தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நாடகத் தோற்றம்

1.2 நாடகத் தோற்றம்


     நாடகத்தோற்றம் பற்றிப் பல்வேறு கருத்துகள்
கூறப்படுகின்றன. இங்கு, உலகில் நாடகம் தோன்றியது பற்றியும்,
இந்தியாவில் நாடகம் தோன்றியது பற்றியும் திராவிட
மொழிகளில் நாடகம் தோன்றியது பற்றியும் பார்ப்போம்.
 
  • சமயமும் நாடகமும்

  •  
        சமயங்களை வளர்ப்பதற்கு நாடகங்கள் பெருமளவு
    துணைபுரிந்திருக்கின்றன. சமயக் கருத்துகளை வளர்க்கும்
    கருவியாக நாடகத்தைச் சமயத் தூதுவர்கள் கையாண்டனர்.

        ஜெர்மனி, ஜப்பான், கீரீஸ், இத்தாலி, பிரான்ஸ் முதலிய
    அனைத்து நாடுகளின் சமயப் பின்னணியில் நாடகமே முதன்மை
    வகிக்கிறது.

        கிரேக்கத்தில் எலுகீனியன் மத விழாவில் ஆடிய
    நடனங்கள் நாடகக் கலையைத் தோற்றுவித்திருக்கின்றன.
    அரிஸ்ட்டோஃபேன்ஸ்
    யூரிப்பிட்டீஸ்

         கிரேக்க நாடக ஆசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்
    எஸ்கிலஸ், சோபக்ளீஸ், யூரிப்பிட்டீஸ், அரிஸ்ட்டோஃபேன்ஸ்
    ஆகிய நால்வருமாவர். கிரேக்க நாடக ஆசிரியர்கள்
    பெரும்பாலும் துன்பியல் நாடகங்களையே விரும்பி எழுதினர்.

        உரோம் நாட்டில் டிமிட்டஸ், பாக்கஸ் போன்ற
    தெய்வங்களுக்கு நடத்தப்பட்ட வழிபாட்டிலிருந்தே நாடகம்
    தோன்றி வளர்ந்தது.

        எகிப்தில் ஒசைரிஸ் என்ற கடவுளுக்குச் செய்யப்படும்
    வணக்கத்திலிருந்து நாடகம் தோன்றியது.

     
  • நாடகத் தோற்றம் பற்றி அறிஞர்கள் கருத்து

  •  
    நாடகத் தோற்றத்தில் சமயம் முதன்மைப் பங்கு
    வகித்தாலும்     நாடக ஆய்வாளர்கள் சில மாற்றுக்
    கருத்துகளையும் முன் வைக்கின்றனர். நாட்டியத்திலிருந்து
    நாடகம் தோன்றியதாக ஹில்லே பிராண்ட் என்பவரும்
    ஸ்டென்கெனோ என்பவரும் கூறுகின்றனர். ‘ஆதிகால மனிதன்
    தன் மனமகிழ்ச்சியை இயற்கையான உடல் அசைவுகளின் மூலம்
    வெளிப்படுத்தினான்.     அதுவே     பின்னர்     நாடகமாக
    மாற்றமடைந்தது’ என்று ஹில்லே பிராண்ட் கூறுகிறார்.
     
    1.2.1 உலகில் நாடகத்தோற்றம்

        போலச் செய்தலின் கலை வெளிப்பாடான நாடகம், உலகின்
    பல பகுதிகளில் ஒரே காலத்தில் தோன்றியிருக்க வேண்டும்.
    நாடகம் இந்த நாட்டில்தான் முதலில் தோன்றியது என்று எந்த
    நாடும் தனி உரிமை கொள்ள முடியாது. காரணம், கலை
    உணர்ச்சியும், விளையாட்டு உணர்ச்சியும் மனித குலத்துக்குப்
    பொதுவானது.

        இருப்பினும் வடிவ அடிப்படையிலும்     அமைப்பு
    அடிப்படையிலும் நாடகம் முதன்முதலில் எந்த நாட்டில்
    கட்டமைக்கப்பட்டது என்பதை அறியலாம்.

        நாடக ஆய்வாளர் தா.ப.சுப்பிரமணியன் என்பவர், எகிப்து
    நாட்டில்தான் நாடகம் முதலில் வடிவமைக்கப்பட்டது என்கிறார்.
    எகிப்தியப் பிரமிடுகளிலிருந்தும் சவக் கல்லறைகளிலிருந்தும்
    நாடகங்கள் இருந்ததற்கான 55 சான்றுகள் கிடைத்ததாக
    மாஸ்பரோ என்னும் நாடக ஆய்வாளர் கூறுகிறார். இவற்றின்
    காலம் கி.மு. 3000 ஆகும்.

