தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5-5.5 அகப்பொருட் பெருந்திணை

5.5 அகப்பொருட் பெருந்திணை

‘பெருந்திணை’ என்பது பொருந்தாக் காமம் ஆகும். ஒருவன் -
ஒருத்தியிடம் அளவுக்கு அதிகமாகக் காமம் கொள்ளுதல், தன்னைவிட
வயது முதிர்ந்த பெண்ணை விரும்புதல் எனப் பல நிலைகளில்
பெருந்திணை அமையும். இது அகப்பொருளுக்கு உட்பட்டதாக அமையும்போது அதனை அகப்பொருட் பெருந்திணை என்பர்.

நம்பியகப் பொருள் ஆசிரியர் நாற்கவிராச நம்பி கீழ்க்காணும்
செய்திப் பிரிவுகளை அகப்பொருட் பெருந்திணைக்கு உரியன என்று
பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்.

1) தலைவி தலைவன் பிரிந்தபொழுது மனம் கலங்கி நிற்றல்.

2) தலைவன் மடலேறுவேன் என்று கூறுதல்.

3) பகற் குறி, இரவுக்குறி முதலான சந்திப்பு வாய்ப்புகள்
தடைப்பட்டுப் போதல்.

4) வேலனை அழைத்துவந்து வெறியாட்டு நிகழ்த்துதல்.

5) உடன்போக்காகப் புறப்பட்டுச் செல்லுதல்.

6) தலைவி பூப்பு எய்தி நிற்பதை வெளிப்படுத்துதல்.

7) பரத்தையிற் பிரிந்த தலைவன் பொய்யாக வாக்குறுதி வழங்குதல்.

8) ஊடலை உணராமல் முரண்பாடு நீடித்து நிற்றல்.

9) தலைவியைப் பிரிந்து செல்ல முடிவுசெய்த தலைவன், அதனை
உடனே மேற்கொள்ளாமல், தயங்கித் தயங்கி நிற்றல்.

10) தலைவியைப் பிரிந்து சென்று பாசறையில் தங்கிய தலைவன்
அங்கேயும் பிரிவை எண்ணிப் புலம்புதல்.

11) இயற்கைப் பருவம் மாறுபடுதலால் வருந்திப் பேசுதல்.

12) பொறுத்துக் கொள்ளச் சொல்லும் தோழியின் வன்புறை
வார்த்தைகளுக்கு எதிராகத் தன் வருத்தத்தைத் தலைவி
புலப்படுத்துதல்.

13) காட்டுக்குச் சென்று தலைவியுடன் தவம் மேற்கொள்ளுதல்.

இவையாவும் அகப்பொருட் பெருந்திணையின் உள்ளடங்கிய செய்திப்
பிரிவுகளாகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 11:53:54(இந்திய நேரம்)