தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5.2 சிறுகதைக் களம்

5.2 சிறுகதைக் களம்

    பிறக்கும்     போது எவனும்     காம,      குரோத,
குற்ற மனோபாவங்களோடு பிறப்பதில்லை. வளர்ப்பும் சமூகச்
சூழ்நிலையும்தான் குற்றவாளிகளை உருவாக்குகின்றன என்ற
கருத்தை     அடியொற்றி     எல்லாரையுமே     நாம்
மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும் என்பதே இவர்
சிறுகதைப் படைப்புகளின் களனாகும்.

    ‘எல்லாவற்றையும் பெறத் துடிக்கின்றோம்.     பெற்றும்
வாழ்கின்றோம். ஆனால் மகத்தானதாகிய வாழ்க்கையை இழந்து
விடுகின்றோம். வாழ்க்கையை இழந்து் வாழ்வா?’ என்ற
பிரபஞ்சனின் கேள்வி. இவர் படைப்புகளிலும் எதிரொலிக்கக்
காண்கிறோம்.

    குழந்தைகள், பெண்கள் ஆகியோரின் உரிமைகளும்,
உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும் என்கிற ஆசிரியரின்
வேண்டுகோள் பல சிறுகதைகளில் எதிரொலிக்கக் காணலாம்.

5.2.1 குழந்தைகள் உலகம்

    "குழந்தைகள் எதன் பொருட்டும் அழக் கூடாது.
குழந்தைகளை அழவைக்கிற சமூகம் குற்றவாளிகளின் சமூகம்"
என்று கடுமையாகச் சாடுகிறார் பிரபஞ்சன். குழந்தைகளும்,
சிறுவர்களும் மென்மையான உணர்வுகளைக் கொண்டவர்கள்.
அன்பு, நட்பு இவற்றுக்கே முக்கியத்துவம் அளிக்கும் பாசமிகு
உலகம் குழந்தைகள் உலகம். இது நச்சுத் தன்மையை
வெளியிடும் சில பெரியவர்களால் சிதைக்கப்படுவதையும்,
துன்புறுத்தப்     படுவதையும் சொல்வது     பூக்களை
மிதிப்பவர்கள்
.

    எட்டு வயது லெட்சுமியின் வகுப்புத் தோழன் சிட்டி.
இவர்களுடைய கள்ளம் கபடம் இல்லாத நட்பு வகுப்பு
ஆசிரியரால் கொச்சையாகப் பேசப்படுகிறது. இதனால் மனம்
வருந்தித் துன்புறும் லெட்சுமியின் உணர்வுகளைக் கதை
ஆசிரியர் பின்வருமாறு கூறுகிறார்:

    "சிட்டி நான் செத்ததும் திரும்பவும் பிறப்பேன். பிறந்தால்
பறக்கிற பட்சியா பிறப்பேன். எவ்வளவோ சந்தோஷம்.
பறவையாய்ப் பிறந்தா. பள்ளிக்கூடம் போக வேண்டாம்"
(பூக்களை மிதிப்பவர்கள்).

5.2.2 பெண்கள் உலகம்

    "பெண்களுக்கென ஓர் உள்ளுலகம் இருக்க முடியாது
என்றே ஆண்களின் உலகம் நம்பி வந்தது. ஆண்களைப்
பொறுத்தவரை பெண்கள் போகக் கருவிகள். தமக்கென
வாழாப் பிறர்க்கு உரிமையானவர்கள். அவர்களுக்கென்று ஒரு
வானம் இருக்க முடியாது. அவர்கள் ரசிக்க நட்சத்திரம்
இல்லை. அவர்கள் சுவாசிக்கக் கரிப்புகையே போதும்.
அவர்களுக்கு நண்பர்கள் இருக்க முடியாது. ஆண்களின் இந்த
மனோ பாவத்தின் பயனாய்ச் சீரழிக்கப்படும் பெண்கள்
கோடிக் கணக்கானவர்கள். உங்கள் சொந்த வாழ்வில் நீங்கள்
இவ்விதமான நீசச் செய்கைக்குத் துணை போதல் ஆகாது".
(நேற்று மனிதர்கள் - முன்னுரை) என்ற ஆசிரியரின்
கட்டளையை எதிரொலிப்பவை பிரபஞ்சனின் பெண்கள் பற்றிய
கதைகள் எனலாம்.