        எகிப்து மன்னர்களின் முடிசூட்டு விழாக்களின்போது, இந்த
    நாடகங்கள் நடித்துக் காட்டப்பட்டன. நோயாளிகளைக்
    குணப்படுத்தும் சாந்திக் கூத்துகளாகவும் இவை நடிக்கப்பட்டன.

    1.2.2 இந்தியாவில் நாடகத் தோற்றம்

        உலக நாடுகளில் காணப்படுவதுபோல் இந்தியாவிலும்
    நாடகக்கலை தெய்வத்தொடர்பு உடையதாகவே காணப்படுகிறது.
    வட இந்தியர்கள் நாடகக் கலையின் தந்தையாகப் பரத
    முனிவரைக் குறிப்பிடுகின்றனர்.

        தேவர்களின் கண்களுக்குக் காட்சி விருந்து படைக்க
    வேண்டும் என்று தேவேந்திரன் கருதுகின்றான். படைப்புக்
    கடவுளான     நான்முகனிடம்     தன்     விருப்பத்தைத்
    தெரிவிக்கின்றான். நான்முகனும் திரிபுரதகனம் என்னும்
    நாடகத்தை அவர்களுக்காக உருவாக்குகின்றான்.

        அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இடையே நடைபெறும்
    போரைச் சித்திரிப்பது திரிபுரதகனம். இந்த நாடகத்தில்
    சிவபெருமான் திரிபுரத்தை எரித்து நடனமாடினார். இதைக்
    கண்குளிரக் கண்டுகளித்த பரதமுனிவர் உலக மக்களுக்காக
    அதைக் கொண்டு வந்தார் என்பது புராண வரலாறு.

     
  • ஒரு மாற்றுக் கருத்து

  •  
        சமயப் பின்னணியிலேயே இந்திய நாடகம் விளக்கம்
    பெற்றாலும் ஒரு மாற்றுக் கருத்தை எண்ணிப் பார்க்கலாம்.

        மனிதர்களிடம்     இயல்பாக     நிறைந்திருக்கும்
    மகிழ்வுணர்ச்சியும், விளையாட்டு உணரச்சியும், போலச் செய்தல்
    உணர்ச்சியும்     நடனமாகவும்     நாடகமாகவும்     மாறி
    வளர்ந்திருக்கலாம். இவ்வாறு எண்ணத் தூண்டுவதற்குரிய
    காரணங்கள் இரண்டு.

        மேலை நாட்டினைப்போல் இந்தியாவில் துன்பியல்
    நாடகத்துக்குத் தோற்றுவாய் இல்லை.

        இந்தியாவின் பல பகுதிகளில் உழைக்கும் மக்களின்
    பொழுதுபோக்கில் பிறந்த ஆடல் பாடல் ஆகியவையே
    இசைப்பாட்டு நடனங்களாக உருவெடுத்துள்ளன.

     
  • இந்திய நாடகத் தோற்றப் பின்னணி

  •  
        அசாம் மாநிலத்தில் அங்கிய நாடக் என்னும் இசை
    நடனம் மகிழ்ச்சிப் பின்னணியை உடையது.

        கீர்த்தன்ய நாடக் என்னும் இசை நடனம் மெசில்லா
    என்னும் பகுதியில் வழக்கத்தில் இருந்திருக்கிறது.

        மணிப்பூரில் மணிப்புரி நடனம் வழக்கத்தில் இருக்கிறது.

        வங்காளத்தில் பல்வகை இசைப்பாட்டு நாடகங்களே
    தொடக்கத்தில் நடத்தப் பெற்றன. இன்றும் இசைப்பாட்டு
    நாடகங்கள் அங்கும் சிறப்புற நடத்தப்படுகின்றன.

        ஒரிசா மாநிலத்தில் பல பகுதிகளில், ஜாத்திரா என்னும்
    இசை நாடகம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

        காஷ்மீர், பஞ்சாப், சிந்து, இராஜஸ்தான், குஜராத் ஆகிய
    மாநிலங்களில் இசை நாடகங்களே நடத்தப்படுகின்றன.

        ஆந்திர மாநிலத்தில் வீதி நாடகமும்,கர்நாடக மாநிலத்தில்
    யட்சகானமும், கேரளத்தில் கதகளியும், தமிழகத்தில்
    தெருக்கூத்தும் இசைப்பாட்டு நாடக வடிவங்களே ஆகும்.
     

    கதகளி
                            
         இவை அனைத்தும் எதைக் காட்டுகின்றன? நாடகத்
    தோற்றத்தில் தீவிரமான சமயப் பின்னணி உள்ளது
    என்பதைவிடவும் உழைப்பின் களைப்பைப் போக்கும் மகிழ்ச்சிப்
    பின்னணியே அதிகமாக இருக்கிறது என்பதைத் தானே
    காட்டுகின்றன.
    தெருக்கூத்து

    Tags   :

    புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 19:35:57(இந்திய நேரம்)