Primary tabs
பாரதியாரின் கவிதைகளில்
ஒரு பகுதியை இங்கே
பார்ப்போம்.

கும்மியடி! தமிழ்நாடு முழுவதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப்பிடித்த பிசாசுகள்
போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி!
ஏட்டையும் பெண்கள் தொடுவது
தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.
கற்பு நிலையென்று சொல்லவந்தார்
இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்
வற்புறுத் திப்பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்.
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி.
காதலொருவனைக் கைப்பிடித்தே, அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச்செய்து வாழ்வமடி!
பாரதியாரின் கற்பனையில் பெண் விடுதலை வெளிப்படுகிறது.
அடிமை
இருள் நீங்கப் பெண்விடுதலை அவசியம் எனப்பாடுகிறார்.
அப்படிப் பாடும்போது, பெண்களின் விளையாட்டுகளில் ஒன்றான
‘கும்மியடித்தலை’ மனத்தில் நிறுத்தி, பெண்ணடிமை
விலங்கொடிக்கக் கும்மியடி என்று கூறுகிறார். அதாவது இந்தப்
பாடல் முழுக்க முழுக்கப் பெண்கள் விடுதலையை மையமிட்ட
பாடலாகும். பொதுவாகப் பெண்கள் பொழுது
போகவில்லையென்றால் ஏதேனும் ஒரு செய்தியை உள்ளடக்கி,
கும்மி விளையாட்டு விளையாடுவது வழக்கமாகும். பெண்கள்
விடுதலைக் கும்மி என்ற தலைப்பில் அமைந்த இந்தப்பாடலில்,
இந்த விளையாட்டின் மூலம், சமூகத்தில் பெண்கள் எப்படி
இருக்கிறார்கள்; அவர்கள் எத்தகைய சக்தி படைத்தவர்கள்
என்பதை விரிவாக எடுத்துக் கூறுகிறார். பெண்களின் மீதான
அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறை ஆகியவற்றை ஒழித்துவிட
வேண்டும் என்ற வேட்கை இங்கே கவிதையாகியிருக்கிறது. இந்தப்
பாடலின் முக்கியத்துவம் என்னவென்றால் இந்தியநாடு
ஆங்கிலேயர்கள் பிடியில் சிக்குண்டு அடிமைப்பட்டுக் கிடந்த
காலத்தில் பெண்களும் அடிமைகளாய் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலை மாறவேண்டும் என்று விரும்பிய பாரதியார் பெண்கள்
விடுதலையே நாட்டுவிடுதலை, மானுட விடுதலையின் வேர்
பெண்விடுதலையே என்ற கருத்தை மையமாகக் கொண்டு,
அவர்கள் விடுதலை அடைந்ததாக எண்ணிப் பாடியிருப்பது
அவரின் தொலைநோக்குப் பார்வைக்குச் சான்றாகும். இதுவே
இப்பாடலின் சிறப்பாகும்.