    பெண்களின் உரிமையும் உணர்வும் மதிக்கப்படாத நிலை
இன்றும் சமுதாயத்தில் நிலவுவதை எடுத்துரைக்கும் சிறுகதை
'அம்மாவுக்கு மட்டும்' (இருட்டின் வாசல்).

    விடியற்காலை நாலரைக்கு எழுந்து வேலை செய்யத்
தொடங்கிய சாந்தாவை அவன் மகன் சித்து பார்க்கிறான்.
தொடர்ந்து அவள் (காபி, இட்லி, சமையல்) வேலை
செய்வதைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான். கணவன் அவசர
அவசரமாய்ச் சாப்பிட்டு விட்டு அலுவலகம் செல்கிறான்.
புறப்படும்போது வந்த தன் நண்பனுக்கு மனைவியை அறிமுகம்
செய்து வைக்கிறான். "வேலைக்குப் போறாங்களா?" என்று
நண்பன் கேட்ட போது, "இல்ல, வீட்டுல சும்மாதான் இருக்கா"
என்கிறான்.     வேலைக்காரியை     நிறுத்திவிட்டு, மேலும்
சிக்கனமாக இருக்கச் சொல்கிறான்.

    "ஆபீஸ்ல நாலு ஆள் வேலையை நான் செய்யறேன்.
ரொம்பக் களைப்பா ஆயிடுது. வீட்டுல சும்மா இருக்கிற
உனக்கு எங்க கஷ்டம் விளங்காது" என்கிறான். தூக்கம்
வரவில்லை என்று சொன்ன மகனிடம்," உங்களுக் கென்ன?
அம்மா, வீட்டுக்குள்ள மகாராணியா இருக்கா. நீ படிக்கிறே.
காலைலே பஸ்சுல நசுங்கி, நடந்து, ஆபீஸ்ல கஷ்டப்பட்டு வீடு
வந்து சேர்றதுக்குள்ள நான் படற கஷ்டம் எனக்குத்தான்
தெரியும்.’

    "எதுக்கப்பா     இத்தனை     கஷ்டப்படறே?"

    "கஷ்டப்படலேன்னா, சம்பளம், சுளையா மூவாயிரம்
    யார் கொடுப்பா?"

    "அப்பா, உனக்கு ஆபிசுல சம்பளம் கொடுக்கறாங்க.
    அம்மாவுக்கு யாருப்பா சம்பளம் கொடுப்பா?"
    
    "அம்மாவுக்கு சம்பளமா?"

    "அம்மாவும்தானே     வேலை     செய்யறாங்க.
    காலையிலே உனக்கு முன்பே எழுந்திருக்கிறாங்க. தெருப்
    பெருக்கி காபி போடறாங்க. சோறு ஆக்கிறாங்க. துணி
    துவைக்கிறாங்க, வீடு கழுவி விடறாங்க, ராத்திரியும் சோறு
    ஆக்கிறாங்க. இதுக்கெல்லாம் சம்பளம் தர வேணாமாப்பா
    நீ?ஆபீசுல நீ வேலை பார்க்கிறதுக்கு உனக்கு சம்பளம்.
    வீட்டுல வேலை பார்க்கிறதுக்கு அம்மாவுக்கு யார்
    சம்பளம் கொடுப்பா?"

    பதில் சொல்லத் தோன்றாமல் அமர்ந்திருந்தான் சேகர்.
சேகருக்கு மட்டுமா பதில் சொல்லத் தோன்றவில்லை என்ற
பாவனையை இச்சிறுகதை உண்டாக்குகிறதல்லவா?

