Primary tabs
சங்க இலக்கியத்தில் உள்ளுறை, இறைச்சி மூலம் மனித
வாழ்க்கை சித்திரிக்கப்பட்டிருந்தது. பிறகு உவமை, உருவகம்
ஆகியவை கவிதைகளில் பயன்படுத்தப்பட்டன. புதுக்கவிதையில்
வடிவமே உத்தியாக வெளிப்படுத்தப்படுகிறது.
ரத்தக்களரியாய்
வெட்டுண்ட
தருப்பூசணிக் கீற்றுகளைச் சுற்றி
இறகு முளைத்த விதைகளாய்
ஈ ஈ
ஈ ஈ (தமிழில் புதுக்கவிதை, ப. 272)
என்று ஈ பறப்பதுபோல எழுதப்பட்டிருக்கிறது.
படிமம் என்பது கற்பனையின் விளைவு எனப் பிரமிள்
கூறுகிறார்.
சிந்தனை, கற்பனை இரண்டும் இணைய, கவிதையில்
ஆழமும், பொருட்செறிவும் கிடைக்கின்றன. உதாரணமாக, பிரமிள்
எழுதிய ‘விடிவு’ என்ற கவிதை முதல் படிமக்கவிதையாக
இருப்பதைப் படித்துணரலாம்.
விடிவு.
பூமித்தோலில்
அழகுத் தேமல்
பரிதி புணர்ந்து
படரும் விந்து
கதிர்கள் கமழ்ந்து
விரியும் பூ
இருளின் சிறகைத்
தின்னும் கிருமி
வெளிச்ச சிறகில்
மிதக்கும் குருவி (பிரமிள்கவிதைகள், ப. 14)
இக்கவிதையில் இரவைக் கிழித்து வெளிச்சம் புலருகிறது. மரத்தின்
மீது வெளிச்சம் படருகிறது. மரநிழலுக்குள் வெளிச்சம்
ஊடுருவுகிறது. அது பூமியில் படுகிறது. பூமியாகிய உடலில் தேமல்
அழகாகக் காட்சி தருகிறது. அதாவது பாதி இருளும் பாதி
வெளிச்சமும் தேமலாகப் படிமப் படுத்தப்படுகிறது. கரு உடலில்
தேமல் (வெள்ளைத் தழும்பு) பளிச்சென்று தெரியும்.
உவமானம் ஓர் உவமேயத்திற்குத் திரும்ப திரும்ப ஒப்பீடாக
வருவதும், ஒப்பீடு செய்கிறபோது உவமானத்தை மட்டும்
குறிப்பிட்டுவிட்டு உவமேயத்தைக் குறிப்பிடாமல் உணர்த்துவதும்
குறியீடாகும்.
தீப மரத்தின்
தீக்கனி உண்ண
விட்டில் வந்தது
கனியே
விட்டிலை உண்டது. (அப்துல்ரகுமான், பால்வீதி)
என்ற கவிதையில் தீபத்தை மரமாக உருவகப்படுத்துகிறார்.
தீயைக் கனியாகப் பார்க்கிறார். தீயில் விட்டில் பூச்சி விழுந்து
இறக்கும். ஏவாள் என்ற விட்டில் தீக்கனி உண்டு இறந்த செய்தி
குறியீடாகச் சொல்லப்பட்டுள்ளது. இதில் உவமானம் தீக்கனி
விட்டிலை உண்டது. உவமேயம் ஏவாள். இந்தச் செய்தி
மறைமுகமாகச் சொல்லப்பட்டுள்ளது.
