தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

படர்க்கைப் பெண்பால் வினைமுற்று

4.2 படர்க்கைப் பெண்பால் வினைமுற்று

     உயர்திணையில் ஆண்பால் என்பதைப் போல்
பெண்பால் எனும்     பகுப்பும் உள்ளது. பெண்பால்
வினைமுற்றுக்கு,

குறத்தி வந்தாள்

வள்ளி வந்தாள்

என்பன போன்ற தொடர்களில் உள்ள ‘வந்தாள்’ என்னும்
சொல் சான்றாகும். இதில் உள்ள ‘ஆள்’ என்னும் விகுதி,
பெண்பாலைச் சுட்டும் வினைமுற்று விகுதியாகும். ஆண்பால்
விகுதிகள் போன்று, பெண் பால் விகுதிகளும் பெயர்
விகுதியாதல் உண்டு.

உமையாள் வந்தாள்

என்பதில் உமை என்பதோடு சேர்ந்துள்ள விகுதி பெண்பால்
உணர்த்தும் பெயர் விகுதி. பெயர் விகுதியும், வினைமுற்று
விகுதியும் வடிவில் ஒன்றே. ‘ஆள்’ என்பது பெயரோடு சேர்ந்து
வந்தால், பெயர் விகுதி, வினையோடு சேர்ந்து முற்றுப் பொருள்
தரின் அதுவே வினைமுற்று விகுதி என்பது நினைவிற்குரியது.

4.2.1 தெரிநிலை வினைமுற்று

     படர்க்கை இடத்தில் பெண்பாலைக்குறிக்கும் தெரிநிலை
வினைமுற்றுகள் ‘ஆள்’ விகுதியைப் பெரும்பாலும் பெற்று
வரும். இதற்குச் சில சான்றுகள் பார்ப்போம்.

சாந்தி வந்தாள்
-
(இறந்த காலம்)
ஆள்
சாந்தி வருகிறாள்
-
(நிகழ் காலம்)
சாந்தி வருவாள்
-
(எதிர் காலம்)

    மூன்று கால வினைமுற்றுச் சொற்களிலும் ‘ஆள்’ விகுதி
இறுதியில் உள்ளமை நோக்கத் தக்கது. இதுபோல் ‘அள்’
விகுதியும் வருவதுண்டு.

அவள் நடந்தனள்
-
இறந்த காலம்
அள்
அவள் நடக்கின்றனள்
-
நிகழ் காலம்
அவள் நடப்பள்
-
எதிர் காலம்

     இவ் எடுத்துக் காட்டுத் தொடர்கள் அனைத்திலும் அள்
விகுதி தெரிநிலை வினைமுற்று விகுதியாக வந்துள்ளமை
காணலாம். இதுபோல் குறிப்பு வினைமுற்றுகளிலும் அள், ஆள்
எனும் விகுதிகள் வரும். இது பற்றி அடுத்துக் காண்போம்.

4.2.2 குறிப்பு வினைமுற்று

அவள்
பொன்னள்
அவள்
இன் சொல்லள்
-
அள்
அவள்
மனையாள்
அவள்
நல்லாள்
-
ஆள்

     இத் தொடர்களில் அள்,ஆள் என்னும் விகுதிகளை
உடைய குறிப்பு வினைமுற்றுச் சொற்கள் வந்துள்ளன.
இக்காலத்தில் குறிப்பு வினைமுற்றுகளை மிகுதியாக நாம்
பயன்படுத்துவது இல்லை எனினும் இலக்கியப் பயிற்சிக்கு இத்தகு
செய்திகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.

படர்க்கை வினைமுற்றுச் சொற்களின் விகுதிகள்
எவற்றை உணர்த்தும்?

2.

படர்க்கை ஆண்பால் வினைமுற்றுகளில் வரும்
விகுதிகள் யாவை?

3.

படர்க்கை ஆண்பால் குறிப்பு வினைமுற்றுக்குச் சில
எடுத்துக் காட்டுகள் தருக.

4.

படர்க்கைப் பெண்பால் வினைமுற்று விகுதியாக
‘இ’ வருமா?

5.

படர்க்கைப் பெண்பால் தெரிநிலை வினைமுற்று
முக்காலத்திலும் வருவதற்குச் சான்றுகள் தருக.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 09:34:12(இந்திய நேரம்)