    வரதட்சிணைக் கொடுமையைச் சொல்வது தொலைந்து
போனவள் (விட்டு விடுதலையாகி) சிறுகதை.பெண்ணினத்தையே
அவமானப்படுத்துவதைப் போல் நடைபெறும் பெண்பார்க்கும்
நிகழ்ச்சி இப்படி விமர்சிக்கப்படுகிறது:

    சீதா அக்காவைப் பெண்பார்க்க வருபவர்கள் இரண்டு
வகைப் பட்டவர்களாக இருப்பார்கள். காலை நேரத்தில்
வருபவர்கள் மற்றும் மாலை வேளையில் வருபவர்கள். மிக
நிம்மதியாகக் காலைப்     பலகாரம் சாப்பிட்டு விட்டு,
பெரும்பாலும் ஞாயிறுகளில் பொழுது போக்க, வேறு ஒரு
காரியமும் இல்லையெனின் அப்படியே தமாஷாக அக்காவைப்
பார்க்க வருபவர்கள். மாலை வேளைக்காரர்கள்... காலாற
நடந்து ஒரு     மாறுதலுக்காக வருபவர்கள். வந்தவர்கள்
இனிப்பு     காரமெல்லாம்     சாப்பிட்டார்கள்.    எல்லா
மாப்பிள்ளைகளையும் போலத்தான் அவரும் இருந்தார். அதே
விறைப்பு, அதே ஒட்டாத பார்வை எல்லாம். "மிஸ் சீதாவுக்கு
என்ன அடிப்படைச் சம்பளம், நானூற்றைம்பதா? எழுநூறுக்கு
மேலேன்னாரே தரகர்" அலுத்துக் கொள்ளும் மாப்பிள்ளை.

    பண விஷயத்தில் மாப்பிள்ளைப் பையன் குறியாக
இருப்பது பற்றித் தயங்கினார் பெண்ணைப் பெற்றவர். பெண்
என்ன முடிவெடுக்கிறாள் பாருங்கள்:

    "வரப் போகிறவரைப் புரிந்து கொண்டு, அவரிடம் இருக்கிற
நல்ல குணத்தை அல்லது கெட்ட குணத்தைப் புரிஞ்சுகிட்டுக்
கல்யாணம் பண்ணிக்கிற மாதிரியா நாம இருக்கோம்?
கண்ணுக்கு விகாரமா இல்லை; ஏதோ சம்பாதிக்கிறார். அதுக்கு
மேலே நம்மால போக முடியாதுடி. ஒவ்வொரு சம்பந்தமும்
முறிஞ்சு போறப்போ அப்பா எவ்வளவு சங்கடப்படறார்?
உனக்கும் வயதாகிறது. நான் எதுக்கு நந்தி மாதிரி நடுவில்
கிடந்து உன் வாழ்க்கையை மறிக்கணும்" என்கிறாள்
தங்கையிடம். இப்படித் தன் ஆசைகளை விருப்பத்தைத்
தொலைத்துக் கொண்டு மற்றவர்கள் மனத்தை நோகடிக்காத,
பெண்ணின் மேன்மையான     உணர்வுகளைச் சொல்லும்
கதைதான் ‘தொலைந்து போனவள்’ (விட்டு விடுதலையாகி).

5.2.3 தனி மனிதர்களின் அக உலகம்

    வழக்கமான மனநிலையில் ஏற்படும் மாறுதலுக்கும்
கடைப்பிடித்த     கொள்கைகளின் மாற்றத்திற்கும் உரிய
காரணத்தையும், சூழ்நிலையையும் சுவைபட விளக்கும் கதை
சைக்கிள்.

    பாண்டிச்சேரியில் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் வாழ்ந்து
வந்த ஒரு குடும்பம். அக்குடும்பத்தில் மாமாவின் பண்பினை
அவர் மருமகன் கூறுவதைப் பாருங்கள்:

    "மாமாவுக்குப் பிரான்சிலிருந்து வந்த எந்தப் பொருளும்
உன்னதமானவை. வெள்ளைக்காரர்கள் கடவுள் மாதிரி. அவர்
உபயோகிக்கும் சைக்கிள், சோப், பட்டுச் சட்டை எல்லாமே
மேல் நாட்டிலிருந்து வந்தவை. சைக்கிளை அவர் பராமரிக்கும்
அழகே அழகு. மாமா சைக்கிளுக்குப் பக்கத்தில் சம்மணம்
போட்டு உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு பல்லுக்கும் சொட்டுச்
சொட்டாய் எண்ணெய் விடுவார். சைக்கிளுக்கு எண்ணெய்க்
காப்பு முடிந்ததும் கொஞ்சம் தள்ளி நின்று அதைப் பார்ப்பார்.
குழந்தையைப் பார்க்கிற உற்சாகம் அவர் முகத்தில் ததும்பும்.
அப்புறம் பெடலை வேகமாக மிதித்துச் சக்கரத்தைச் சுழல
விடுவார். சக்கரம் மயங்கிக் கொண்டு சுற்றும். சரக்கென்று
பிரேக் போடுவார்.     உதறிக்கொண்டு நிற்கும் சக்கரம்.
சைக்கிளை அவர் தவிர வேறு யாரும் தொடக் கூடாது."

    இப்படிப்பட்டவரை சைக்கிளையே     வேண்டாம் என்று
மருமகனிடம் கொடுக்க வைத்தது ஒரு நிகழ்ச்சி. அது என்ன
என்று பார்ப்போமா?

    திரௌபதி அம்மன் திருவிழா உற்சவம். மாமா ஒரு நாள்
பொறுப்பேற்றுச் சிறப்பான முன்னேற்பாடுகள் செய்தார்.
பட்டுச் சட்டை, பட்டு வேஷ்டி உடுத்திக் கம்பீரமாக
வீற்றிருந்தார் மாமா. கூத்து தொடங்கியது. முக்கிய
அதிகாரியான செபஸ்தீன் தன் மனைவியோடு வர, மாமா
எழுந்து தன் நாற்காலியில் துரை மனைவியை அமரவைக்க
வேண்டியதாயிற்று. பிறகு நாற்காலி வர, துரை மனைவியின்
பக்கத்தில் நாற்காலியைப் போட்டு அமர்ந்தார். துரை மனைவி
கணவன் பக்கம் திரும்பி அவர் காதில் ஏதோ சொல்ல. துரை
மாமாவைத் தனியே அழைத்துப் போனார்.

    ";நீங்க பக்கத்தில் உக்காருவது துரை மனைவிக்குப்
பிடிக்கவில்லை."

    " பிடிக்கலையா... எதுக்கு?"

    " நான் நினைக்கிறேன் - என்ன இருந்தாலும் நீங்க
எங்களுக்குச் சரிசமமா உக்காரலாமா? அதுவும் ஒரு பொது நிகழ்ச்சியில்...."

    மாமாவுக்கு யாரோ கன்னத்தில் அறைந்தது போல்
இருந்திருக்கிறது.      இந்நிகழ்ச்சிக்குப் பின்தான்    மாமா
ஆசையாய்ப் போற்றிப் பாதுகாத்த பிரான்சு சைக்கிளை
மருமகனிடம் கொடுத்துவிட்டார்.

    மனிதர்கள் மனத்தைக் காட்டும் கண்ணாடி முகம்
என்கிறார்கள். எத்தனையோ முகத்தில் அகத்தின் நிலை
தெரிகிறது. தெரிவதை எவ்வளவு பேர் சரியாகப் புரிந்து
கொள்கிறார்கள் என்பதில் ஒருவனுக்கு ஏற்பட்ட சுவையான
அனுபவம் பற்றி எழுந்த சிறுகதை அப்பாவு கணக்கில் 35
ரூபாய்
.

    இச்சிறுகதையில் ஏமாற்றியவன்     அப்பாவி போல
இருக்கிறான். ஏமாந்து     போனவனோ ஏமாற்றியவனிடம்
கோபப்படுவதற்குப்     பதிலாக இரக்கப்படும் அளவுக்கு
அப்பாவியாய் இருக்கிறான் என்பதைச் சுவையாகச் சொல்கிறார்
பிரபஞ்சன்.

