தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 2.7-தலைவியின் துன்பம்

  • 2.7 தலைவியின் துன்பம்

    E


        தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து,
    விரும்பிக் காதலர்களாக வாழ்கின்றனர். பின்னர் திருமணம் செய்து
    கொள்கின்றனர். ஆனால் இவ்விரு வகையான வாழ்க்கையிலும்
    பிரிவு     என்பது     இயல்பாக உள்ள ஒன்று. காதல்
    வாழ்க்கையில் காதலர்களின் ஒரு நாள் சந்திப்பிற்குப்பின்
    மறுநாள் சந்திப்பது வரையிலும் சிறு பிரிவு ஏற்படுகிறது. திருமண
    வாழ்க்கையில் வெளியூர் செல்லும் பொழுது நெடுநாள் பிரிவு
    ஏற்படுகிறது. இப்பிரிவுகளால் மிகவும் பாதிக்கப்படுபவள் தலைவியே.


    2.7.1 தலைவியின் பிரிவுத் துன்பம்


        காதல் வாழ்வாகிய களவு ஒழுக்கத்தில், நாள்தோறும் சந்தித்து
    மகிழ்ந்தார்கள் காதலர்கள். சிறிது காலம் தாழ்த்தி வந்தால் கூட,
    தலைவனுக்கு என்ன ஆனதோ? அவன் வருகின்ற வழியில்
    தொல்லை தரும் விலங்கினங்கள் உண்டே; அவற்றால்
    தலைவனுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என அஞ்சுவாள்
    தலைவி. எனவே, தனது ஐயங்களையெல்லாம், தன் தோழியிடம்
    கூறுவாள். தோழி ஆறுதல் கூறுவாள். ஆனால் இப்பொழுது
    பலநாள் தன்னைவிட்டு, தலைவன் பிரிந்து செல்லவிருக்கிறான்.
    ஒருநாள், ஒருசில மணிநேரம் காலம் தாழ்த்தி வருவதையே
    பொறுத்துக் கொள்ள இயலாத தலைவிக்கு, இப்பொழுது நிகழ
    இருக்கும் பிரிவை நினைக்கும் பொழுது மனம் மிகவும்
    வேதனைப்படுகிறது. அந்த வேதனையை அவன் மீது வரும் கோபம்
    போல் வெளிப்படுத்துகிறாள் தலைவி.




    செல்லாமை உண்டேல் எனக்குஉரை மற்றுநின்
    வல்வரவு வாழ்வார்க்கு உரை



    (குறள்: 1151)


    என்று கூறுகிறாள். தலைவன், பொருள், கல்வி, அரசுக்கு உதவி
    எனும் பல காரணங்களால் தலைவியைப் பிரிய நேரிடும். இதனைத்
    தலைவி அறிவாள். இருப்பினும் தலைவனது பிரிவால் எந்த
    அளவுக்கு அவள் பாதிக்கப்படுவாள் என்பதனை அவள் தன் கூற்று
    மூலம் வெளிப்படுத்துகிறாள். பிரிவினால் ஏற்படும் தலைவியின்
    உள் உணர்வுகளையெல்லாம் ஒன்று திரட்டி, இரண்டே வரிகளில்
    மிகவும் அழகாக எடுத்துரைக்கிறார் வள்ளுவர்.

        உன்னைப் பிரிந்து என்னால் ஒரு கணம் கூட உயிரோடு இருக்க
    முடியாது. உன் பிரிவை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாது.
    எனவே, நீ, உன் பணிமேற் சென்று மீண்டும் இங்கு வரும் வரையில்
    நான் உயிரோடு இருக்க மாட்டேன். உன் பிரிவுத் துன்பத்தினால்
    நான் இறந்து விடுவேன். ஆகவே, மீண்டும் வரும் பொழுது இங்கு
    யார் உயிரோடு இருப்பார்களோ, அவர்களிடமே உம் வரவைப்
    பற்றிச் சொல்லுங்கள் என்று குறிப்பிடுகிறாள்.

        பிரிவுத் துன்பத்தையும், பிரிவினால் வாடும் தலைவியின் மன
    வேதனைகளையும் இதைவிடச் சிறப்பாகச் சொல்ல இயலுமா?

        தலைவியை விட்டுப் பிரிந்து செல்லும் தலைவன், ‘நான்
    சீக்கிரம் வந்து விடுவேன் கவலைப்படாதே’ என்று வாக்குறுதி
    கொடுக்கிறான். பிரிந்து செல்லும் எல்லோரும் சீக்கிரம் வருவேன்
    எனக் கூறுவது இயல்புதானே! தலைவன் இதற்கு விதிவிலக்கா?

        தலைவனின் இந்தச் சொல் திறமையை நன்கு அறிவாள் தலைவி.
    எனவே, நீங்கள் சீக்கிரம் வருவேன் என்று சொல்வதெல்லாம்
    பொய். நான் நம்பமாட்டேன். உங்களை நான் நன்கு அறிவேன்.
    நீங்கள் உங்கள் பணியை முடிக்காமல் திரும்பி உடனே
    வரமாட்டீர்கள். எனவே, விரைவாக வருவேன் என்பதை நான்
    நம்புவதற்குத் தயாராக இல்லை. அதை இன்னொருவரிடம்
    சொல்லுங்கள் என்னிடம் சொல்லாதீர்கள் என்ற தன்மையைில்
    ‘மற்று நின் வல்வரவு வாழ்வார்க்கு உரை’ என்று நயமாகக்
    கூறுகிறாள் தலைவி.

