தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

2.2-தத்துவங்களின் தொடக்கம்

2.2 தத்துவங்களின் தொடக்கம்


    தமிழகத்தில் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் பல்வேறுபட்ட
சமயங்கள் வழக்கத்தில் இருந்திருக்கின்றன. அக்காலத்தில்
தோன்றிய சமணக் காப்பியமான சிலப்பதிகாரமும், பௌத்தக்
காப்பியமான மணிமேகலையும் சிறந்து விளங்கியிருக்கின்றன.
அதுமட்டுமல்லாது வைணவ சமயம், ஆசீவகசமயம்,
நிகண்டவாத சமயம், சாங்கிய சமயம்
போன்ற சமயங்களும்
இருந்திருக்கின்றன எனத் தெரிகிறது. இவ்வாறு பல சமயங்கள்
திகழ்ந்தமைக்குக் காரணம் அச்சமயங்களுக்குள் இருந்த கடவுட்
கொள்கையின் வேறுபாடுகள் ஆகும். பல்வேறு கொள்கைகளைக்
கொண்ட பல்வேறு சமயங்களும் ஒன்றுக்கொன்று தத்துவ
வாதங்களை     நிகழ்த்தியிருக்கின்றன. இந்த வாதங்கள்
பொதுமன்றங்களில் பட்டிமண்டபங்களாக நிகழ்ந்திருக்கின்றன.
ஒவ்வொரு சமயத்தாரும் தத்தம் சமயத்தின் கருத்துகளை
எடுத்துக்கூறி அவைகளே சிறந்தவை என வாதிட்டிருக்கின்றனர்.
மணிமேகலையில் சமயக்கணக்கர் திறம் கேட்ட காதை
என்று ஒரு பகுதி உள்ளது. அதில் இச்செய்திகள் விரிவாகக்
கூறப் பெற்றுள்ளன.

    மணிமேகலையில் இடம் பெற்ற சமயவாதிகளில் ஒருவர்
சைவ சமயவாதியாவார். அவரும் தன்னுடைய சமயக்
கருத்துகளை எடுத்துக் கூறியதாக நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.
இச்செய்தி மூலம் வழிபாட்டு நிலையிலிருந்த பக்தி இயக்கம்
தத்துவ நிலைக்கு வளர்ச்சியடைந்திருக்கிறது என்பது
உறுதியாகிறது.     சைவவாதி தன்னுடைய தத்துவமாக
மணிமேகலையில்

    “முழுமுதற் கடவுள் ஈசனே, அவன் ஞாயிறு, திங்கள்,
யமன், மண், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய எட்டு
வகையிலும் கலந்திருப்பவன். யாவற்றையும் படைப்பவன்.
திருவிளையாடல் புரிகின்றவன். எல்லாவற்றையும் படைத்து,
காத்து, அழிப்பவன். தன்னைவிட ஒப்பான, உயர்வான தெய்வம்
வேறு ஏதும் இல்லாதவன்” (காதை-27) என்று கூறுகிறான்.

    இக்கூற்றிலிருந்து     சைவத்திற்கென்று     கொள்கை
வரையறுக்கப்பட்டமை புலனாகின்றது.

    சிலப்பதிகாரம் ஐந்தெழுத்து மந்திரத்தின் சிறப்பை
எடுத்துக் காட்டுகிறது. 11ஆவது காதையான காடுகாண்
காதை
யில் கண்ணகியோடு கோவலன் செல்லும் பொழுது,
ஐந்தெழுத்து மந்திரத்தையோ, எட்டெழுத்து மந்திரத்தையோ
கூறலாம் என்று சொல்லும் செய்தி இடம் பெற்றுள்ளது.

    அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும்
    வருமுறை எழுத்தின் மந்திரம் இரண்டும்
    ஒருமுறை யாக உளம்கொண்டு ஓதி

என்பது அச்செய்தியாகும். இதன்மூலம் மந்திரங்களைச்
சொல்லுகின்ற வழக்கம் பக்தி இயக்கத்தின் ஒரு கூறாக
வளர்ந்தமையும் புலனாகின்றது.