    பேருந்தில் பக்கத்து இருக்கையில் அமர்ந்த ஒரு பெரியவர்
சீட்டு வாங்க நூறு ரூபாய்த் தாளை எடுத்து நீட்ட, நடத்துநர்
கண்டபடி திட்டுகிறார். வேறு சில்லரை இல்லையே என்று
பரிதாபமாக நின்றவருக்குச் சீட்டு எடுத்துக் கொடுக்கிறார்
மற்றவர். மாமண்டூரில் இரவு உணவுக்கு இறங்கிச் சாப்பிட்டு
விட்டு நூறு ரூபாயை நீட்ட அங்கும் சில்லறை இல்லை.
முன்புபோல மற்றவரே இருவருக்கும் சேர்த்துப் பணம்
கொடுக்கிறார். வண்டி ஊருக்குச் சென்றவுடன் இறங்கியவர்
பழம் வாங்கிச் சில்லறை மாற்றிக் கொடுக்கலாம் என்று தனக்கு
உதவியவரை அழைத்தார். அங்கும் சில்லறை இல்லை.
பெரியவர் பழத்தைத் திருப்பிக் கொடுக்க முயலவே
பரவாயில்லை. குழந்தைகளுக்குக் கொண்டு போய்க் கொடுங்க
என்று சொல்லி மேலும் ஒரு ஐந்து ரூபாய் கொடுத்து வண்டி
வச்சிட்டுப் போங்க என்றார் மற்றவர். மனம் நெகிழ்ந்து போன
அவர் "அவசியம் வீட்டுக்கு வரணும். ரொம்ப உபகாரம்
பண்ணியிருக்கீங்க. முகவரி கூறி அப்பாவுன்னு சொன்னா
வீட்டைக் காட்டுவாங்க" என்று கூறி விடைபெற்றுச் சென்றார்.

    மறுநாளே அவரையும்     அவர்     குழந்தைகளையும்
பார்த்துவிட்டு வரலாம் என்று அவர் வீட்டுக்குச் சென்றார்.
அவர் வீட்டில் இல்லை. அவர் மனைவி பையனிடம் அவரைச்
சாராயக் கடையிலிருந்து அழைத்துவரச்     சொல்கிறாள்.
திடுக்கிட்ட அவரிடம், "என் தம்பி கொடுத்தனுப்பின பணம்
தீர்ற வரைக்கும் அது அங்கதான் இருக்கும்" என்று
சாதாரணமாகச் சொன்னவள், "உங்களுக்கு ஏதாவது பணம்
தரணுங்களா?" என்றாள்.வறுமைத் தோற்றத்தில் இருந்த இரண்டு
பெண்கள், பையனைப் பார்த்தவுடன் கையிலிருந்த பத்து
ரூபாயைக் கொடுத்து விட்டு "நாளைக்கு வருகிறேன்" என்று
சொல்லிவிட்டு நடந்தார்- என்று நிறைவு பெறுகிறது இச்சிறுகதை.

5.2.4 வரலாற்றுப் பார்வை

    வெள்ளையர்கள் ஆட்சியில் நம்மவர்களின் நிலை குறித்து
எழுந்தவை பிரபஞ்சனின் சில படைப்புகள். வானம் வசப்படும்
என்ற புதினத்தில் சென்ற நூற்றாண்டில் தமிழகச் சமுதாய
நிலையையும், அரசியல் நிலையையும் நுணுக்கமாகப் படம்
பிடித்துக் காட்டியுள்ளார் பிரபஞ்சன். 'பாதுகை' (திரை) என்ற;
சிறுகதையிலும் வரலாற்றுச் சம்பவம் போன்ற நிகழ்ச்சிகளைப்
பதிவாக்கி உள்ளார்.

    நீதி மன்றத்தில் பொன்னுத்தம்பி அணிந்திருந்த சப்பாத்துக்கள்
(ஷு க்கள்)    போன்றே அரசுத் தரப்பு வழக்கறிஞர்
அணிந்திருந்தார். தமிழ் வழக்கறிஞர்கள் இருவர்    மட்டும்
கோட்டும் பஞ்சக் கச்சமும் அணிந்து வெறும் காலுடன்
இருந்தனர். பொன்னுத்தம்பி முதன் முதலில் சப்பாத்து
அணிந்து வெள்ளைத் துரைமார் போலச் சென்ற போது
நீதிபதி ஆட்சேபித்தார்.