        கற்பியலின் முதல் அதிகாரத்தின், முதல் பாடலாக அமைந்துள்ள,
    இப்பாடல், தலைவன் தலைவியிடையே காணப்படும் அன்பின்
    பிணைப்பையும், பிரிய முடியாத வகையில் இரண்டறக் கலந்து
    அவர்கள் வாழ்வதையும் மிகச் சிறப்பாக வெளியிடுகிறது. இதில்
    தலைவன் மீது தலைவி கொண்டுள்ள காதலும், ஒரு கணம் கூட,
    அவனைப் பிரிய முடியாத அவளது உள்ளப்பாங்கும் சிறப்பாக
    வெளியிடப்படுகின்றன.


    பயில்முறைப் பயிற்சி - III

        வள்ளுவரின்     திருக்குறளில் ஒரு     சொல்லை
    எடுக்கவோ, தொடுக்கவோ முடியாது என்பார்கள்.
    அவ்வளவு துல்லியமாகத் திட்டமிட்டுச் சொற்களைப்
    பயன்படுத்தியுள்ளார் வள்ளுவர். இந்தக் குறளில்
    ‘வல்வரவு’ என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.
    ‘வரவு’ என்று மட்டுமே சொல்லியிருக்கலாம். அது
    போதும் இல்லையா? ஆனால், ‘வல்வரவு’ என்று ஏன்
    சொல்லவேண்டும்? சிந்தித்துப் பாருங்கள்!.


    2.7.2 பொழுது கண்டு வருந்துவது


        காதலர்களின் பிரிவில் அவர்களைப் பெரிதும் துன்புறுத்துவது
    மாலைப்பொழுதும், இரவு நேரங்களும் ஆகும். பிரிவுத்
    துன்பத்தால், தலைவி இரவு முழுவதும் தூங்கவில்லை. தூங்காமல்
    தலைவனையே நினைத்துக் கொண்டிருக்கிறாள். ஒவ்வொரு
    நொடியும் தலைவன் பிரிவை அவள் உணருகிறாள். எனவே, இரவு
    கழிவது அவளுக்கு மிகவும் கடினமாக இருக்கின்றது.

        தலைவனின் நினைவினால் இரவு முழுவதும் தலைவி
    தூங்கவில்லை. உலகிலுள்ள எல்லோரையும் தூங்க வைக்கும் இரவும்
    தூங்காமல் இருக்கிறது. தூங்கவேண்டிய நேரத்தில் தூங்காமல்
    தன்னைப்போல் இருக்கும், இரவின் மீது தலைவிக்கு இரக்கம்
    வருகிறது. எனவே, இரவுக்கும் தான் துணையாக இருப்பதாகக்
    கூறுகிறாள் தலைவி.




    மன் உயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா
    என் அல்லது இல்லை துணை



    (குறள்: 1168)


    (துயிற்றி = தூங்கவைத்து, இரா = இரவு)

        இரவுக்குத் தன்னைத் தவிர, வேறு எந்தத் துணையும் இல்லை
    என்கிறாள் தலைவி. எல்லோரும் தூங்கும் பொழுது
    தூங்கமுடியாமல், தனியாக இருக்கும் தலைவிக்கு யார் துணை?
    இரவுதான் துணை. ஆனால் தலைவியோ, இரவுக்குத்
    தான்துணையாக     இருப்பதாகக் கூறுகிறாள். இரவையும்
    தன்னைப்போன்ற ஒரு பெண்ணாகக் கொண்டு, தன் துன்பத்தை
    அதனுடன் பகிர்ந்து கொள்ளும் தன்மையில் தலைவியின் உள்ளுணர்வை இக்குறள் அருமையாக வெளியிடுகிறது.


    2.7.3 தூக்கமின்மையின் இன்பம்


        தலைவனின் பிரிவினால் பல நிலையில் துன்பம் அடைந்த
    தலைவி, தூக்கம் வராமலும் துன்பம் அடைகிறாள். தலைவன்
    இருந்தாலும் தூங்கமுடியவில்லை, தன்னை விட்டுப் பிரிந்து
    சென்றாலும் தூங்க முடியவில்லை என்று வருந்துகிறாள்.


    வாராக்கால் துஞ்சா, வரின் துஞ்சா ஆயிடை
    ஆர் அஞர் உற்றன கண்



    (குறள்: 1179)


    (வாராக்கால் = வராதபொழுது, வரின் = வரும்பொழுது,
    ஆயிடை = இரண்டுக்கும் இடையில், ஆர் = மிகுதி,
    அஞர் = துன்பம்)

    என் தலைவர், என்னைப் பிரிந்து சென்று வராத நிலையிலும் என்
    கண்கள் தூங்கவில்லை. என்னோடு வந்து இருந்தபொழுதும், அவர்
    ‘எப்பொழுது பிரிந்து சென்று விடுவாரோ’ என்று அச்சத்தினாலும்
    தூக்கம் வரவில்லை. இவ்வாறு இரு நிலையிலும், என் கண்கள்
    அச்சத்தால் துன்பப்படுகின்றன, என்கிறாள் தலைவி.

        தலைவனை எந்தச் சூழலிலும், எப்பொழுதும் என்றும் பிரிய
    விரும்பாத தலைவியின் மன நிலையினை இந்தக் குறள் மிகச்
    சிறப்பாக வெளியிடுகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:52:07(இந்திய நேரம்)