தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

D03141-1.1 தன்மை அணி

1.1 தன்மை அணி
 
    தண்டியலங்கார     ஆசிரியர்     பொருளணியியலில்குறிப்பிடும் முதலாவது அணி இதுவே. இதற்கு மற்றொருபெயர் 'தன்மை நவிற்சி அணி' என்பதாகும். தன்மைஎன்பதற்கு இயல்பு அல்லது இயற்கை என்று பொருள்.
 
1.1.1 தன்மை அணியின் இலக்கணம்
 
    எவ்வகைப்பட்ட பொருளையும் அதன் உண்மைத்தன்மையை விளக்குவதற்கு ஏற்ற சொற்களைக் கொண்டுபாடுவது தன்மை அணி ஆகும். இதனை.

எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும்
சொல்முறை தொடுப்பது தன்மை ஆகும்
(தண்டி. 29)
என்ற நூற்பாவைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.பொருளின் இயல்பை நேரில் பார்த்ததுபோலத் தோன்றுமாறுஉள்ளபடி விளங்கச் சொல்லுவது தன்மை அணி. சுருங்கச்சொன்னால் 'உள்ளதை உள்ளவாறு கூறல்' தன்மை அணிஎனலாம்.
 
1.1.2 தன்மை அணியின் வகைகள்
 

தன்மை அணி 'பொருள், குணம், இனம், தொழில்' என்னும்நான்கின் அடிப்படையில் தோன்றும் எனவே தன்மையணிபொருள் தன்மை, குணத் தன்மை, இனத் தன்மை,தொழில் தன்மை என நான்கு வகைப்படும். ஒருபொருளின் தன்மையைக் கூறுவது பொருள் தன்மை; ஒரு குணத்தின் தன்மையைக் கூறுவது குணத்தன்மை. ஒருஇனமின் - இனத்தின் தன்மையைக் கூறுவது இனத் தன்மை; ஒரு தொழிலின் தன்மையைக் கூறுவது தொழில் தன்மைஆகும். இவற்றுள் முதற்கண் கூறப்படும் பொருள் தன்மைஅணியைச் சான்றுடன் விளக்கமாகக் காண்போம்.

  • பொருள் தன்மை

    ஒரு பொருளின் பல விதமான இயல்புகளைஉள்ளவாறு எடுத்துக் கூறுவது பொருள் தன்மையாகும்.

எடுத்துக்காட்டு:

நீல மணிமிடற்றன்; நீண்ட சடைமுடியன்;
நூல்அணிந்த மார்பன்; நுதல்விழியன்; -
தோல்உடையன்;

கைம்மான் மறியன்; கனல்மழுவன்; கச்சாலை
எம்மான் இமையோர்க்கு இறை

இப்பாடலின் பொருள்:

    திருக்கச்சாலை என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானாகிய சிவபெருமான் கருங்குவளை மலர் போன்றஅழகிய கழுத்தை உடையவன்; நீண்ட சடைமுடியைஉடையவன்; முப்புரி நூல் அணிந்த மார்பினை உடையவன்;நெற்றிக்கண்ணை உடையவன்;     புலித்தோல் ஆடைஅணிந்தவன்; கையிலே மான் குட்டியையும் கனலையும்மழுவினையும் (கோடரியையும்) ஏந்தியவன்; அவன் தேவர்க்கும்இறைவன் ஆவான்.

அணிப் பொருத்தம்:

    இப்பாடலில் 'சிவபெருமான்' என்ற பொருளின்(உருவத்தின்) பல விதமான தோற்ற இயல்புகளை நேரில்பார்ப்பது போல உள்ளவாறு கூறியிருப்பதால் இப்பாடல்பொருள் தன்மை அணி ஆயிற்று.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 12:34:09(இந்திய நேரம்)