்டோன் - கண்ணன்
உருவம் நினக்கமையப் பார்த்தன் அங்குநான்.
(கண்ணம்மா என் காதலி: 4)
இவற்றோடு அத்தொடர்பு விடவில்லை. முன்பு நான் இரணியன் - நீ நரசிங்கன்; முன்பு நான் யசோதை - நீ புத்தன். என்றும் கூறுகிறார். உயிர், இறை ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பு காலங்களை எல்லாம் கடந்து தொடர்ந்து வருவதென்பதை இதனைப் போல வேறு எந்த இலக்கியமும் கூறவில்லை. இரணியனாகத் தன்னை உருவகித்துக் கொள்வதில்தான் புதுமை இருக்கிறது. இரணியனும் இறைவனால் ஆட்கொள்ளப் பெற்றவனே. ஆட்கொள்ளப்பெற்ற முறையே வேறு. இந்த உண்மையைப் பாரதியின் பாட்டு மிகத் தெளிவாக விளக்குகின்றது.