- ஹைக்கூ கவிதைகள்
கருதப்படும் ஹைக்கூ, ஜப்பானில் 17ஆம் நூற்றாண்டில்
தோன்றி வளர்ந்தது. ஏழு அசைகள் கொண்ட மூன்று வரிகளில்
அது அமைகிறது. உலக மொழிகள் பலவற்றிலும் அதை ஒத்த
கவிதை படைக்கும் முயற்சி நிகழ்ந்தது. தமிழிலும் அந்த முயற்சி
வளர்ந்து பரவி வருகிறது. ஏதேனும் ஓர் இயற்கைப் பொருள்
அல்லது நிகழ்வு கவிஞன் மனத்தில் ஏற்படுத்திய உணர்வுச்
சலனத்தைச் சொல்லில் வடிப்பது ஹைக்கூ ஆகும். கீழ்த்திசை
நாடுகளில் பரவியிருந்த ஸென் புத்த சமயத்தின் ‘எளிமைக்
கோட்பாட்டிலிருந்து’ பிறந்தது இக்கவிதை வடிவம்.
தமிழிலும் பிறமொழிகளிலும் அரசியல், சமூகம் மற்றும்
செயற்கைப் பொருள்களே மிகுதியாக ஹைக்கூவின் பாடுபொருள்
ஆகின்றன. ஏழு அசைகள் என்ற வடிவ அமைதியும் பின்பற்றப்
படுவதில்லை.
தி,லீலாவதி சிறந்த ஜப்பானிய ‘ஹைக்கூ’ கவிதைகளைத்
தேர்ந்தெடுத்து நூலாக வெளியிட்டார். அறிவுமதியின் ‘புல்லின்
நுனியில் பனித்துளி’ முதன் முதலாக வெளிவந்த தமிழ் ஹைக்கூ
கவிதைத் தொகுதி ஆகும். அதிலிருந்து ஒரு கவிதை:
உடைந்த வளையல் துண்டு
குளத்தில் எறிந்தேன்
அட.... எத்தனை முழு வளையல்கள்
நிழலில் நின்றவன்
அண்ணாந்து பார்த்தான்
மரத்தின் தலை வெய்யிலில்
- எஸ். சண்முகம்
அகிம்சைப் பிரசங்கம்
குழல்விளக்கின் அருகில்
அசையும் எண்ணெய்த் தாள்
- அறிவுமதி
உடைத்த தேங்காய்க்குச்
சிதறிவிழுந்தார்கள்
சிறுவர்கள்
- சுரேசன்
தூண்டிலை இழுத்தேன்
மீன் கிடைக்கவில்லை. அடடா
குளத்தில் அழகிய ஓவியம்
- கழனியூரன்
அடுத்தவர் நாட்குறிப்பு
படிப்பது தவறு
காற்றே புரட்டாதே
- இக்பால்
- ஈழக் கவிதைகள்
அரசியல் சார்புடன் இயக்கமாக வளரத் தொடங்கியது.
ஈழமண்ணில் நடந்துவரும் இனப்படுகொலையின் குரூரம்
கவிதைமொழியாகியிருக்கிறது.
சண்முகம் சிவலிங்கம், சிவசேகரம், சேரன்,வ.ஐ.ச.ஜெயபாலன்
போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். வ.ஐ.ச. ஜெயபாலன்,
சிவனொளி பாத மலையும் நடுங்கி
இந்த சமுத்திரக் குழிகளில் பதுங்க
ஒரு நாள் இங்கு மானிடம் விழிக்கும்
எல்லோர் கைகளின் விலங்கும் நகரும்....
பறவைகள் போலவும் பூக்களைப் போலவும்
எல்லோர் இருப்பும் சுதந்திரம் எய்தும்....
என்று இனவிடுதலையை, மானுடவிடுதலையை, நம்பிக்கையோடு
பாடுகிறார். தமிழ் நவீனக் கவிதைகளில் ‘போர்’ ஒரு புது
வடிவத்தைத் தந்திருக்கிறது. புதுக்கவிதையின் தளமாகிய போரும்
அதன் உக்கிரத்தில் அழிந்து போகும் மானுடமும் முக்கியமாகக்
கருதப்படுகின்றன.