2.2.1 பதிகத் தொடக்கம

    காப்பிய காலத்தில் கோயிலாகவும், வழிபாடாகவும்,
தத்துவங்களாகவும் வளர்ந்து வந்த பக்தி இயக்கம் பாமாலை
பாடுகிற இயக்கமாகக் காரைக்கால் அம்மையார் காலத்தில்
வளர்ந்திருக்கிறது. சைவ சமய அருளாளர்களில் மிகவும்
காலத்தால் முற்பட்டவர் காரைக்கால் அம்மையார்.
இவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பெரிய புராணம் சிறப்பாக
எடுத்துக் கூறுகிறது. இவருடைய காலம் கி.பி. நான்காம்
நூற்றாண்டின் இறுதி, ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கமாகும்.
இவர் சிவபெருமானை நோக்கிப் பாடல்களைப் பாடினார்.
புனிதவதியார் என்ற இயற்பெயரைக் கொண்ட காரைக்கால்
அம்மையார் சிவபெருமானின் திருவருள் பெற்றவர்.
இவருடைய கணவர் இவரைப் பிரிந்து வாழ முடிவு செய்தபின்
முழுமையாகத் தன்னை இறைப்பணியில் ஈடுபடுத்திக்
கொண்டவர். இறைவன் அருளால் பேய்வடிவம் பெற்றுக்
கயிலையை நோக்கி யாத்திரை தொடங்கினார். அவ்வாறு
யாத்திரை செல்லும்பொழுது பாடிய பாடல்கள்தான் 100
பாடல்களைக் கொண்ட அற்புதத் திருவந்தாதியாகும். இதில்
இறைவனுடைய     பெருமைகளையும், தத்துவங்களையும்
பாடற்கருத்துகளாக வைத்துப் பாடியுள்ளார். அதுபோலக்
கயிலைக்குச் செல்லும்பொழுது திருஇரட்டை மணிமாலை
என்ற 20 பாடல்களைப் பாடினார். திருவாலங்காடு என்ற
ஊருக்கு வந்தபொழுது அவர் பாடியதே திருவாலங்காட்டு
மூத்த திருப்பதிகம்
ஆகும். இது இரண்டு பகுதிகளை
உடையது. ஒவ்வொரு பகுதியிலும் 11 பாடல்கள் உள்ளன.
முதல் பத்துப் பாடல்கள் இறைவனின் பெருமைகளைக்
கூறுவதாக அமைந்துள்ளன. 11ஆவது பாடல் பாடியவர்
பெயரையும், முதற்பத்துப் பாடல்களைப் பாடினால் என்ன
பயன் கிடைத்திடும் என்பதையும் குறிப்பிடுகிறது. இவ்வாறு
பத்துப் பாடல்கள் பாடுகின்ற பதிக அமைப்பைப் பக்தி
இயக்கத்திற்கு முதன் முதலாகத் தந்தவர் அம்மையாரே
ஆவார். இதைப் பின்பற்றியே பின்னர் வந்த தேவார
ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பதிகங்களைப் பாடினர்.
இப்பதிகங்கள் தத்துவக் கருத்துகளையும் இறைவனின்
பெருமைகளையும் எளிமையாகத் தந்துள்ளன.

    சிவபெருமான் சந்திரனைச் சூடியிருப்பது, பாம்பினை
அணிந்திருப்பது, கங்கையைத் தாங்கியிருப்பது, புலித்தோல்
உடுத்தியிருப்பது ஆகிய புராண வரலாற்றுச் செய்திகளை
அம்மையார் குறித்துள்ளார். அத்துடன் இறைவன் உலகப்
பொருள்களில் கலந்திருக்கின்றான்; தோற்றுவித்து அழித்துக்
காக்கின்றான்; உயிர்களோடு இரண்டறக் கலந்துள்ளான்;
உணர்தற்கு அரியவன் என்பன போன்ற தத்துவக்
கருத்துகளையும் தன் பாடல்களில் இடம்பெற வைத்துப் பக்தி
இலக்கியத்தைக் காரைக்கால் அம்மையார் வளர்த்தார் எனலாம்.

2.2.2 திருமந்திரச் சிறப்பு

    பக்தி இயக்கம் தத்துவ வழியில் வளர்ந்த பொழுது
மிகவும் குறிப்பிடத் தக்கது திருமந்திர நூலின் தோற்றமாகும்.
திருமந்திர நூலைத் தந்தவர் திருமூலர் ஆவார். முழுக்க
முழுக்கச் சைவத் தத்துவங்களைப் பல்வேறு பகுதிகளாகத்
திருமூலர், திருமந்திரத்தில் தந்துள்ளார். பின்னால் தோன்றிய
சைவ சமயத்தின் தத்துவங்களைக் கூறும் சாத்திர
நூல்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்குவது திருமந்திரம்
ஆகும். சைவ சமயத்தின் அடிப்படைத் தத்துவமான பதி, பசு,
பாசம் என்ற மூன்றை வகுத்துக் காட்டிய முதல் நூல்
இதுவாகும். இந்த முப்பொருளும் அநாதி (தோற்றம் அறியப்
பெறாதது)     என்பதைத் திட்டவட்டமாக அறிவித்தது
திருமந்திரமேயாகும்.     தத்துவங்களோடு    தவத்தினுடைய
சிறப்பையும், யோக முறைமைகளைக் கடைப்பிடிப்பதையும்
திருமந்திரம் எடுத்துக் கூறுகிறது. எனவே தத்துவ வளர்ச்சியோடு,
தவம் மற்றும் யோகத்தையும் சுட்டிக் காட்டுவதால் திருமந்திர
நூலின் மூலம் பக்தி இயக்கம் மேலும் வளர்ந்தமை தெரிய
வருகிறது.

தன்மதிப்பீடு : வினாக்கள் - I

1.
பக்தி இயக்கம் என்றால் என்ன?
2.
சமயக்கணக்கர் திறம் உரைத்த காதையில் இடம்பெற்ற
சமயவாதிகள் யாவர்?
3.
பதிக அமைப்பைத் தோற்றுவித்தவர் யார்? அவர்
பாடிய நூல்கள் யாவை?

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:02:36(இந்திய நேரம்)