தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 1.0-பாட முன்னுரை

  • 1.0 பாட முன்னுரை

     
       ஆண்மகன் ஒருவனும் பெண்மகள் ஒருத்தியும் ஒருவரை ஒருவர்
    விரும்பி, கூடி இன்புற்று வாழ்வர். ஆண்மகன் ‘தலைவன்’ எனவும்
    பெண்மகள் ‘தலைவி’ எனவும் வழங்கப்படுவர். திருமணம்
    ஆனபின்னர், தலைவன், கல்வி கற்றல், பொருள் ஈட்டல், நாட்டுப்
    பாதுகாப்பிற்காகப் போரிடுதல், முதலிய காரணங்களுக்காகத்
    தலைவியைப் பிரிந்து செல்வான். பணி முடிந்த பின்னர்
    மீண்டும் தலைவியிடம் வருவான். அப்பொழுது தலைவி மிகவும்
    மகிழ்ச்சி அடைவாள் . சில நேரங்களில் பிற மகளிர் தொடர்பால்
    பிரிந்து சென்றும், மீண்டும் தலைவியிடம் வருவான் தலைவன்.
    தலைவி அவன் மீது கோபம் கொள்ளுவாள். இருவருக்குள்ளும்
    உடன்பாடு ஏற்பட்டு மீண்டும் கூடுவார்கள். இத்தகைய வாழ்க்கை
    நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டு தமிழ் அகஇலக்கியப் பாடல்கள்
    அமைந்துள்ளன.இத்தகையதமிழ் இலக்கிய மரபைப் பின்புலமாகக்
    கொண்டு திருவள்ளுவர், காமத்துப்பாலை அமைத்துள்ளார்.

        திருக்குறளின் மூன்றாவது பாலாக அமைந்திருப்பது காமத்துப்பால்.
    இதில் இடம்பெற்றுள்ள 25 அதிகாரங்களும் தலைவன்,
    தலைவியர்களுக்கு இடையே உள்ள காதல் வாழ்க்கையைக்
    கூறுகின்றன. இது பண்டைய தமிழ் அக இலக்கிய மரபைப்
    பின்புலமாகக் கொண்டு அமைந்துள்ளது. களவு - கற்பு எனும்
    வாழ்க்கை நிகழ்ச்சிகள் தமிழ்நெறி என்று பாராட்டப் பெறுபவை.
    அகப்பொருளின் இந்தச் சிறப்புகளைக் கூறும் அக இலக்கிய மரபு
    திருக்குறளில் இடம் பெற்றுள்ளது. அக்கருத்துகள் இப்பாடத்தில்
    தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:48:31(இந்திய நேரம்)