    "என் மன்றத்துக்குள் தாங்கள் சப்பாத்து அணிந்து
வருவதை நான் ஆட்சேபிக்கிறேன்".

    பொன்னுத்தம்பி நிமிர்ந்து நீதிபதியிடம் "கனம் நீதிபதி
அவர்களே! என் நண்பரும் அரசு வழக்கறிஞருமான இவரும்
மரியாதைக்குரிய தாங்களும் சப்பாத்து அணிந்து மன்றத்துக்குள்
இருக்கும்போது நான் மட்டும் அணியக் கூடாது என்று தாங்கள்
சொல்லும் கட்டளையை என்னால் விளங்கிக் கொள்ள
முடியவில்லை.

    வழக்கறிஞர்கள் என்ன உடை உடுத்த வேண்டுமோ அந்த
மரபுப்படி நான்     உடுத்தியிருக்கிறேன்.     ஐரோப்பிய
வழக்கறிஞர்கள் இன்ன விதமாயும், இந்திய வழக்கறிஞர்கள்
இந்த விதமாயும் உடுத்த வேண்டும் என்ற நியதியை நம்
நீதிமன்றம் ஏற்படுத்தவில்லை. தாங்கள் நான் சப்பாத்து
அணிந்து வருவதை மறுப்பதை என்னால் புரிந்து் கொள்ள
முடியவில்லை".

    மாபெரும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியான
வணக்கத்துக்குரிய நீதிபதியைப் பார்த்து, அடிமை நாட்டைச்
சேர்ந்த ஒரு சாதாரண மனிதர் முகத்துக்கு நேரே தன்
எதிர்ப்பைப் புலப்படுத்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க சம்பவம்
அப்போது நிகழ்ந்து முடிந்திருந்தது என்ற இந்நிகழ்ச்சி
மேற்கூறிய சிறுகதையில் பதிவு செய்யப்படுகிறது.

    பின் பொன்னுத்தம்பியின் வழக்கறிஞர்     உரிமை
மறுக்கப்பட்டது. பொன்னுத்தம்பி பாரிசில் இருந்த உச்ச நீதி
மன்ற நீதிபதிக்கு     நீதிமன்றத்துள் நடந்த நிகழ்ச்சிகள்
அனைத்தையும் எழுதி "நீதி தேவதைக்கு முன்னால் வெள்ளை,
கறுப்பு என்ற வித்தியாசங்கள் உண்டா... நீதிமன்றம் அனுமதித்த
உடைகளையும் சப்பாத்தையும் அணிந்தே நான் நீதிமன்றம்
செல்லத் தாங்கள் உத்தரவிட வேண்டும். புதுச்சேரி நீதிபதியின்
தீர்ப்பையே     தாங்களும்     ஆதரிப்பீர்     எனில் இந்த
வழக்குரைஞர் வேலையை விடுவேனே அல்லாது, என்
வழக்கத்தை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன். நீதி
ஒருபோதும் சாகாது என்பதை நான் அறிவேன். சமத்துவத்தை
மட்டுமே நான் கோருகிறேன்" என்று கடிதம் எழுதி அனுப்பி
விட்டு ஓராண்டு காத்திருந்தார். பின்னர் புதுச்சேரி நீதிபதியின்
தீர்ப்பை ரத்து செய்து,' பொன்னுத்தம்பி தன் விருப்பம் போல்
உடுத்திச் சப்பாத்து அணிந்து நீதிமன்றத்துக்கு வரலாம்' என்று
உத்தரவு வந்ததும், வெற்றி வீரனாக நீதிமன்றம் சென்றதாகக்
கதை நிறைவு பெறுகிறது.

5.2.5 சமுதாய மாற்றங்கள்

    கல்வி அறிவியல் முன்னேற்றம் காரணமாக மக்கள்
வாழ்க்கை முறையிலும், செய்யும் தொழில்களிலும் பல
மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன அல்லவா? அதை 'ராட்சசக்
குழந்தை' என்னும் சிறுகதையில் (நேற்று மனிதர்கள்)
எவ்வளவு சுவையாக விவரிக்கிறார் பாருங்கள். கிராமங்களில்
முடிவெட்டிக் கொண்ட அனுபவத்திற்கும், நகரில் ஓர் ஐந்து
நட்சத்திர ஓட்டலில் முடிவெட்டிக் கொள்ளும் அனுபவத்திற்கும்
இடையே எவ்வளவு வேறுபாடு என்பதை இச்சிறுகதை
விவரிப்பதைப் பார்ப்போமா?

    ஏரிக்கரை ஓரம் இருந்த அரச மரத்தின் கீழ் முத்து,
கிண்ணம், கத்தியோடு உட்கார்ந்திருப்பார். அவருக்குக் கடை
இல்லை, நாற்காலி இல்லை... கத்தியும் கிண்ணமும் சீப்புமே
அவர் ஆயுதங்கள்... காலம் அவர் கைக்குள் இருந்தது.
அவருக்கும் அவசரம் இல்லை. அவரிடம் வந்தவர்களுக்கும்
அவசரம் இல்லை. அரைநாள் முடிவெட்டிக் கொண்டார்கள்.

    இப்போது முன்னதாகவே நேரம் ஒதுக்கிக் கொள்ள
வேண்டும். கதவைத் திறந்ததும் ஏ.சியின் பனி முகத்தில்
படிந்தது. என்னிடம் வந்தவர் புன்னகையோடு தன்னை
அறிமுகம் செய்து கொண்டார். காபி கொடுத்து உபசரித்தார்.
" முன் பக்கம் அதிகமாக கட் பண்ண வேண்டாம்". " எனக்குத்
தெரியும் நண்பரே... டாக்டருக்கு உடம்பைப் பற்றித் தெரியும்.
அவரிடம் இந்த மாத்திரையைக் கொடுங்கள் என்று
கேட்பீர்களா?" அவர் குரலில் எவ்வளவு பணிவு இருந்ததோ
அவ்வளவு கண்டிப்பும் இருந்தது. அடுத்த ஒரு மணி நேரம்
தலையில் அவர் கைபடுவதாகவே எனக்குத் தோன்ற வில்லை.
ஏதோ ஒரு ரசாயன மாற்றம் நிகழ்வது மாத்திரம் தெரிந்தது.
என் தகுதியை மீறிய கட்டணத்தைக் கொடுத்து விடைபெற்றேன்.
ஒரு டாக்டர் வீட்டுக்கு, ஒரு வழக்கறிஞர் வீட்டுக்கு, ஒரு
ஐ.ஏ.எஸ் அதிகாரியின் வீட்டுக்குப் போய் வந்த மாதிரி
இருந்தது     என்று     முடிவெட்டியவரின்     அனுபவம்
விவரிக்கப்படுகிறது.

    "பட்டணமெல்லாம் எப்படித் தம்பி இருக்கு?" என்று கேட்ட
கிராமத்து முடி வெட்டுபவர் முத்துவிடம் , "அதுக்கென்ன?
ராட்சசக் குழந்தை மாதிரி அது வளர்ந்துகிட்டு இருக்கு.
உன்னை மாதிரி ஆளுகளை அழிச்சு, அது மாத்திரம் கொழு
கொழுன்னு ஆயிட்டு இருக்கு" என்ற பதிலில் சமுதாய
மாற்றமும் விளைவும் கூறப்படுகிறது அல்லவா?

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1)
பிரபஞ்சன் பிறந்த ஊர் எது?
2)
தமிழக அரசின் பரிசு பெற்ற பிரபஞ்சன்
சிறுகதைத் தொகுதிகள் யாவை?
3)
குழந்தைகள் நட்பு பற்றி எழுதப்பட்ட
சிறுகதை எது?
4)
‘அம்மாவுக்கு     மட்டும்’     சிறுகதையின்
கருப்பொருள் யாது?
5)
வரலாற்றில்     உள்ள     நிகழ்ச்சிகளைப்
பிரதிபலிக்கும் சிறுகதை எது?

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 18:25:18(இந்திய நேரம்)